ஜம்மு – காஷ்மீரில் நடந்துவரும் கட்டடங்கள் இடிப்பு தொடர்பாக பா.ஜ.க-வைச் சாடிய முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி, ஜம்மு – காஷ்மீரில் பா.ஜ.க ஒரு கிழக்கிந்திய கம்பெனிபோல இருக்கிறது என விமர்சித்திருக்கிறார்.
பா.ஜ.க-வை மேலும் கடுமையாகத் தாக்கிப் பேசிய மெகபூபா முஃப்தி, “நம் நாட்டின் அரசியல் சாசனத்தைத் தகர்க்க, பா.ஜ.க தனது பெரும்பான்மையை ஆயுதமாக்கியிருக்கிறது. கருத்து வேறுபாடு மற்றும் நீதித்துறையின் குரலை நசுக்க அவர்கள் ஆயுதமேந்தியிருக்கிறார்கள்.

நீங்கள் காஷ்மீருக்குச் சென்றால், அது ஆப்கானிஸ்தானைப்போல இருப்பதை உணரலாம். காரணம் அங்கு புல்டோசர் இருக்கிறது. அவர்கள் எங்கள் வேலைகள், நிலங்கள் மற்றும் கனிமங்களை எடுத்து வெளியில் கொடுத்துவிட்டார்கள்.
நாட்டில் பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகளுக்கெதிராக அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. மக்களைத் துன்புறுத்துவதற்கு வேறு ஏஜென்சிகள் இருப்பதால் நாங்கள் இன்னும் சிறப்பு அந்தஸ்து கொண்ட மாநிலமாகவே இருக்கிறோம்.

இஸ்ரேல், பாலஸ்தீனத்துடன் என்ன செய்கிறது என்பதிலிருந்து பா.ஜ.க குறிப்பெடுத்ததாக நாங்கள் முன்பு நினைத்தோம். ஆனால், அவர்கள் இப்போது அதை விட்டுவிட்டனர். அவர்கள் தற்போது ஜம்மு காஷ்மீரை ஆப்கானிஸ்தானைப்போல மாற்ற விரும்புகிறார்கள்.

ஜம்மு – காஷ்மீரை நான் பாலஸ்தீனத்துடன் ஒப்பிடுகிறேன். ஏனெனில் பா.ஜ.க இங்கு ஒரு கிழக்கிந்திய கம்பெனிபோல இருக்கிறது… ஏன் நாடு முழுவதும்கூட. அதோடு பாலஸ்தீனம் இன்னும்கூட சிறப்பாக இருக்கிறது. ஏனெனில் அவர்களின் மக்கள் பேசுகிறார்கள். ஆனால், இங்கு மோசமாக இருக்கிறது. மக்களின் வீடுகள் புல்டோசரால் இடிக்கப்படுகின்றன” என்றார்.