IND vs AUS Second ODI Rain Forecast: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் தற்போது ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று (மார்ச் 17) நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. முன்னதாக, இரு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் கோப்பை தொடரையும் இந்தியா கைப்பற்றியிருந்தது.
ரோஹித் கேப்டன்
எனவே, அடுத்த இரு போட்டிகளையும் வென்று ஆஸ்திரேலியாவை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் உள்ளது. அந்த வகையில், இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை (மார்ச் 19) விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. உறவினர் திருமணத்திற்காக ரோஹித் சர்மா கடந்த போட்டியில் இருந்து விலகிய நிலையில் நாளை போட்டியில் இந்தியா அவர் வழிநடத்துவார், துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்படுவார்.
இஷான் வெளியே
மேலும், இம்முறை ரோஹித் வருவதால் இஷான் கிஷனின் வாய்ப்பு பறிபோகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. கே.எல் ராகுல் கடந்த போட்டியில் கீப்பிங்கிலும், பேட்டிங்கிலும் கலக்கியதால், இஷான் வெளியேறுவது நூறு சதவீதம் உறுதியாகிறது. மேலும், முதல் போட்டியில் வெற்றியால், பிளேயிங் லெவனில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை. கடந்த வெற்றிக்கூட்டணியே தொடரும் என கூறப்படுகிறது.
வானிலை அறிக்கை
இருப்பினும், இந்தியாவின் வெற்றியை எதிர்பார்த்து வந்த ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி தகவல் வெளியாக உள்ளது. ஆம், நாளைய போட்டி மழையால் பாதிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. நாளைய போட்டி பாதிக்கப்பட்டால் சென்னையில் நடைபெறும் மூன்றாவது போட்டியில்தான் தொடரின் முடிவு தெரியும்படி நிலைமை மாறிவிட வாய்ப்புள்ளது.
இந்நிலையில், வானிலை அறிக்கை, மார்ச் 19 (நாளை) விசாகப்பட்டினம் நகரின் வெப்பநிலை பகலில் 26 டிகிரி செல்சியஸாகவும், இரவில் 23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். பகல் மற்றும் இரவு நேரங்களில் வானம் இடியுடன் கூடிய மழை பெய்யும். மழைக்கான வாய்ப்பு பகலில் 80% மற்றும் இரவில் 49%. இதனால் போட்டி மழையால் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பகல் மற்றும் இரவில் ஈரப்பதம் 94% இருக்கும்.
ஒய்.எஸ். விசாகப்பட்டினத்தில் உள்ள ராஜசேகர ரெட்டி மைதானம் ஒரு நல்ல பேட்டிங் மைதானம். ஒருநாள் போட்டிகளில் ஸ்டேடியத்தின் சராசரி முதல் இன்னிங்ஸிஸ் மொத்தம் 241. ஸ்டேடியம் இதுவரை 14 ODI போட்டிகளை நடத்தியுள்ளது, அதில், இரண்டாவது பேட்டிங் செய்யும் அணி 9 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. எனவே, சேஸிங்கிற்கு இந்த மைதானம் சிறந்தது என தெரிகிறது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இந்தியா எடுத்த 387-5 ரன்களே இந்த மைதானத்தில் இதுவரை இல்லாத அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
இந்திய அணியின் பிளேயிங் லெவன் (உத்தேசம்)
ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ்