ஈரோடு கிழக்கு: தேமுதிகவை முந்திய சுயேச்சை – கேப்டன் நிலைமை இப்படி ஆயிடுச்சே!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில்
தேமுதிக
வேட்பாளர் ஆனந்த் தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வருகிறார். சுயேச்சை வேட்பாளரை விட அவர் பின் தங்கியிருப்பது கவனம் பெற்றுள்ளது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியான போது பாமக போட்டியிடாமல் ஒதுங்கிக்கொண்டது. மக்கள் நீதி மய்யம் திமுக கூட்டணிக்கு ஆதரவளித்தது. அமமுக வேட்பாளரை அறிவித்து பிரச்சாரம் செய்த நிலையில் சின்னம் தொடர்பான பிரச்சினை எழுந்த போது பின் வாங்கியது. இந்நிலையில் தேமுதிக தொடர்ந்து பிரச்சாரம் செய்து தேர்தலை சந்தித்தது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் 2011 சட்டமன்றத் தேர்தலில் அந்த கட்சி அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. 2016 தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி சார்பில் போட்டியிட்டு சுமார் பத்தாயிரம் வாக்குகளை பெற்றது. 2021 தேர்தலில் அமமுக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக போட்டியிடவில்லை, அமமுக போட்டியிட்டு 1204 வாக்குகளை மட்டுமே பெற்றது. ஒரு சதவீதம் கூட வாக்குகள் அந்த கூட்டணிக்கு அப்போது கிடைக்கவில்லை.

ஈரோடு கிழக்கு ஒரு காலத்தில் விஜயகாந்துக்கு ஆதரவான தொகுதியாக இருந்த போதும் சமீபத்திய ஆண்டுகளில் அங்கு தேமுதிக தனது செல்வாக்கை இழந்து வருகிறது. இதனாலே தேமுதிக துணிச்சலாக இந்த இடைத்தேர்தலில் தனித்து களம் காண்பது ஏன் என்ற கேள்வியை அரசியல் விமர்சகர்கள் எழுப்பினர். தனித்து போட்டியிட்டு கணிசமான வாக்குகளைப் பெற்றால் அடுத்து வரும் மக்களவைத் தேர்தலில் எந்த கூட்டணியில் இணைந்தாலும் பேரம் பேச வசதியாக இருக்கும். அதற்காகவே தங்கள் பலத்தை காட்ட முயற்சிக்கிறார்கள் என்று கூறப்பட்டது.

தற்போது வெளியாகி வரும் தேர்தல் முடிவுகள் தேமுதிகவுக்கு விஷப் பரீட்சையாகவே இருப்பதை உணர முடிகிறது. முதல் சுற்று முடிவில் 112 வாக்குகளை மட்டுமே தேமுதிக பெற்றது. ஆனால் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய முத்து பாவா 178 வாக்குகள் பெற்றார். ஆரம்பமே தேமுதிகவுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் இருப்பதால் முடிவு எப்படி இருக்கும் என்பதை கனத்த மனத்துடன் அக்கட்சி தொண்டர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.