சென்னை, கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள்… தமிழக பட்ஜெட்டில் மெகா அறிவிப்பு!

தமிழக சட்டமன்றத்தில் 2023-24ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். இதில் சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்த போதிய நிதி ஒதுக்கீடு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் திட்டம்

இரண்டாம் கட்டப் பணிகள் 63,246 கோடி ரூபாய் செலவில் 119 கிலோமீட்டர் தூரத்திற்கு மூன்று வழித்தடங்களில் முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கின்றன. இதில் பூந்தமல்லி பணிமனை முதல் கோடம்பாக்கம் மின் நிலையப் பிரிவு வரையிலான உயர் வழித்தடம் 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இந்த வரவு – செலவு திட்டத்தில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 10,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கோவை மெட்ரோ ரயில் திட்டம்

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுவது கோவை மாநகர். இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் இரண்டாம் நிலை நகரங்களில் முதன்மையானது. ஜவுளி, தொழில், வர்த்தகம், தொழில்நுட்பம், மருத்துவ வசதிகள், உற்பத்தி துறை என பல்தொழில்களின் இருப்பிடமாக, தொழில்முனைவிற்கு எடுத்தக்கட்டாக திகழ்கிறது.

இந்த நகரின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. கோவை மாநகரின் அவிநாசி சாலை, சத்தியமங்கலம் சாலைகளை உள்ளடக்கி 9,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

மதுரை மெட்ரோ ரயில் திட்டம்

தூங்கா நகரம் என்று அழைக்கப்படுவது மதுரை. தென்னகத்தின் வளர்ச்சிக்கு மையமான விளங்குகிறது. மதுரை மெட்ரோ ரயில் திட்டம் 8,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். இந்நகரின் மையப் பகுதிகளில் நிலத்திற்கு அடியில் அமைக்கப்படும் மெட்ரோ ரயில் திட்டமானது திருமங்கலம் – ஒத்தக்கடை ஆகிய பகுதிகளை இணைக்கிறது.

நெடுஞ்சாலைத் துறை அறிவிப்புகள்

கோவை மற்றும் மதுரை ஆகிய இரு நகரங்களில் மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டு, பன்னாட்டு நிதி நிறுவனங்களின் நிதியுதவி மூலம் மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் நெடுஞ்சாலைத் துறையில் முதல்வரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 1,407 கோடி ரூபாய் செலவில் 148 கிலோ மீட்டர் சாலைகளை நான்கு வழிசாலையாக அகலப்படுத்தும் பணிகளும்,

தேனாம்பேட்டை டூ சைதாப்பேட்டை பாலம்

524 கிலோமீட்டர் சாலைகளை 803 கோடி ரூபாய் மதிப்பில் இருவழிச் சாலையாக அகலப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. வரும் ஆண்டில் 621 கோடி ரூபாய் மதிப்பில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை அண்ணா சாலையில் நான்கு வழி மேம்பாலம் கட்டப்படும்.

பன்னாட்டு பொறியியல் வல்லுநர்களின் ஆலோசனைகள் பெற்று சென்னை மெட்ரோ ரயில் சுரங்கப் பாதைகளுக்கு மேல் கட்டப்பட உள்ள இந்த மேம்பாலம் ஒரு நவீன பொறியியல் சாதனையாக அமையும். இந்த பணிகள் முடிவு பெற்றதும் பல முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசல் குறைந்து சாலை பாதுகாப்பு மேம்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.