புதுச்சேரியில் கொடிகட்டி பறக்கும் கஞ்சா விற்பனை: மாணவ சமுதாயத்தின் எதிர்காலம் கேள்விக்குறி| Flag flying ganja sale in Puducherry: Future of student society in doubt

புதுச்சேரி: புதுச்சேரியில் கொடி கட்டி பறக்கும் கஞ்சா விற்பனையால், பள்ளி மாணவர்களின் எதிர்காலம் பாழாகி வருகிறது.

புதுச்சேரியின் எதிர்காலம் என வர்ணிக்கப்படும் மாணவர் சமுதாயத்தை குழி தோண்டி புதைக்கும் வகையில், பெட்டிக் கடை போல திரும்பும் இடமெல்லாம் மதுபான கடைகளும், மொபைல் செயலி வழியாக விபசாரம், கல்வி நிலையங்கள் அருகில் கஞ்சா விற்பனை ஜரூராக நடக்கிறது.

மதுபானம் விலை அதிகம், போதையும் குறைவு என்பதால், மாணவர்கள், இளைஞர்கள் கஞ்சா பக்கம் திரும்புகின்றனர். கஞ்சா ஒரு முறை புகைத்தால் பல மணி நேரத்திற்கு போதையில் திலைக்கலாம். மதுபானம் போன்று கடும் துர்நாற்றமும் வீசாது.

கஞ்சா எளிதாக கிடைப்பதால் நுாற்றுக்கணக்கான மாணவர்கள் கஞ்சா போதைக்கு அடிமையாகி தங்களின் வாழ்க்கையை தொலைத்து வருகின்றனர். சில மாணவர்கள் கஞ்சா போதையுடன் வகுப்புக்கு வருவது அதிகரித்து வருவதாக ஆசிரியர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

ஒரு பக்கம் மதுவுக்கு அடிமையாகி, இளம் வயதிலே கல்லீரல், சிறுநீரகம் செயலிழந்து இளைஞர்கள் உயிரிழந்து வருகின்றனர். மறுபக்கம் கஞ்சா போதைக்கு அடிமையாக மாணவர்கள் எதிர்காலத்தை சீரழித்து வருகின்றனர்.

நக்சலைட்கள்

புதுச்சேரியில் கஞ்சா விற்பனை செய்யும் சில்லரை வியாபாரிகள் திருவண்ணாமலை சமுத்ரகாலனிக்கு சென்று வாங்கி வந்து விற்கின்றனர்.
மொத்த வியாபாரிகள் சத்தீஷ்கர், ஆந்திரா எல்லையில் உள்ள மலை பகுதிக்கு சென்று, காடுகளில் மறைந்து வாழும் நக்சலைட்டுகளிடம் கிலோ ரூ. 1000 முதல் ரூ. 1300க்கு கஞ்சாவை வாங்கி வருகின்றனர். சிலர் ஒடிசாவில் இருந்து ரயில் மூலம் புதுச்சேரிக்கு கொண்டு வருகின்றனர். புதுச்சேரி கஞ்சா வியாபாரிகள் மூலம், தென் கிழக்கு மாநில நக்சலைட்களுக்கு கணிசமான வருவாய் கிடைக்கிறது.

latest tamil news

கஞ்சா வகைகள்

கஞ்சாவை பச்சை, பிளாக் என தரம் பிரித்து விற்கின்றனர். சற்று நாற்றம் வீசும் பிளாக் கஞ்சா சில்லரை வியாபாரிகளும், நாற்றம் வீசாத விலை உயர்ந்த பச்சை கஞ்சா தொழிலதிபர்கள் முதல் டாக்டர், சினிமா துறையினர் வரை சப்ளை செய்யப்படுகிறது.

இதுதவிர, கஞ்சா ஆயில், கஞ்சா சாக்லெட், கஞ்சா குழம்பு என பல வெரைட்டிகளில் கிடைக்கிறது. புதுச்சேரியில் இயங்கும் சில மதுபான பப்புகள், ரெஸ்டோ பார்களில் சுற்றுலா பயணிகளுக்கு மதுபானத்துடன், கஞ்சாவும் சப்ளை செய்யப்படும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

போலீசுக்கு தொடர்பு

விழுப்புரம் மாவட்டத்தை விட சிறிய நிலப் பரப்பு கொண்ட சின்ன யூனியன் பிரதேசம் புதுச்சேரி. இங்கு, கூப்பிடும் துாரத்தில் போலீஸ் நிலையம் உள்ளது.
இங்கு ரவுடிகள், கஞ்சா விற்பனை செய்பவர், லாட்டரி விற்பவர்கள் யார் என்ற அனைத்து போலீஸ் அதிகாரிகளுக்கும் நன்கு தெரியும். ஆனால் கஞ்சா விற்பனை செய்யும் ரவுடிகள் மீது நடவடிக்கை எடுப்பது கிடையாது. எந்த பிரச்னையும் செய்யாமல் தொழில் செய்யுங்கள் என போலீசாரே அறிவுரை கூறி மாதந்தோறும் ‘மாமூலான’ பணியை செய்கின்றனர்.

