டொரான்டோ,கனடாவில், காலிஸ்தான் ஆதரவாளர்களால் ஹிந்து கோவில் மீண்டும் சேதப்படுத்தப்பட்டதுடன், அதன் சுவரில் இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் எழுதி வைக்கப்பட்டுஉள்ளதற்கு, நம் துாதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
வட அமெரிக்க நாடான கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள மிசிசவுகா நகரில் ராமர் கோவில் உள்ளது.
இதை, காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியதுடன், கோவில் சுவரில் இந்தியாவுக்கு எதிரான வாசகங்களையும் எழுதி உள்ளனர்.
இச்சம்பவத்திற்கு இந்திய துாதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளது. இதையடுத்து, அந்நாட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கனடாவில், ஹிந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது இது முதல்முறையல்ல. கடந்த மாதம், இங்கு பிராம்ப்டன் நகரில் உள்ள கவுரி சங்கர் கோவிலையும், கடந்த ஆண்டு செப்டம்பரில், டொரான்டோவில் உள்ள சுவாமி நாராயண் கோவிலையும், காலிஸ்தான் ஆதரவாளர்கள் சேதப்படுத்தினர்.
தற்போது மீண்டும் நிகழ்ந்துள்ள இந்த சம்பவம், அங்குள்ள இந்திய சமூகத்தினர் மத்தியில் பதற்றத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
சமீப காலமாக, கனடாவில் இந்திய சமூகத்தினருக்கு எதிரான வெறுப்புணர்வு அதிகரித்து வருவதாகவும், அவர்களுக்கு எதிரான இனம் மற்றும் நிறவெறி தாக்குதல்கள் அதிகரித்து காணப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement