XBB.1.16 வைரஸ்: அறிகுறிகள், அதிகரிக்கும் பரவல், விளைவுகள்… மீண்டும் கலக்கத்தில் இந்தியா!

கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் இன்னும் முழுமையாக நீங்கவில்லை என்பதற்கு உதாரணம் தான் XBB.1.16 வைரஸ். இது கொரோனா XBB மாதிரியில் இருந்து புதிய வைரஸாக உருமாறி வந்துள்ளது. சர்வதேச அளவில் இந்தியாவில் தான் XBB.1.16 உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமிருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். இதனால் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று

குறிப்பாக மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களை சொல்லலாம். இதில் மகாராஷ்டிராவில் இருந்து உருமாறிய புதிய வைரஸ் பரவ தொடங்கியிருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. இம்மாநிலத்தில் ஒரே நாளில் 155 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதேபோல் தெலங்கானாவில் கடந்த இரண்டு நாட்களாக மொத்த பாதிப்பு 100ஐ தாண்டியுள்ளது.

பாசிடிவ் விகிதம்

இதையடுத்து ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு, ஹிமாச்சல் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் கொரோனா பாசிடிவ் விகிதம் 5 முதல் 10 சதவீதத்திற்கு இடையில் காணப்படுகிறது. XBB.1.16
கொரோனா வைரஸ்
தொற்று ஏற்பட்டால் வழக்கமான பாதிப்புகளே தென்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

என்னென்ன பாதிப்புகள்

அதாவது, தலைவலி, தசை வலி, அசதி, வறண்ட தொண்டை, சளி ஒழுகுதல், இருமல் ஆகியவற்றை சொல்லலாம். இதுதவிர அடி வயிற்றில் வலி, ஒவ்வாமை, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளும் தென்படலாம். புதிய வைரஸானது வேகமாக பரவும் தன்மை கொண்டது. இதனால் மக்கள் மத்தியில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

உருமாறிய கொரோனா

கொரோனா வைரஸின் உருமாறிய மாதிரிகளின் பாதிப்புகளை ஏற்கனவே அனுபவித்துள்ளோம். எனவே நோய் எதிர்ப்பு சக்தியில் இருந்து எளிதில் தப்பித்துக் கொள்ளக் கூடியவை. ஆபத்தை விளைவிக்கும் தன்மை கொண்டது. இதன் காரணமாக மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

பொது இடங்களில் முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுதல், சமூக இடைவெளி, கூட்டம் நிறைந்த இடங்களை தவிர்த்தல் உள்ளிட்ட விஷயங்களை மிகவும் தீவிரமாக பின்பற்ற வேண்டும். கொரோனா அறிகுறிகள் கொண்ட நபர்களுக்கு அருகில் செல்லக் கூடாது. நோய்த்தொற்று உடன் வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

இன்ஃப்ளுயன்சா பாதிப்பு

தூய்மையற்ற பகுதிகளை தொடுவது, குழந்தைகளை விளையாட வைப்பது போன்றவற்றை தவிர்ப்பது அவசியம். காற்றோட்டம் உள்ள பகுதிகளில் வசிக்க வேண்டும். ஏற்கனவே H3N2 இன்ஃப்ளுயன்சா வைரஸின் தாக்கம் இந்தியாவில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் இதுவரை 7 பேரின் உயிர்களை பலி வாங்கியுள்ளது. எனவே இரட்டிப்பு எச்சரிக்கை உடன் பொதுமக்கள் இருக்க வேண்டியது அவசியமாகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.