கஞ்சா விற்பனையை தடுக்க அமைக்கப்பட்ட தனிப்படையினர், ஆய்வுக்கு சென்றால், கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில் உள்ள போலீசார் தன் விஸ்வாசத்தை காண்பித்து விடுவதால், தனிப்படையினர் வெறும் கையுடன் திரும்புகின்றனர்.

latest tamil news

மாற்றம் தேவை

ஒரு கிலோவுக்கு குறைவாக கஞ்சா வைத்திருப்பவர் எளிதில் ஜாமினில் வந்து விடுகின்றனர். இரண்டு கிலோவுக்கு அதிகமாக வைத்திருந்தால் மட்டுமே ஜாமீன் கிடைப்பது சிரமம். கஞ்சா விற்பவரை போலீசார் பிடித்தாலும், அந்த நபரை கெசட்டட் ஆபிசர்’ அல்லது எஸ்.பி., மேற்பார்வையில் சோதனை செய்து, கஞ்சா பறிமுதல் செய்ய வேண்டும்.

வழக்கு விசாரணைக்காக கோர்ட்டிற்கு அலைய வேண்டும் என்பதால், பல அரசு அதிகாரிகள் கஞ்சா வழக்கிற்கு சாட்சியம் அளிக்க முன்வருவதில்லை. எஸ்.பி. மேற்பார்வையில் கஞ்சா பறிமுதல் செய்தால் அவற்றை சரியாக நிரூபிக்க முடியாமல், வழக்கில் இருந்து எளிதாக தப்பித்து விடுகின்றனர். சிறையில் இருந்து வெளியே வந்தவர்கள் மீண்டும் கஞ்சா விற்கின்றனர்.

அருணாச்சலபிரதேசத்தில், கஞ்சா பறிமுதல் செய்தால், அந்த போலீஸ் நிலைய பகுதி துணை கலெக்டர் வரையிலான கெசடெட் அதிகாரிகள் ஸ்டேஷனில் ஆஜராகி சாட்சியாக கையெழுத்திட வேண்டும் என உத்தரவு உள்ளது.

புதுச்சேரியிலும் கஞ்சா வழக்கில், அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரி போலீசாருடன் நேரில் ஆஜராகி கஞ்சா பறிமுதல் செய்ய உத்தரவிட்டால் மட்டுமே, கஞ்சா வழக்குகளில் தண்டனை கிடைக்கும்.

சம்பளத்துடன் ஓய்வு

புகாரில் சிக்கும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் வேறு மாநிலத்திற்கு மாற்றப்படுகின்றனர். லோக்கல் போலீஸ் மீது புகார் எழுந்தால், புதுச்சேரியின் 45 கி.மீ., பரப்பளவுக்கு உள்ளே இடமாற்றம் செய்யப்படுகின்றனர். அதிகப்பட்சம் ஆயுதப்படைக்கு மாற்றப்படுகின்றனர்.

இது, ‘வடிவேல் பட காமெடியில், நமக்கு கொடுக்கும் பனிஷ்மெண்ட் எல்லாம் டிரீட்மெண்டா மாறுது’ என்பதுபோல், புகாரில் சிக்கிய போலீசை சம்பளத்துடன் ஓய்வு கொடுப்பது போல் ஆயுதப்படைக்கு மாற்றப்படுகின்றனர். அந்த அதிகாரி சில மாதங்களில் மீண்டும் தான் விரும்பிய இடத்திற்கு பணிக்கு திரும்பி விடுகின்றார்.

கடுமையான சட்டம்

கஞ்சா விற்பனை செய்யும் வியாபாரிகளுடன் தொடர்பில் உள்ள போலீசாரை அடையாளம் கண்டு கடும் நடவடிக்கை எடுப்பதுடன், கஞ்சா வியாபாரிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தால் மட்டுமே கஞ்சா விற்பனையை தடுக்க முடியும்.

கஞ்சா விற்பனை செய்த மாஜி போலீஸ்காரர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், கஞ்சா தடுப்பு போலீஸ் ஆய்வுக்கு வரும்போதெல்லாம், போலீஸ் கான்ஸ்டபுள் ஒருவர் தகவல் தெரிவித்து தப்பிக்க வைத்தது தெரியவந்தது. சம்பந்தப்பட்ட கான்ஸ்டபுளை சீனியர் எஸ்.பி., சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். ஆனால், அந்த கான்ஸ்டபுள் அரசியல் அழுத்தம் காரணமாக மீண்டும் அதே போலீஸ் ஸ்டேஷனில் பணியில் சேர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.