வரும் 27ஆம் தேதி (நாளை மறுநாள்) ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.
தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைந்த நிலையில், அணைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இன்று காலி 9.30 மணி முதலே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது முக்கிய அறிவிப்பு ஒன்றையும் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதில், “கடந்த சட்டசபை தேர்தல் வாக்குறுதியில் பெண்களுக்கு இலவச பேருந்து மற்றும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என திமுக அறிவித்திருந்தது.
மார்ச் மாதம் நடைபெறும் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் குடும்பத் தலைவிகளுக்களுக்கான மாதம் 1000 ரூபாய் எப்போது வழங்கப்படும் என்பது அறிவிக்கப்படும்” என்று, தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் குறித்த முதலமைச்சரின் அறிவிப்பு குறித்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அதிமுக புகார் அளித்துள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்போது, முதல்வரின் இந்த அறிவிப்பு தவறாது, முறையற்றது என்று, தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமாரை சந்தித்த அதிமுகவின் இன்பத்துறை புகார் அளித்துள்ளார்.