திருவண்ணாமலை நகரம் மாரியம்மன் கோயில் 10-வது வீதி, தேனிமலை, போளூர் பேருந்து நிலையம் அருகே ரயில் நிலையம் செல்லும் பாதை என 3 இடங்களில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையங்கள் மற்றும் கலசப்பாக்கத்தில் தனியார் நிறுவனத்தின் ஏடிஎம் மையம் ஆகியவை இயங்குகின்றன. இதில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் 3 ஏடிஎம் மையங்களில் இருந்து இன்று(12-ம் தேதி) அதிகாலை புகை வெளியேறுவதை கவனித்த அவ்வழியாக சென்றவர்கள், காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதேபோல், கலசப்பாக்கத்தில் உள்ள ஏடிஎம் மையம் உடைக்கப்பட்டு திறந்திருப்பது குறித்தும் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நான்கு ஏடிஎம் மையங்களுக்கும் சென்று காவல்துறையினர் பார்வையிட்டனர். அப்போது, காஸ் வெல்டிங் மூலம் ஏடிஎம் இயந்திரங்கள் பெயர்க்கப்பட்டு, அதிலிருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும், தடயங்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் தெரியாமல் இருக்க ஏடிஎம் இயந்திரங்களை தீயிட்டு கொளுத்திவிட்டு கொள்ளை கும்பல் சென்றுள்ளது.
திருவண்ணாமலை மாரியம்மன் கோயில் தெருவில் இருந்த ஏடிஎம் இயந்திரத்தில் ரூ.19.50 லட்சம், தேனிமலை ஏடிஎம் இயந்திரத்தில் ரூ.32 லட்சம், போளூர் ஏடிஎம் இயந்திரத்தில் ரூ.18 லட்சம், கலசப்பாக்கம் ஏடிஎம் இயந்திரத்தில் ரூ.3 லட்சம் என மொத்தம் ரூ.72.50 லட்சத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்துள்ளது தெரியவந்தது. 4 ஏடிஎம் மையங்களில் நடைபெற்ற கொள்ளை சம்பவம், ஓரே செயல்வடிவத்தை கொண்டுள்ளது. இதனால், ஓரே கும்பலைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளதை காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர்.இந்த கொள்ளைக்கு பின்னால் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் இருப்பதாக ஐஜி கண்ணன் தெரிவித்துள்ளார்.
கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகளை வைத்து முதற்கட்டமாக விசாரித்து வருவதாக அவர் கூறினார். இதனிடையே, திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுடன் இணைந்து காவல்துறையினர் தீவிர வாகன சோதனை செய்ய தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
கொள்ளை அடிக்கப்பட்டதில் 2 பாரத ஸ்டேட் வங்கி உட்பட நான்கு பொதுத்துறை வங்கிகளாகும். கொள்ளையர்கள் குறிப்பிட்ட வங்கி ஏடிஎம்களை குறி வைத்து கொள்ளை அடித்துள்ளதாகவும், ஏடிஎம் கொள்ளையில் அவர்கள் கை தேர்ந்தவர்கள் என்றும் ஐஜி கண்ணன் கூறினார்.