கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த சித்திரை திருமகாராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சுயம்பு செல்வன். இவரின் மகள் சுகப்பிரியா. சுகப்பிரியா வீட்டில் நாய் ஒன்றை பாசமாக வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் பொறியியல் பட்டதாரியான சுகப்பிரியாவுக்கும், சாஃப்ட்வேர் இன்ஜினீயரான அசோக் என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இவர்களது திருமணம் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு முகிலன்விளையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திருமண மண்டபத்தில் திருமணம் முடிந்த பிறகு தனது வீட்டுக்குச் சென்ற சுகபிரியா, குடும்பத்தினரிடம் கூறிவிட்டு கணவர் வீட்டுக்கு புறப்பட தயாரானார். அப்போது வீட்டுக்கு வெளியே கட்டிப் போடப்பட்டிருந்த அவரது வளர்ப்பு நாய் குரைத்துக்கொண்டே இருந்தது. சுகப்பிரியா அருகில் சென்றதும் நாய் குரைப்பதை நிறுத்திவிட்டு சுகப்பிரியாவின் முகத்தில் நாக்கல் நக்கியபடி பாசத்தை வெளிப்படுத்தியது.

நாயிடம் சிறிது நேரம் கொஞ்சிய சுகப்பிரியா புறப்படத் தயாரானார். ஆனால், நாய் சுகப்பிரியாவை விடாமல் முன் கால்களால் பற்றி கொண்டு நின்றது. சிறிது நேரம் சுகப்பிரியாவை விடாமல் முன்னங்கால்களால் பிடித்துக்கொண்டு நின்றது. முன்னங்கால்களை விடுவித்துவிட்டு சுகப்பிரியா காரில் ஏறுவதற்காகப் புறப்பட்டார். அப்போது அவரது சேலை முந்தானையை முன்னங்கால்களால் பிடித்து இழுத்தது நாய். இதையடுத்து நாயை சமாதானப்படுத்திவிட்டு காரில் ஏறி கணவர் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார்.

மணமகள் சுகப்பிரியா கணவர் வீட்டுக்குச் செல்ல முற்பட்டபோது பெற்றோர் கண்ணீருடன் விடைகொடுத்தனர். சுகப்பிரியாவும் பெற்றோரை கட்டிப்பிடித்து கண்கலங்கினார். அதுபோல மணமகளின் வளர்ப்பு நாயும் நீண்ட நேரம் அவரை விடாமல் பாசமழை பொழிந்தது. அதைப் பார்த்து திருமணத்துக்கு வந்தவர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். வளர்ப்பு நாயை விட்டுப் பிரிந்து செல்ல மனமில்லாமல் கனத்த இதயத்துடன் சுகப்பிரியா சென்ற வீடியோ இணையதளத்தில் வேகமாகப் பரவி வருகிறது.