“ரூ.300-க்கு ரப்பர் கொள்முதல் செய்தால் பாஜக-வுக்கு வாக்களிப்போம்" – கத்தோலிக்க பிஷப் பேச்சு

கேரள மாநிலத்தில் ரப்பர் விவசாயம் முக்கியமான ஒன்றாகும். அதிலும் மலையோர பகுதிகளில் ரப்பர் விவசாயம் அதிக அளவில் நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில் ஒருகிலோ ரப்பர் 300 ரூபாய்க்கு கொள்முதல் செய்தால் பா.ஜ.க-வுக்கு கேரளாவில் எம்.பி இல்லை என்ற குறையை போக்குவதாக கத்தோலிக்க பிஷப் பேசியுள்ளது அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

கண்ணூர் மாவட்டம் ஆலக்கோடு பகுதியில் நடந்த கத்தோலிக்க விவசாயிகள் மாநாட்டில் தலசேரி பிஷப் மார் ஜோசப் மாம்பிலானி பேசுகையில், “மலையோரத்தில் குடியேறிய மக்களே… நமக்கு முன்னேற்றம் வேண்டும். அதற்காக நாம் அரசியல் ரீதியாக எதிர்ப்பை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம். தேர்தலில் ஓட்டாக மாறாத எந்த போராட்டத்துக்கும் ஜனநாயகத்தில் மதிப்பு இல்லை என்ற உண்மையை உணர்ந்துகொள்ளுங்கள். மத்திய அரசிடம் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். உங்கள் கட்சி எதுவாகவும் இருந்துவிட்டு போகட்டும். நாங்கள் உங்களை ஓட்டுபோட்டு வெற்றிபெற வைக்கிறோம். ரப்பர் ஷீட்டின் விலை கிலோ 300 ரூபாய் என அறிவித்து, அந்த ரப்பரை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யுங்கள். உங்களுக்கு இங்கு ஒரு எம்.பி-யும் இல்லை என்ற வருத்தத்தை இந்த குடியேற்ற மக்கள் மாற்றித்தருவார்கள்” என பேசினார்.

கண்ணூரில் விவசாயிகள் மாநாட்டில் பேசிய பிஷப் மார் ஜோசப் மாம்பிலானி

பிஷப்பின் இந்த பேச்சு காங்கிரஸ், சி.பி.எம் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், இந்த கருத்தில் பிஷப் உறுதியாக நின்றார். அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய பிஷப் மார் ஜோசப் மாம்பிலானி, “இது கத்தோலிக்க சபையின் கருத்து அல்ல. குடியேற்ற மக்கள் அவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை தெரிவிப்பது எங்கள் கடமை ஆகும். அவர்களின் நிலங்களை வங்கிகள் ஜப்தி செய்கின்றன. ரப்பர் இப்போது 150 ரூபாய், 120 ரூபாய் என கொள்முதல் செய்யப்படுகிறது. அது கிலோ 300 ஆக கொள்முதல் செய்ய வேண்டும். அப்படி கொள்முதல் செய்யும் அரசுக்கு மலையோர மக்கள் ஓட்டளிப்பார்கள். அது எந்த கட்சியாக இருந்தாலும் இது பற்றி எங்களிடம் பேசலாம்” என்றார்.

பா.ஜ.க-வை ஆதரிக்க தயார் என கத்தோலிக்க பிஷப் பேசியது கேரள அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி கேரள பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன் கூறுகையில், “தலச்சேரி மறை மாவட்ட பிஷப்பின் கருத்தை வரவேற்கிறேன். இது மாற்றத்துக்கான ஒரு அறிகுறியாகும். விவசாயிகளை பயன்படுத்தி அதிகாரத்தில் வந்த காங்கிரஸ் மற்றும் சி.பி.எம் கட்சிகள் விவசாயிகளை வஞ்சித்து விட்டன. மோடி அரசு ஒவ்வொரு கட்டத்திலும் ரப்பர் விலையை அதிகரித்து வருகிறது. காங்கிரஸ் ரப்பர் விவசாயிகளுக்கு எதுவும் செய்யவில்லை.

கேரள பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன்

மத்திய அரசு விவசாயிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. அதனால்தான் அனைத்து தரப்பினரும் மத்திய அரசை நெருங்கி வருகிறார்கள். மோடி ஆட்சியை ஆதரிக்கும் அரசு, கேரளத்தில் வந்தால் மட்டுமே மத்திய அரசின் அனைத்து வளர்ச்சிகளும் முழுமையாக கிடைக்கும். வடகிழக்கு மாகாணங்களில் பா.ஜ.க பெற்ற வெற்றி கேரளத்திலும் பிரதிபலிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.