அதிமுக பொதுக்குழு, பொதுச் செயலாளர் தேர்தல் வழக்குகள்.. 7 மணி நேரம் வைக்கப்பட்ட வாதங்கள்!

அதிமுக பொதுக்குழு தீர்மானத்துக்கு எதிரான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
பொது குழு தீர்மானங்கள், பொதுச் செயலாளர்
அதிமுக பொது குழு தீர்மானங்கள், பொதுச் செயலாளர் தேர்தல் ஆகியவற்றை எதிர்த்து ஓ.பி.எஸ்., மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தாக்கல் செய்த உரிமையியல் வழக்குகள் நீதிபதி கே.குமரேஷ்பாபு முன்பு இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது, ஓ.பி.எஸ். தரப்பிற்காக வழக்கறிஞர்கள் குரு கிருஷ்ணகுமார், மணிசங்கர் ஆகியோர் ஆஜராகினர்.
அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்காக சி.எஸ்.வைத்தியநாதன், விஜய் நாராயண் ஆகியோர் ஆஜராகினர். நீதிபதி குமரேஷ் பாபு வழக்குகளை விசாரிக்க தொடங்குவதற்கு முன்பாக, தூத்துக்குடியை சேர்ந்த வழக்கறிஞரும், அதிமுக உறுப்பினருமான ராம்குமார் ஆதித்தன் தரப்பில், அடிப்படை உறுப்பினர் என்கிற முறையில் தன்னையும் இந்த வழக்குகளில் இணைக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. பட்டியலிடப்பட்ட வழக்குகள் மட்டுமே இன்று விசாரிக்கப்படும் என தெரிவித்த நீதிபதி, வழக்கில் ராம்குமார் ஆதித்தனை இணைக்க மறுத்ததுடன், தனியாக வழக்கு தொடரும்படி அறிவுறுத்தினார்.
ஓபிஎஸ் தரப்பு
பின்னர் ஓபிஎஸ் தரப்பில் குரு கிருஷ்ண குமார் வாதங்களை தொடங்கினார். அவர் வாதத்தில்,
உறுப்பினர் முதல் ஒருங்கிணைப்பாளர் வரை ஓ.பி.எஸ்.-ன் அரசியல் பயணத்தை ஒவ்வொரு கட்டமாக விவரித்தார். முதல்வராக, நிதி அமைச்சராக பதவி வகித்துள்ளதாகவும், 1977 முதல் கட்சியில் உள்ள ஓபிஎஸ், பொருளாளர், ஒருங்கிணைப்பாளர் போன்ற முக்கிய பதவிகளை வகித்துள்ளதாகவும், கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்ட நேரங்களில் கட்சிக்காக முக்கிய பணியாற்றியுள்ளதாக தெரிவித்தார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவி என்பது 2026 வரை நீடிப்பதாகவும் வாதத்தை முன்வைத்தார்.

”கட்சியிலிருந்து என்னை நீக்கியும், பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வரவும், கடந்த ஜூலை 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொது செயலாளர் தேர்தலில் போட்டியிட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. எந்த வாய்ப்பும் அளிக்காமல், எந்த காரணமும் கூறாமல் கட்சியிலிருந்து நீக்கியது தன்னிச்சையானது, நியாயமற்றது. இரட்டை தலைமையை கலைக்கும் முடிவு தன்னிச்சையானது. ஜெயலலிதாவே நிரந்தர பொது செயலாளர் என அறிவித்த நிலையில், அவர் மறைவிற்கு பிறகு அதே பதவியை மீண்டும் கொண்டுவந்து, அப்பதவிக்கு போட்டியிட தகுதி நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது” என ஓபிஎஸ் தரப்பில் வாதங்களை வைத்தார்.
மேலும், ”பெரும்பான்மை உள்ளதால் எந்த முடிவும் எடுக்க முடியும் எனக் கூறி எடுத்துள்ள முடிவுகள் என்பது கட்சி நிறுவனரின் நோக்கத்துக்கு விரோதமானது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கிய தீர்மானத்துக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள்தான் பொது செயலாளர் பதவிக்கு உரியவரை தேர்வு செய்ய முடியும் என்ற விதியை பொதுக்குழு உறுப்பினர்கள் திருத்த முடியாது.  அதன்படி 2021ல் நடந்த தேர்தலில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் அடிப்படை உறுப்பினர்களால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்த முடிவு தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்பட்டு, அதை ஆணையம் அங்கீகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரால் தான் தற்போதைய பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருமே நியமிக்கப்பட்டனர்” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஜூன் 23 பொதுக்குழு
கடந்த ஜூன் 23 பொதுக்குழுவிற்கு இருவரும் இணைந்தே அழைப்பு விடுத்ததாகவும், அப்போது சில பொதுக்குழு உறுப்பினர்கள் இரட்டை தலைமையை மாற்றாக ஒற்றைத் தலைமை கொண்டு வர வலியுறுத்தியதாக தெரிவித்தார். கடந்த ஜூன் 24 பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்குகளில் பொதுக்குழுவுக்கு அனுமதி வழங்கிய நிலையில், ஒப்புதல் அளிக்கப்பட்ட தீர்மானங்களை தவிர வேறு எந்த முடிவும் எடுக்க கூடாது என உத்தரவிட்டதை சுட்டிக்காட்டி, ஆனால் ஒப்புதல் அளிக்கப்பட்ட அனைத்து தீர்மானங்களையும் நிராகரித்து பொதுக்குழு முடிவெடுத்ததாக தெரிவித்தார்.

