சிறு, குறு நிறுவனங்களுக்கும் அதிக முக்கியத்துவம் – தொழில்துறை, ஊழியர் சங்கங்கள் கருத்து

சென்னை: தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் குறித்து தொழில் துறையினர் மற்றும் ஊழியர் சங்கங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் (ஃபியோ) தலைவர் ஏ.சக்திவேல்: தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் தொழில்துறை மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் ஏற்றுமதியில் தமிழகம் 9.5 சதவீதம் பங்களிப்பு வழங்குகிறது. அதாவது, 30.5 பில்லியன் டாலர் அளவுக்கு உள்ளது. இந்நிலையில், தமிழக பட்ஜெட்டில் முக்கிய துறைகளுக்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளதன் மூலம், வரும் 2030-ம்ஆண்டுக்குள் 100 பில்லியன் டாலர் அளவை எட்டும்.

கோவை மெட்ரோ ரயில்சேவை திட்டத்தை திருப்பூர் வரை நீட்டிக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு உருவாக்குதல், ஏற்றுமதி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட்டுள்ளதன் மூலம், வரும் 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் பொருளாதாரத்தை அடைய வேண்டும் என்ற இலக்கை அதற்கு முன்பாகவே தமிழக அரசு அடையும்.

இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் (ஃபிக்கி) தலைவர் வேலு: பட்ஜெட்டில் தொழில்துறைக்கு ரூ.3,200 கோடி நிதி ஒதுக்கீடு, செங்கல்பட்டு உட்பட மூன்று நகரங்களில், தொழில்நுட்ப பூங்காக்கள் அமைத்தல், சென்னை எல்லைச்சாலைக்கு ரூ.1,800 கோடி ஒதுக்கீடு ஆகியவை குறிப்பிடத்தக்கது.

கடந்த 2 ஆண்டுகளில் 3.89 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், ரூ.2.70 லட்சம் கோடிக்கு ஒப்பந்தம் மேற்கொண்டது, 3-வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்காக ரூ.100 கோடி நிதி ஒதுக்கியதும் வரவேற்புக்குரியது. சிறு, குறு நிறுவனங்களுக்கும் பட்ஜெட்டில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.

இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) தலைவர் சங்கர்வானவராயர்: தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கும், அடிப்படை கட்டமைப்பு வளர்ச்சிக்கும் ஊக்கம் அளிப்பதாக உள்ளது. குறிப்பாக, செங்கல்பட்டு, திருநெல்வேலி, ஈரோடில் டைடல் மற்றும் சிப்காட் தொழிற் பூங்காக்கள் அமைப்பதன் மூலம் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதோடு, வேலைவாய்ப்பு தேடி நகரங்களுக்கு மக்கள் இடம் பெயர்வதும் தடுக்க முடியும்.

தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் தலைவர் கு.வெங்கடேசன்: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர்பான தேர்தல் கால வாக்குறுதிகளான புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவரப்படும், அரசு துறைகள், கல்வி நிறுவனங்களில் காலியாக உள்ள 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படுவது குறித்து பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்படாதது பணியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத்: சென்னை கிண்டியில் கட்டப்பட்டு வரும் ஆயிரம் படுக்கை வசதி கொண்ட கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை நடப்பாண்டில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது. அதே சமயம், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும், பல் மருத்துவர்கள், ஆயுஷ் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களின் பணிநிரந்தரம் குறித்து, அறிவிப்புகள் ஏதும் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது.

அகில இந்திய கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்க பொதுச் செயலாளர் மு.பன்னீர்செல்வம்: பட்ஜெட்டில் தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை, தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை அண்ணாசாலையில் 4 வழி மேம்பால சாலை, ரூ. 1,000 கோடியில் வடசென்னை வளர்ச்சித் திட்டம் ஆகிய அறிவிப்புகள் வரவேற்கத்தக்கதாகும்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆர்.ஆறுமுகம்: அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதி எரிபொருள் மானியம் மற்றும் அரசின் சமூகநலத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. பட்ஜெட்டில் அரசுப் போக்குவரத்துக் கழக நலன், போக்குவரத்து தொழிலாளர்கள் நலன் புறக்கணிக்கப்பட்டுள்ளது..

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலபொதுச் செயலாளர் வி.கோவிந்தராஜுலு: மாநில வருவாய்க்கு அடிப்படை ஆதாரமாய் இருக்கும் வணிகர்களுக்கான வளர்ச்சித் திட்டங்கள், தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் குறித்து இன்னும் விரிவான பட்ஜெட் ஒதுக்கீடு செய்திருந்தால் அது வணிகர்களுக்கு மகிழ்ச்சிக்குரியதாக இருக்கும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.