தடை செய்யப்பட்டவைகளுக்கு பதிலாக மாற்று பூச்சிக்கொல்லி மருந்துகள்: மாவட்ட கலெக்டர் தகவல்

திருவள்ளூர்: வேளாண்மை – உழவர் நலத்துறை மூலம் அபாயகரமான 6 பூச்சிக்கொல்லிகளை 60 நாட்கள் தடைசெய்து அரசாணை வழங்கப்பட்ட நிலையில் குளோரிபைரிபாஸ், மோனோகுரோடாபாஸ், புரபோனாபாஸ், அசிபேட், புரபோனாபாஸ் பிளஸ் சைப்பர்மெத்ரின், குளோரிபைரிபாஸ் பிளஸ் சைப்பர்மெத்ரின் ஆகிய அபாயகரமான நச்சுத்தன்மை கொண்ட பூச்சிக் கொல்லிகளை தற்காலிகமாக தடை செய்திட அரசிதழில் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. மேலும், மனித உயிருக்கும். விலங்குகளுக்கும் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் 3 சத மஞ்சள் பாஸ்பரஸ் பூச்சிக் கொல்லி மருந்துகளை நிரந்தரமாக தடை செய்யப்பட்டுள்ளது.

பூச்சிக் கொல்லி சட்டம் 1968ன் படி வழங்கப்பட்டுள்ள உட்பிரிவுகளின் படி இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் இம்மாதிரியான பூச்சிக் கொல்லிகளை 60 நாட்களுக்கு இருப்பு வைக்கவோ விற்கவோ கூடாது. அனைத்து பூச்சி மருந்து நிறுவனங்களும், விவசாயிகளும் இது குறித்து விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். எனவே தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு பதிலாக விவசாயிகள் மாற்று பூச்சிக்கொல்லி மருந்துகளை உபயோகிக்க வேண்டும்.

அதன்படி தடைசெய்யப்பட்ட  மோனோ குரோடாபாஸ் பூச்சிக் கொல்லி மருந்துக்கு பதிலாக பென்பியுராகார்ப் 3% ஜிஆர், பென்பியுராகார்ப் 40% இசி, தயோமீதாக்ஸம் 75% டபுள்யூ பி, கார்போசல்பான் 25% இசியும், புரபோனாபாஸ் பூச்சிக் கொல்லி மருந்துக்கு பதிலாக டெல்டாமெத்ரின் 2.8% இசி, லாம்டாசைக்ளோத்ரின் 5% இசி, பைபென்தரின் 10% இசியும், அசிபேட்பூச்சிக் கொல்லி மருந்துக்கு பதிலாக டைபென்தியுரான் 47.8% எஸ்சி, டைபென்தியுரான் 50% டபுள்யூபி, பிப்ரோனில் 5% எஸ்சி, கார்போசல்பான் 25% இசியும் பயன்படுத்த வேண்டும்.

புரபோனாபாஸ் பிளஸ் சைப்பர்மெத்ரின் பூச்சிக் கொல்லி மருந்துக்கு பதிலாக புளுமென்டமைடு 0.7% ஜிஆர், எமாமெக்டின் பென்சோயேட் 1.9% இசியும், குளோரிபைரிபாஸ் பிளஸ் சைப்பர்மெத்ரின் பூச்சிக் கொல்லி மருந்துக்கு பதிலாக இன்டோக்ஸ்கார்ப் 15.8% இசி, ஸ்பைனெட்டோரம் 11.7% டபுள்யூ/ டபுள்யூ எஸ்சி,  நவலூரான் 10% இசியும், குளோரிபைரிபாஸ் கார்டாப் ஹைட்ரோகுளோரைடு 4% கிரான்யூல்ஸ், குளோரன்ட்ரானில்ப்ரோல் 18.50% எஸ்.சியும், 3 சத மஞ்சள் பாஸ்பரஸ் பூச்சிக் கொல்லி மருந்துக்கு பதிலாக புரோமடியோலான் 0.25% சிபியும், புரோமடியோலான் 0.005% ஆர்பியும் பயன்படுத்த வேண்டும். மேலும் பூச்சிக்கொல்லி மருந்து சம்மந்தமான சந்தேகங்களுக்கு தங்கள் வட்டார வேளாண்மை அலுவலர், பூச்சிமருந்து ஆய்வாளரை  தொடர்பு கொண்டு பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.