நல்ல வருமானம் உள்ள புவனகிரி அம்மன் கோயிலை இந்து அறநிலைய துறை கட்டுப்பாட்டில் சேர்க்க பெண்கள் திடீர் போராட்டம்: காஞ்சி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகேயுள்ள நல்ல வருமானம் உள்ள நசரத்பேட்டை புவனகிரி அம்மன் கோயிலை இந்து அறநிலைய துறை கட்டுப்பாட்டில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி, காஞ்சி கலெக்டர் அலுவலக வளாகத்தின் முன்பு அமர்ந்து 4 பெண்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன காஞ்சிபுரம் பகுதியில் உள்ள நசரத்பேட்டையில் புவனகிரி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு 3 ஏக்கர் நிலம், காஞ்சிபுரம் – செங்கல்பட்டு சாலையிலுள்ள பச்சையப்பன் ஆடவர் கல்லூரி அருகில் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ஓட்டல், தனியார் தொண்டு நிறுவனத்திற்கு கார் பார்க்கிங் என பல ஆயிரம் வருமானம் வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இந்த கோயிலில் கடந்த 20 ஆண்டுகளாக சுத்தம் செய்யும் பணி செய்து வரும் லட்சுமி (98) என்பவர் வயது முதிர்வின் காரணமாக அவ்வேலையை செய்ய முடியாமலும், அவருக்கும் போதிய ஊதியமும் வழங்கப்படவில்லை என கூறப்படுகின்றது. மேலும், தற்போது அவரது சகோதரி கன்னியம்மாள் (70) அக்கோவிலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார். ஆனால், அவருக்கு போதிய ஊதியம் வழங்காமல், நிர்வாகத்தினர் காலம் தாழ்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த கோயிலில் வரும் பக்தர்களிடம் கன்னியம்மாள் பணம் கேட்பதாகவும் கூறப்படுகின்ற நிலையில் 10 பேர் கொண்ட கோயில் நிர்வாகத்தினர் கன்னியம்மாளை வேலையில் இருந்து நிறுத்திவிட்டனர்.

இந்நிலையில் இவ்வளவு நாள் பணி செய்து எனக்கு எந்த பணமும் தராமல் ஒரு நிர்வாகத்தில் மட்டும் கோயிலுக்கு வரும் சொத்துக்களை கொள்ளை அடிக்க முயற்சிக்கின்றனர் என்று கூறி கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக அதிக வருமானம் உள்ள இக்கோயிலை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சேர்க்க வலியுறுத்தி இந்து சமய  அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் காஞ்சிபுரம் கலெக்டரிடமும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து  லட்சுமி, அவரது சகோதரி கன்னியம்மாள், கன்னியம்மாளின் மகள் நீலா, நீலாவின் மகள் பூமதி ஆகிய 4 பெண்கள் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இந்த புவனகிரி அம்மன் கோயிலை சேர்க்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காஞ்சிபுரம் டிஎஸ்பி ஜூலியஸ் சீசர் தலைமையிலான போலீசார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதன்பேரில் தர்ணா போராட்டத்தை அப்பெண்கள் கைவிடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும், காஞ்சிபுரம் மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், 10 பேர் கொண்ட கும்பல் மீது புகார் அளிக்கும்படி போலீசார் அறிவுறுத்தியதன்பேரில் அப்பெண்கள் அளித்த புகாரினை வாங்கிக்கொண்டு விசாரித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என போலீசார் அளித்த வாக்குறுதியை ஏற்று அப்பெண்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.