பாஜக ஆட்சிக்கு பின் இந்தியாவை மதிக்கும் உலக நாடுகள்: மத்திய அமைச்சர்!

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், 2014ஆம் ஆண்டு முதல், நாடு அவநம்பிக்கையில் இருந்து நம்பிக்கையை நோக்கிய பயணத்தைத் தொடங்கியதாக மத்திய அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் விண்வெளித் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

2014ஆம் ஆண்டுக்கு முன்பு வெளிநாடுகளுக்குச் சென்ற இந்தியர்களுக்கு மதிப்புக் குறைவாக இருந்தது எனவும், இப்போது அது நேர்மாறாக உள்ளது என்றும் ஜிதேந்திர சிங் கூறினார். உலகம் இந்தியாவை மதிப்புடனும், மரியாதையுடனும், நம்பிக்கையுடனும் பார்க்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

டெல்லியில் நடைபெற்ற ரோட்டரி சங்கத்தின் வருடாந்திர மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசிய ஜிதேந்திர சிங், பல புதிய சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதன் மூலம் இந்தியாவின் திறன்களை உகந்த முறையில் பயன்படுத்த பிரதமர் மோடி வழிவகுத்துள்ளதாகத் தெரிவித்தார். 2014ஆம் ஆண்டுக்கு முன்பு, பல அமைச்சர்கள் தொடர் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானதாகவும், ஆனால் கடந்த 9 ஆண்டுகளில், ஒரு மத்திய அமைச்சர் கூட இதுபோன்ற குற்றச்சாட்டிற்கு ஆளாகவில்லை என்றும் அவர் கூறினார். பிரதமர் மோடி ஏற்படுத்திய நம்பிக்கையும் உறுதியும் இந்தியர்கள் முன்னோக்கிச் செல்லவும், உலகத்தை வழிநடத்தவும் நம்பிக்கை அளித்துள்ளது என்று ஜிதேந்திர சிங் கூறினார்.

2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை 94 நாடுகளுக்கு 750 லட்சம் டோஸ் கோவிட் தடுப்பூசியை இந்தியா வழங்கியிருந்ததாக அவர் தெரிவித்தார். கோவிட் தொற்றுநோய்க் காலத்தின் போது, உலகுக்கு வழிகாட்டியாக இந்தியா விளங்கியது என்று அவர் கூறினார். விண்வெளித்துறையிலும் சிறந்த முன்னேற்றங்களை இந்தியா அடைந்து வருகிறது என்றும் ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார்.

ரோட்டரி சங்கம் பற்றிக் கூறிய அவர் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் 14 லட்சத்துக்கும் அதிகமான உறுப்பினர்களை உள்ளடக்கியதாக இது வளர்ந்துள்ளது என்றார். இது உலகின் மிகப்பெரிய சேவை நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் 1920இல் ஒரே ஒரு சங்கமாகத் தொடங்கிய ரோட்டரி, தற்போது நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 4500 சங்கங்களுடன் 2 லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட ஒரு துடிப்பான அமைப்பாக திகழ்கிறது என்று ஜிதேந்திர சிங் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.