விமான படையில் அக்னி வீரராக சேர விருப்பம் உள்ளவர்கள் மார்ச் 31-ம் தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிப்பு

டெல்லி: விமான படையில் அக்னி வீரராக சேர விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் வரும் 31-ம் தேதி வரை தங்களை பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை agnipathvayu.cdac.in இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். ஆன்லைன் எழுத்து தேர்வு மே 20 முதல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு நடைபெற்று வருகிறது. அதே போல தற்போது விமானப் படைக்கும் ஆள் சேர்ப்பு நடைபெற்று வருகிறது. இதில் சேர விரும்புவோர்கள் இன்று காலை 10 மணி முதல் agnipathvayu.cdac.in எனும் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று விமானப்படை தெரிவித்துள்ளது. இவ்வாறு விண்ணப்பிப்பதற்கு வரும் 31-ம் தேதி தான் இறுதி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சிக் காலம் உட்பட நான்கு ஆண்டுகள் சேவைக் காலத்திற்கு விமானப்படைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பதாரர்கள் பதிவு செய்யப்படுவார்கள்.

திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே IAF இல் அக்னிவீரராக பதிவு செய்ய தகுதியுடையவர்கள். அக்னிவீரர் IAF இல் நான்கு வருடங்கள் முழுவதுமாக திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்படமாட்டார். அக்னிவீரர் தனது பதவிக் காலத்தில் திருமணம் செய்து கொண்டாலோ அல்லது ‘திருமணமாகாதவர்’ என்ற சான்றிதழை வழங்கியும் ஏற்கனவே திருமணமானவர் எனக் கண்டறியப்பட்டாலோ அவர் சேவையிலிருந்து நீக்கப்படலாம். இதில் திருமணமாகாத இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு விண்ணப்பிப்பவர்களுக்கு வரும் மே 20 அன்று தேர்வு நடைபெறும். இதில் தேர்வு செய்யப்பட்டால் அக்னி வீரராக பணியாற்றும் காலத்தில் அவர்களால் திருமணம் செய்துகொள்ள அனுமதிக்கப்படமாட்டாது.

அதேபோல விண்ணப்பிக்கும் போது ‘திருமணமாகாதவர்’ எனும் சான்றிதழை இணைக்க வேண்டும். கல்வி தகுதியை பொறுத்த அளவில், 12-ம் வகுப்பில் அறிவியல், கணிதம், இயற்பியல் உள்ளிட்ட பாடங்களில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும். அதேபோல ஆங்கிலத்திலும் 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அக்னிவீர்வாயு திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டால், எந்த வகையான ஓய்வூதியம் அல்லது பணிக்கொடைக்கு தகுதி பெறமாட்டார். அக்னிவீரரின் சேவை பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து தொடங்கும். அக்னிவீரர் இந்திய விமானப் படையில் ஒரு தனித் தரவரிசையை உருவாக்குவார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.