”திமுக அரசுக்கான அங்கீகாரம் தான் இந்த வெற்றி” – ஈவிகேஎஸ் இளங்கோவன் புகழாரம்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி எதிர்பார்த்த ஒன்றுதான்; இந்த வெற்றி தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினையே சேரும் என ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.
ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள தேர்தல் பணிமனையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”இந்த வெற்றி எதிர்பார்த்த ஒன்றுதான். இந்த வெற்றிக்கான முக்கிய காரணம் முழுக்க முழுக்க தமிழக முதல்வர்தான். தமிழ்நாடு முதல்வரை தான் இந்த வெற்றியினுடைய பெருமை சென்று சேரும். திமுக அரசின் இருபது மாத ஆட்சிக்காலத்தில், கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் 80 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொடுத்துள்ளார். அதற்கு அங்கீகாரமாக தான் மக்கள் இந்த வெற்றியை கொடுத்துள்ளனர்.
image
ராகுல் காந்தி மீது தமிழக மக்கள் வைத்துள்ள அன்பிற்கும் பாசத்திற்கும் ஆதரவிற்கும் இது ஒரு எடுத்துக்காட்டாக அமையும் என்று நினைக்கின்றேன். ராகுல் காந்தி 3500 கிலோமீட்டர் தூரம் ஒற்றுமை நடை பயணம் மேற்கொண்டது, ராகுல் மீது தமிழ்நாடு மக்களுக்கு ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோட்டில் சில திட்டங்கள் நிறைவேற்றப்பட இருக்கிறது. ஈரோடு மக்களுக்கு என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டுமோ, அந்த திட்டங்களை அமைச்சர் முத்துசாமியுடன் இணைந்து நிறைவேற்றுவேன் .முதல்வர் முக.ஸ்டாலின் உள்ள பேரவையில் நானும் இருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது.
முதல்வர் முக.ஸ்டாலின் என்னைவிட வயதில் சிறியவராக இருந்தாலும், அனுபவத்திலும் தியாகத்திலும் பன்மடங்கு உயர்ந்தவர். அவர் மூலம் ஈரோடு தொகுதி மக்களுக்கு நல்ல காரியங்களை செய்வேன். நாடாளுமன்றத் தேர்தலை பொருத்தவரை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெரும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
image
ஈரோடு இடைத்தேர்தலுக்கு திமுக அமைச்சர்கள் உழைப்பு என்பது சாதாரண உழைப்பல்ல. அவரவர் தேர்தலில் நின்றபோது இவ்வாறு உழைத்திருப்பார்களா என்று தெரியவில்லை” என்று தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.