மகளிர் உரிமைத்தொகை: விண்ணப்பிப்பது எப்படி… யாருக்கு கிடையாது… எப்படி கிடைக்கும்? – முழு விவரம்

Thousand Rupees For Women: தமிழ்நாடு அரசின் 2023-24ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று (மார்ச் 20) சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். நீண்ட நாளாக எதிர்பார்க்கப்பட்டு வந்த குடும்ப தலைவிக்களுக்கான மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகை திட்டம் குறித்த அறிவிப்பும் இன்று வெளியாகியுள்ளது. 

நிதியமைச்சரின் அறிவிப்பு

இதுகுறித்து பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்,”தகுதிவாய்ந்த குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு வரும் நிதியாண்டில் மாதம் 1,000 ரூபாய் உரிமைத்தொகையாக வழங்கப்பட இருக்கிறது. ஒன்றிய அரசால் பெருமளவு உயர்த்தப்பட்டுள்ள சமையல் எரிவாயு விலை, விலைவாசி உயர்வால் அதிகரிக்கும் குடும்பச் செலவுகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் என்பது அவர்களது அன்றாட வாழ்க்கைக்குப் பேருதவியாக இருக்கும்.

வழிமுறைகள் விரைவில்

இத்திட்டம் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டான இந்த ஆண்டில், அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப். 15ஆம் தேதி முதல் இத்திட்டம் தொடங்கிவைக்கப்படும். இத்திட்டத்தின் கீழ் மகளிர் பயன்பெறுவதற்கான வழிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். தமிழ்நாட்டு மகளிரின் சமூக பொருளாதார வாழ்வில் ஒரு புரட்சியை ஏற்படுத்தக்கூடிய இத்திட்டத்திற்காக, இந்த பட்ஜெட்டில் 7 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என அறிவித்தார். எனவே, இத்திட்டத்திற்கு விண்ணபிப்பது குறித்து விரைவில் அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யார் தகுதி வாய்ந்தவர்கள்?

இதையடுத்து, இதில் தகுதியுடைவர்களுக்கு மட்டும் உரிமைத்தொகை வழங்கப்படும் என்பதற்கு எதிர்க்கட்சிகள் பலத்த எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இத்திட்டம் குறித்து, தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கீதாஜீவன் தனியார் தொலைக்காட்சி பேட்டியளித்தார். அதில்,”இத்திட்டம் மூலம், ஏழை, எளிய மகளிர்கள் பயனடைவார்கள். அவர்களின் வாழ்க்கை தரம் உயர இத்தொகை பெரிதும் உதவும்” என தெரிவித்திருந்தார்.

மேலும், பட்ஜெட் உரையில் தகுதியுடைவர்கள் என குறிப்பிட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,”அனைத்து திட்டங்களும் அதற்கு தகுதியுடைவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். அதேபோன்றுதான் இத்திட்டமும். இதில், ஏழை, எளிய மகளிர் பயன்படைவார்கள். அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்தும் மகளிர் இதில் பயனடைய மாட்டார்கள்” என தெரிவித்தார்.

நேரடியாக வங்கி கணக்கில்…?

அதுமட்டுமின்றி, இதில் 80 லட்சத்திற்கும் அதிகமானோர் பயனடைவார்கள் என்றும் இதுகுறித்த முழு தரவுகள் தற்போது தன்னிடம் இல்லையென்றாலும் அமைச்சர் என்ற ரீதியில் ஒரு கணிப்பில் இதை கூறுவதாக தெரிவித்தார். மேலும், இத்தொகை, எவ்வித இடைத்தரகர்களும் இன்றி நேரடியாக மகளிரின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் எனவும், இருப்பினும் இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் உரிய முடிவு எடுத்து அதனை அறிவிப்பார் என  தெரிவித்தார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.