அண்ணாவின் 54-வது நினைவு தினம் | முதல்வர் ஸ்டாலின், தலைவர்கள் அஞ்சலி: திமுக சார்பில் நடந்த அமைதிப் பேரணி

சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 54-வது நினைவு தினத்தை முன்னிட்டு, மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்,அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா உள்ளிட்டோர் நேற்று அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 54-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி திமுக சார்பில் கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது.

சென்னை வாலாஜா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் இருந்து புறப்பட்ட பேரணி, மெரினாகடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தை அடைந்தது. அங்குமுதல்வர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

அமைச்சர்கள் க.பொன்முடி, மா.சுப்பிரமணியன், உதயநிதி ஸ்டாலின், வீட்டு வசதி வாரியத் தலைவர்பூச்சி முருகன், ஜெகத்ரட்சகன் எம்பி, சென்னை மாநகராட்சி மேயர்ஆர்.பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், கட்சியின் செய்தித் தொடர்புதலைவர் டிகேஎஸ்.இளங்கோவன் உள்ளிட்டோரும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். அமைதிப் பேரணியையொட்டி, வாலாஜா சாலை முழுவதும் நேற்று காலைபோக்குவரத்து தடை செய்யப்பட் டிருந்தது.

இதற்கிடையே, அண்ணா நினைவு தினம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: களம் சென்று காணுகின்ற வெற்றிக்கு நம்மையெல்லாம் ஊக்குவிக்கும் தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா நீடுதுயில் கொண்டநாள்.

தம்பி என்று தமிழர்தமைத் தட்டியெழுப்பிய அண்ணனின் நினைவுகளைச் சுமந்து, தம்பிமார் படை அமைதிப்பேரணி சென்றோம். இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்ற அண்ணனின் முழக்கத்தை என்றும் மெய்ப்பிக்க உறுதியேற்போம். தனயனாய் அவர் பெயரிட்ட தமிழ்நாட்டை மேதினியில் உயரக் கொண்டு செல்வோம். இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.

அதிமுக, அமமுக: அதிமுக சார்பில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில், அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், டி.ஜெயக்குமார், பா.வளர்மதி, எஸ்.கோகுலஇந்திரா, பா.பென்ஜமின் உள்ளிட்டோர், மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம், முன்னாள் எம்எல்ஏ ஜேசிடி பிரபாகர், மாவட்டச் செயலாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து, அஞ்சலி செலுத்தினர்.

சசிகலாவும் தனது ஆதரவாளர்களுடன் அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பின்னர், ‘அண்ணாவின் வழியில் பயணிப்போம். தீய சக்திகளை அழிக்க ஒன்றுபடுவோம்’ என உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.

அமமுக சார்பில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அண்ணா படத்துக்கு கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஜி.செந்தமிழன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தேமுதிக: தேமுதிக சார்பில், கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அண்ணா படத்துக்கு கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் கட்சி உயர்மட்டக் குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, தொழிற்சங்க பேரவையின் செயலாளர் காளிராஜன், பொருளாளர் வேணுராம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அண்ணா படத்துக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் சோ.ஆறுமுகம் மலரஞ்சலி செலுத்தினார்.

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலைஅணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.