வடமதுரை: வடமதுரையை அடுத்த சித்தூர் பகுதியில் ஒருசிலர் ரோஜா பூ விவசாயம் செய்து வருகின்றனர். இப்பகுதி பூ விவசாயிகள் கூறியதாவது, ரோஜாப்பூ தோட்டக்கலைப்பயிராகும். கடந்த பல வருடங்களுக்கு முன் வடமதுரை அருகில் உள்ள சித்தூர், போஜனம்பட்டி, வேலாயுதம்பாளையம், மொட்டணம்பட்டி, செங்குளத்துப்பட்டி, கரிவாடன், செட்டிபட்டி, நந்தவனப்பட்டி ஆகிய கிராமங்களில் சுமார் 200 ஏக்கர் அளவில் ரோஜாப்பூ விவசாயம் நடைபெற்றது. ரோஜா பூக்களில் நாட்டு ரகம் மற்றும் ஓட்டுரகம் உண்டு.
அதில் விவசாயிகள் அதிக பூக்கள் பூக்கக்கூடிய பன்னீர் ரோஜா என்ற ஓட்டு ரகத்தையே தேர்வு செய்து நடவு செய்தனர். பூக்களும் ஓரளவுக்கு நன்றாக இருந்தது. பல வருடங்களாக பருவமழை தவறியதாலும், சாம்பல் நோய் தாக்குதல் அதிகமாக இருந்ததாலும், இடுபொருட்கள் விலை உயர்வு, கூலி ஆட்கள் பற்றாக்குறையால் ரோஜா பூ சாகுபடி பரப்பளவு தற்போது குறைந்துவிட்டது. ரோஜாப்பூ விவசாயம் செய்தவர்களும் நஷ்டத்தினால் வேறு தொழிலுக்கு சென்று விட்டனர். தற்போது பன்னீர் ரக ரோஜா நாற்றுகள் ஓசூர் பகுதியில் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.
அங்கு சென்று ஒரு நாற்று ரூ.20 என வாங்கி வந்து நடவு செய்துள்ளோம். தற்போது ரோஜாப்பூவில் சாம்பல் நோய் தாக்குதலால் பெரிய அளவில் நஷ்டம் எற்படுகிறது. எனவே மாவட்ட தோட்டக்கலைத்துறை ரோஜா நாற்றுக்களை நமது மாவட்டத்திலே உற்பத்தி செய்து, மானிய விலையில் சப்ளை செய்து புதிய தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.