புதுப்பொலிவுடன் சேப்பாக்கம் மைதானம்… கருணாநிதி பெயரில் கேலரியை திறந்துவைத்தார் ஸ்டாலின்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கட்டப்பட்ட கேலரியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கேலரியை திறந்து வைத்து “கலைஞர் மு.கருணாநிதி” என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயர் சூட்டியுள்ளார். 

இந்த நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி, இந்தியா சிமெண்ட் இயக்குநர் என்.ஸ்ரீனிவாசன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். 

சேப்பாக்கம் மைதானத்தின் சிறப்பம்சம்:

– தமிழ்நாட்டின் அடையாளங்களில் ஒன்றான சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானம் புத்துயிர் பெற்றுள்ளது.

– 1916ஆம் ஆண்டு கட்டப்பட்ட சேப்பாக்கம் மைதானம் இந்தியாவின் இரண்டாவது பழமையான மைதானமாக திகழ்கிறது. 

– 1934ஆம் ஆண்டு முதல் முறையாக சர்வதேச அளவிலான டெஸ்ட் போட்டியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் விளையாடின. இதனை தொடர்ந்து உள்ளூர் முதல் சர்வதேச அளவில் ஆயிரத்திற்கு மேற்பட்ட போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

– ஆரம்பத்தில் கட்டப்பட்ட மிகவும் பழமையான கேலரிகளை புதுப்பிக்க திட்டமிட்ட தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் சுமார் 139 கோடி ரூபாய் செலவில் புதிய கேலரியை ஒரே வருடத்தில் கட்டி முடித்தனர்.

– ஏற்கனவே உள்ள 31 ஆயிரத்து 140 இருக்கைகளுடன் புதிதாக 5 ஆயிரத்து 306 இருக்கைகள் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 36 ஆயிரத்து 446 இருக்கைகளுடன் சேப்பாக்கம் புத்துயிர் பெற்றுள்ளது.

– மேலும் 655 நான்கு சக்கர வாகனம் நிறுத்தும் இடமும், 655 இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதற்கு முன், மைதானத்திற்குள் பார்க்கிங் வசதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

– அண்ணா பெவிலியனில் புதிதாக கட்டப்பட்டுள்ள கேலரியில் சர்வதேச தரத்தில் வீரர்களுக்கான ட்ரெசிங் ரூம் எனப்படும் ஓய்வறை மற்றும் மிக முக்கிய நபர்கள் அமர்ந்து பார்க்கும் சிறப்பு இருக்கைகளும் அமைக்கப்பட்டு உள்ளது.

வரும் மார்ச் 22ஆம் தேதி, இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது. இதையடுத்து, மார்ச் 31ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடரில், சிஎஸ்கே அணியின் ஹோம் கிரவுண்டான இந்த சேப்பாக்கம் மைதானத்தில், 7 லீக் போட்டிகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.