TN Agriculture Budget 2023: வேளாண்துறை வளர்ச்சிகான பட்ஜெட் – வைகோ பாராட்டு

Agriculture Budget 2023: தமிழ்நாடு சட்டமன்றத்தில் மூன்றாவது முறையாக தாக்கல் செய்யப்பட்டு உள்ள வேளாண் நிதிநிலை அறிக்கை, வேளாண்மைத் தொழில் வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் தருகிறது. உணவு தானிய உற்பத்தியில் இலக்கைத் தாண்டி சாதனை படைத்துள்ள தமிழ்நாட்டில், விவசாயிகளை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்கள் வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளன என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இன்று அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் (TN Agriculture Minister MRK Panneerselvam) சட்டப்பேரவையில் 2023-24 ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை (Agriculture Budget for Tamil Nadu) தாக்கல் செய்தார். அப்பொழுது பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதுக்குறித்து திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

வேளாண் பயிர்க்கடன் வழங்க கூட்டுறவு சங்கங்களுக்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு; இலவச மின்சாரம் வழங்க ரூ.6536 கோடி ஒதுக்கீடு; பயிர் காப்பீட்டுத் திட்டத்திற்கு மானியம் ரூ.2337 கோடி ஒதுக்கீடு; காவிரிப் படுகை மாவட்டங்களில் நாகை -திருச்சி வேளாண் தொழில் வழித்தடம் அமைக்க ரூ.1000 கோடி ஒதுக்கீடு; கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்ணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை 2,504 கிராம ஊராட்சிகளுக்குச் செயல்படுத்த ரூ.230 கோடி ஒதுக்கீடு. மேற்கண்ட நிதி ஒதுக்கீடுகளால் வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு நம்பிக்கை அளிக்கும்.

60 ஆயிரம் சிறு, குறு மற்றும் நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு வேளாண் கருவிகள் வாங்க ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதும், ஆதி திராவிட, பழங்குடியின சிறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 விழுக்காடு மானியம் அளிக்கப்படும் என்ற அறிவிப்பும் வரவேற்கத்தக்கவை.

பனை, தென்னை, வாழை, பலா, மிளகாய், எண்ணெய் வித்துக்கள், சிறுதானியங்கள், பாரம்பரிய நெல் ரகங்கள் உற்பத்தி மற்றும் மல்லிகை, முருங்கை, குளிர்கால காய்கறிகள் சாகுபடியை ஊக்குவிக்கும் திட்டங்களால் வேளாண்மைத் தொழில் புத்தாக்கம் பெறும்.

நுண்ணீர் பாசன முறையை நிறுவ ரூ.450 கோடி மானியம் வழங்குவதும், ஆண்டு முழுவதும் தக்காளி, வெங்காயம், சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் பயன்பெறவும் திட்டங்கள் அறிவித்து இருப்பதும் பாராட்டுக்குரியவை ஆகும்.

இயற்கை வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு, நம்மாழ்வார் பெயரில் ஐந்து இலட்ச ரூபாயுடன், பாராட்டுப் பத்திரம் குடியரசு நாள் விழாவில் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் என்ற அறிவிப்பு இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும்.

அரசம்பட்டி தென்னை, கிருஷ்ணகிரி பன்னீர் ரோஜா, மூலனூர் குட்டை முருங்கை உள்ளிட்ட பத்து வேளாண் விளைபொருட்களுக்கு உலக அளவில் புவிசார் குறியீடு பெற நடவடிக்கை மேற்கொள்ள உறுதி அளிக்கப்பட்டு இருப்பதும் வரவேற்கத்தக்கது.

தமிழ்நாட்டில் வேளாண்மைத் துறை வளர்ச்சி மற்றும் உணவு உற்பத்திப் பெருக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருப்பது பாராட்டுக்குரியதாகும்.

இவ்வாறு தனது அறிக்கையில் 2023-24 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு வேளாண் நிதிநிலை அறிக்கை குறித்து ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.