“அமைச்சர் உதயநிதியின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது”- மத்திய விளையாட்டு துறை அமைச்சர்

“தமிழ்நாட்டில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்” என மத்திய விளையாட்டு துறை அமைச்சர் பேசியுள்ளார்.
சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் இளைஞர் நலன் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூரை தமிழ்நாட்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சந்தித்தார். 
இன்று சென்னையில் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர் நேற்றே சென்னை வந்தடைந்துள்ளார். அவரை வரவேற்கும் விதமாக தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகையில் மரியாதை நிமித்தமாக சந்தித்து அவரை வரவேற்றார். 
image
பின்னர்  விளையாட்டுதுறை சார்பில் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து மத்திய அமைச்சருடன் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் தமிழ்நாடு விளையாட்டுதுறை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை அவரிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், விளையாட்டு மேம்பாட்டு துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்யா மிஸ்ரா, விளையாட்டு மேம்பாட்டு ஆணையர் மேகநாத் உள்ளிட்ட துறை சார்ந்த அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் இளைஞர் நலன் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர் பேட்டியளித்தபோது, “தமிழ்நாட்டில் விளையாட்டு துறை சார்ந்த பல்வேறு கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான கருத்துக்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பிரதமர் விளையாட்டுத்துறைக்கு முக்கியத்துவத்தை வழங்கி வருகிறார்.
image
அந்த வகையில் விளையாட்டுத் துறையில் இந்தியா முதல் இடத்தில் திகழ வேண்டும் என்பதற்கான பல்வேறு வழிமுறைகள் இங்கு வகுக்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களில் விளையாட்டுதுறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கேலோ இந்தியா போட்டிகளில் ஆண்டுக்கு 15,000 மேற்பட்ட வீரர்கள் பங்குபெற்று வருகின்றனர். கேலோ இந்தியா விளையாட்டு மையத்தை அதிகப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

#SportsAuthorityofIndia – வின் தென்னிந்தியக் கிளை தமிழ்நாட்டில் வேண்டும் – #KheloIndia உள்கட்டமைப்பு நிதியை ஒன்றிய அரசு விடுவிக்க வேண்டும் – தமிழ்நாட்டில் #NationalYouthFest2024 #Asianbeachgames ஆகியவற்றை நடத்த வேண்டும் என வலியுறுத்தினோம். #AtulyaMisra @jmeghanathreddy
2/2
— Udhay (@Udhaystalin) March 18, 2023

38 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா ஹாக்கி போட்டியில் சிறப்பாக விளையாடி வருகிறது. உலக அளவில் இந்தியா ஹாக்கி போட்டிகளில் நிரந்தரமாக முதலிடத்தை தக்க வைத்துக் கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு துறையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவரின் செயல்பாடுகள் வரவேற்கதக்கது” என்றார்.
image
தொடர்ந்து தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “தமிழ்நாட்டில் Asian Beach Game நடத்துவதற்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் 37வது நேஷனல் விளையாட்டு போட்டி நடத்துவதற்கும், தமிழ்நாட்டில் நேஷனல் யூத் ஃபெஸ்டிவல் நடத்துவதற்கும் ஒன்றிய விளையாட்டு அமைச்சரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. விளையாட்டு துறையில் எந்தவித அரசியலும் இல்லாமல் விளையாட்டுத்துறை ஊக்கப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒன்றிய அமைச்சர்  உறுதியளித்துள்ளார்” என்றார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.