திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி அடுத்து பழவேற்காடு பகுதியில் தினமும் சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்று வருகின்றனர்.
அந்த வகையில், நேற்று இரவு அரங்கம் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர் தனபால் என்பவர் கடலுக்கு மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளார். அங்கு மீன் பிடிப்பதற்கு வீசிய வலையில் மர்ம பொருள் ஒன்று சிக்கியுள்ளது.
இதையடுத்து, வீடு திரும்பிய தனபால் இன்று காலை வலையை சுத்தம் செய்யும் போது ஏதோ ஒரு பொருள் வலையில் சிக்கி இருப்பதை பார்த்துள்ளார். உடனே அந்த பொருளை பத்திரமாக எடுத்து வைத்துவிட்டு, பின்னர் திருப்பாலைவனம் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.
அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த பொருளை ஆய்வு செய்தனர். அந்த பொருள் தெர்மாகோல் உள்ளே எலக்ட்ரானிக் சாதனங்கள் அடங்கிய பேட்டரி மற்றும் சிப் போன்ற பொருட்கள் உள்ளே உள்ளது. மர்ம பொருள் கிடைத்த தகவலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.