தனக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் என்பதால்'அதானி விவகாரத்தை மத்திய அரசு விவாதிக்க விரும்பவில்லை' சசி தரூர் எம்.பி. பேட்டி

புதுடெல்லி,

அதானி நிறுவனங்கள் மீது அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் சந்தை ஆய்வு நிறுவனம் சமீபத்தில் மோசடிக் குற்றச்சாட்டுகளுடன் வெளியிட்ட அறிக்கை, நாட்டையே அதிர்வில் ஆழ்த்தி உள்ளது.

இது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன. இதை மத்திய அரசு தரப்பில் ஏற்காத நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து 2-வது நாளாக நேற்று அலுவல் எதையும் நடத்த முடியாமல் முடங்கிப்போயின.

‘மத்திய அரசு விவாதிக்க விரும்பவில்லை’

இதையொட்டி காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சசி தரூர் எம்.பி., செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நாடு சந்தித்து வருகிற பிரச்சினைகளை விவாதிப்பதற்கான இடம்தான் நாடாளுமன்றம். இதன் மூலம், எம்.பி.க்களின் அக்கறைகளைப் பற்றியும், எம்.பி.க்கள் எவற்றில் கவனம் செலுத்துகிறார்கள் என்பதைக் குறித்தும் நாட்டு மக்கள் தெரிந்துகொள்ள முடியும்.

ஆனால் துரதிரஷ்டவசமாக மத்திய அரசு இதன் நன்மையை கண்டு கொள்ள வில்லை. எனவேதான் அவர்கள் (அரசில் அங்கம் வகிக்கிறவர்கள்) விவாதங்களுக்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள். இதன் விளைவுதான், நாம் நாடாளுமன்றத்தின் 2 நாட்களை இழந்து இருக்கிறோம்.

அதானி நிறுவனங்களின் விவகாரம் அதிமுக்கியமானது, நாட்டின் மக்களைப் பாதிக்கிறது என்பதால்தான் இது குறித்து விவாதிக்க வேண்டும் என்று அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட்டு விரும்புகின்றன. இது போதுமான முக்கியத்துவம் வாய்ந்த விஷயம், அரசு விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நம்புகின்றன. ஆனால் தனக்கு தர்ம சங்கடமாக அமைகிற எந்தவொரு விஷயத்தையும் விவாதிக்க அரசு விரும்ப வில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையொட்டி சசி தரூருக்கு பதில் அளிப்பதுபோல பா.ஜ.க. எம்.பி. மகேஷ் ஜேத்மலானி பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

மத்திய அரசின் தூண்டுதலால்தான் அதானியின் நிறுவனங்களில் எல்.ஐ.சி., முதலீடு செய்தது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை ஏற்க முடியாது.

இதில் மத்திய அரசு செய்வதற்கு என்ன இருக்கிறது? இதில் மத்திய அரசின் பங்களிப்பு என்ன என்பதை யாரும் கூறவில்லை. எல்.ஐ.சி. என்பது ஒரு தன்னாட்சி நிறுவனம் ஆகும். அவர்கள் சில முதலீடுகளைச் செய்வது என்று தீர்மானித்து செயல்பட்டிருக்கிறார்கள்.

இந்த முதலீடுகளில் தவறுகள் நேர்ந்திருந்தால் இது பற்றி இந்திய பங்குச்சந்தை பரிமாற்ற வாரியம் (செபி) மற்றும் பாரத ரிசர்வ் வங்கிதான் விசாரிக்கும். அவர்கள் விசாரித்து அதன் அறிக்கை வரட்டும். இந்த நிலையில், இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நியாயப்படுத்த முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.