பெரியகுளம்: பெரியகுளத்தில் இடிந்து விழும் நிலையில் இருந்த பொதுப்பணித்துறை ஊழியர்கள் வீடுகள் ஜேசிபி எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன. தேனி மாவட்டம், பெரியகுளம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் நிரந்தர பணியாளர்கள் 60க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். ஆனால் பணியாளர்கள் குடியிருப்பு வீடுகள் என 40 வீடுகள் மட்டுமே உள்ளன.
இதில் 8 வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்து, குடியிருக்க முடியாத நிலையில், சிதிலமடைந்து புதர்மண்டி காணப்படுகிறது. பொதுப்பணித்துறை அலுவலத்திற்கு பணிக்கு வரும் வெளியூர் பணியாளர்கள் குடியிருக்க வீடுகள் பற்றாக்குறை ஏற்படுவதால் பணியாளர்கள் அதிக வாடகைக்கும் வெளியூர்களில் இருந்து நாள்தோறும் பணிக்கு வரும் நிலை எற்படுகிறது. சேதமடைந்த கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்ட வேண்டும் என அதிகாரிகளுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் தற்போது சிதலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள பொதுப்பணித்துறை ஊழியர்கள் குடியிருப்பு வீடுகளை ஜேசிபி இயந்திரம் கொண்டு இடித்து அகற்றும் பணியினை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.