உலக நாடுகளை உலுக்கிய துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 22,765 கடந்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளதுடன், கட்டட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகின்றது.
மேலும் துருக்கி மற்றும் சிரியாவில் 5ஆவது நாளாக மீட்புப் பணி நீடித்து வரும் நிலையில், உயிருடன் மீட்கப்பட்டவர்கள் கடுங்குளிர் மற்றும் பசியின் காரணமாக கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கடல் நீரின் மட்டம் அதிகரிப்பு
இதனிடையே காஸியான்டப் மாகாணத்தில் இடிபாடுகளுக்கு இடையே சிக்கியவர்களை மீட்கும் பணி இரவு பகலாக நடந்து வரும் நிலையில் கடும் குளிர், பனிப்பொழிவு நீடித்து வருவது மீட்புப் படையினருக்கு சவாலாக அமைந்துள்ளது.
இதேவேளை, ஹாத்தே மாகாணத்தில் உள்ள பெரிய நகரமான அன்டாகியாவில் உள்ள மருத்துவமனையின் வாகன நிறுத்துமிடத்தில் 200க்கும் மேற்பட்ட உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.
மேலும், துருக்கியின் இஸ்கெண்டருன் மாகாணத்தில் கடல் நீரின் மட்டம் 200 மீட்டர் வரை அதிகரித்துள்ளதுடன், சேறு, சகதி நிறைந்த கடல் நீர் ஊருக்குள் புகுந்துள்ளது.
இதற்கமைய, கடும் குளிரில் மக்கள் நடுங்கி வருவதாகவும், மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், தொடர்ந்து மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.