முல்லை பெரியாறு அணை தொடர்பாக ஒன்றிய நீர்வள ஆணையம் உச்சநீதிமன்றத்தில் நிலை அறிக்கை தாக்கல்

டெல்லி: முல்லை பெரியாறு அணை தொடர்பாக ஒன்றிய நீர்வள ஆணையம் உச்சநீதிமன்றத்தில் நிலை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. வரும் 28-ம் தேதி அணை பாதுகாப்பு கண்காணிப்பு குழு கூட்டம் நடத்தப்படும் என நிலை அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரள அரசுகளுக்கு கடந்த ஜனவரி 12-ல் அணை பாதுகாப்பு குழு தலைவர் கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் அணை பாதுகாப்பு தொடர்பாக 16-வது கூட்டத்தை கூட்ட ஏதுவான தேதிகளை அளிக்குமாறு கோரியிருந்தார்.

கேரள எல்லையில் இருக்கும் முல்லை பெரியாறு அணையின் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்கள் பயன்பெற்று வருகின்றன. இந்த அணையின் நீர்மட்டம் 152 அடியாக இருக்கும் நிலையில், பாதுகாப்பு கருதி 136 அடி தான் அதிகபட்சம் கொள்ளளவு என கேரள அரசு தெரிவித்தது. அதன் படி 136 அடி தான் அணையின் முழுக்கொள்ளளவாக வைக்கப்பட்டு வருகிறது.

மேலும் இது தொடர்பாக கேரள, தமிழ்நாடு அரசுகள் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் அணையின் பாதுகாப்பை உறுதி செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு அணையை அவ்வப்போது ஆய்வு செய்து அணை பாதுகாப்பு கண்காணிப்பு குழு கூட்டம் நடத்தி வருகிறது.

அதன்படி 16-வது அணை பாதுகாப்பு தொடர்பாக கூட்டத்தை கூட்ட ஏதுவான தேதிகளை அளிக்குமாறு  தமிழ்நாடு, கேரள அரசுக்கு குழு தலைவர் ஜனவரி 12-ம் தேதி கடிதம் எழுதியிருந்தார். இதனை அடுத்து வரும் 28-ம் தேதி அணை பாதுகாப்பு கண்காணிப்பு குழு கூட்டம் நடத்தப்படும் என முல்லை பெரியாறு அணை தொடர்பாக ஒன்றிய நீர்வள ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த நிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.