IND vs AUS: விராட் கோலியை மதிக்காத ஹர்திக்… கேப்டன் என்ற ஆணவமா? – வீடியோவால் ரசிகர்கள் கொந்தளிப்பு

IND vs AUS Viral Video: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி நேற்று (மார்ச் 17) நடைபெற்றது. முதல் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரிலும் முன்னிலை பெற்றுள்ளது. முதல் போட்டியை தொடர்ந்து, இரண்டாவது போட்டி நாளை விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது. நாளைய போடடியில் இந்திய அணி வெல்வதன்மூலம், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரையும் இந்தியா கைப்பற்றும். முன்னதாக நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரையும் இந்திய அணி கைப்பற்றியிருந்தது. 

இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா நேற்றைய முதல் ஒருநாள் கோப்பையில் விளையாடவில்லை. அவரின் உறவினர் திருமணத்தை முன்னிட்டு, முதல் ஒருநாள் போட்டியில் இருந்து மட்டும் விலகியிருந்தார். அவருக்கு பதில், இந்திய டி20 அணியை தற்போது வழிநடத்தி வரும் ஹர்திக் பாண்டியா, நேற்று கேப்டன் பொறுப்பை ஏற்றார். இந்நிலையில், நேற்றைய போட்டியின்போது, கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கும், முன்னாள் கேப்டனும், அணியின் மூத்த வீரருமான விராட் கோலிக்கும் இடையில் கசப்பான சம்பவம் நேர்ந்ததாக கூறப்படுகிறது. 

நேற்றைய போட்டியின் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வரும் நிலையில், அதில் ஹர்திக் பாண்டியா, விராட் கோலி, குல்தீப் யாதவ் ஆகியோர் பீல்டிங் திட்டம் குறித்து பேசிவருவது தெரிகிறது. அப்போது, விராட் கோலி பேசிக்கொண்டிருக்கும்போதே, பாதியில் ஹர்திக் பாண்டியா நடந்து சென்ற விவகாரம் பெரும் பரபரப்ப உண்டாகியுள்ளது. 

அந்த வீடியோவில், விராட் கோலி எதையோ தீவிரமாக பேசிக்கொண்டிருக்கும், ஹர்திக் பாண்டியா அதை கண்டுகொள்ளாத வகையிலும், அவரை புறக்கணிக்கும் வகையிலும் செல்வதாக தெரிகிறது. மேலும், அதற்கு விராட் கோலி, ஹர்திக் பாண்டியாவின் மீது கோபப்படுவதும் அதில் பதிவாகியுள்ளது. ஆனால், இவை எதற்காக என்பது குறித்த தகவல் தெரியவில்லை. மேற்கூறிய அந்த வீடியோவை அடுத்து பலரும் ஹர்திக் பாண்டியாவை விமர்சித்து வருகின்றனர்.

ஹர்திக் பாண்டியா கடந்தாண்டு ஐபிஎல் தொடரில், குஜராத் அணியை வழிநடத்தி கோப்பையை கைப்பற்றிய பின், ரோஹித் சர்மாவுக்கு அடுத்து அவர்தான் இந்திய அணியை வழிநடத்தப்போகிறார் என்ற பேச்சு எழுந்தது. அதற்கு முன்னோட்டமாகதான், டி20 போட்டிகளில் அவர் தொடர்ந்து இந்திய அணியை வழிநடத்திவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.