இரட்டை தலைமை தேர்தலுக்கு ஒப்புதல் அளிக்க கோரும் தீர்மானம் கடந்த ஜூன் 23 பொதுக்குழுவில் முன் வைக்கப்படாத நிலையில், அதற்கு பொதுக்குழு ஒப்புதல் அளிக்கவில்லை என கூறிக்கொண்டு, அந்த பதவிகள் காலாவதியாகிவிட்டதாக எப்படி கூற முடியும் என கேள்வி எழுப்பிய ஓபிஎஸ் தரப்பில், இரு பதவிகளும் காலாவதியாகிவிட்டதாக உச்ச நீதிமன்றமும் கூறவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.
பொதுக்குழுக்களை எதிர்த்த வழக்குகளும், கட்சியின் அடிப்படை விதிகளில் திருத்தம் செய்ததை எதிர்த்த வழக்குகளும் நிலுவையில் உள்ளன என்றும், இரட்டை பதவிகள் காலாவதி ஆகிவிட்டதாக எந்த நீதிமன்றமும் தெரிவிக்கவில்லை என்றும், அதனால் கடந்த ஜூலை 11 பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என ஓபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிட தயார்
பொது செயலாளர் தேர்தலில் போட்டியிட அனைத்து உறுப்பினர்களுக்கும் உரிமை உள்ளது என எம்.ஜி.ஆர். விதிகளை வகுத்துள்ள நிலையில், எடப்பாடி பழனிச்சாமி பொது செயலாளர் இருக்கையில் அமர்வதற்காக தற்போது அந்த பதவிக்கு போட்டியிட கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக வாதிட்டார். அதற்காகவே கட்சியில் தொண்டர்கள் ஆதரவுடன் முக்கிய பதவியில் உள்ள தன்னை நீக்கியுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். பொது செயலாளர் தேர்தலில் போட்டியிடுவதற்கான நிபந்தனைகளை நீக்கினால் பொது செயலாளர், அந்த பதவிக்கு போட்டியிட தயாராக இருப்பதாகவும், அதில் தொண்டர்கள் முடிவெடுக்கட்டும் எனவும் ஓ.பி.எஸ். தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கட்சியின் உறுப்பினர்கள் பட்டியலை வெளியிட்டு பொது செயலாளர் தேர்தலில் போட்டியிட அனுமதித்தால், தேர்தலை எதிர்த்த மனுவை வாபஸ் பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. பொது குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கில் பதிலளிக்க இந்த நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்ட அதேநாளில், பொது செயலாளர் தேர்லை அறிவித்த காரணத்துக்காகவே பொது தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் ஓபிஎஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
மனோஜ் பாண்டியன் தரப்பு
மனோஜ் பாண்டியன் தரப்பில் வழக்கறிஞர் அப்துல் சலீம் ஆஜராகி, ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களுக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளிக்காததால், இன்றைய தேதி வரை இடைக்கால பொது செயலாளர் என்ற பதவி என்பதே இல்லை என தெரிவித்தார். எந்த காரணமும், எந்த குற்றச்சாட்டும் இல்லாமல் கட்சியிலிருந்து தன்னை நீக்கியுள்ளதாக தெரிவித்தார்.
கட்சியில் இருந்து நீக்கம் செய்ய ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு மட்டுமே அந்த அதிகாரங்கள் உள்ளன என்றும், பொதுக்குழுவுக்கு அதிகாரமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட விதிக்கப்பட்ட தகுதி நிபந்தனைகள் படி மூன்று பேர் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.
வைத்திலிங்கம் தரப்பு
வைத்திலிங்கம் தரப்பில் வழக்கறிஞர் மணிசங்கர் ஆஜராகி, எம்.எல்.ஏ, அமைச்சர், மாநிலங்களவை உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளை வகித்த தன்னை, முறையாக விளக்கம் கூட கேட்காமல் நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. பொது செயலாளருக்கு உள்ள அதிகாரங்கள் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு வழங்கப்பட்டதால், நீக்கம் தொடர்பாக அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டது. எந்த காரணத்துக்காகவும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியாக இருக்க முடியாது என்றும், காலாவதியாகிவிட்டதாக எவரும் கூறமுடியாது என்றும் வாதிடப்பட்டது.

இரு பதவிகளும் காலாவதியாகிவிட்டதாக கூறினால், முதலில் அவற்றை நிரப்பிய பிறகே, ஒற்றைத் தலைமை குறித்து முடிவெடுக்க முடியும் என்றும் வாதிடப்பட்டது. ஒற்றை தலைமை வேண்டும் என பெரும்பான்மையினர் விரும்பினாலும், அதை ஒருங்கிணைபாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இணைந்தே முடிவெடுக்க முடியும் என விளக்கம் அளிக்கப்பட்டது.
ஜே.சி.டி. பிரபாகர் தரப்பு
ஜே.சி.டி. பிரபாகர் தரப்பில் வழக்கறிஞர் ஸ்ரீராம் ஆஜராகி கட்சியில் இருந்து நீக்கும் முன் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை, நோட்டீஸ் அனுப்பப்படவில்லை, விளக்கமளிக்க அவகாசம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தீர்மானங்கள் நிறைவேற்றி 8 மாதங்களுக்கு பின் நீதிமன்றத்தை அணுகியதாக கூறியது தவறு என்றும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து உரிமையியல் நீதிமன்றத்தை நாடும்படி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த 15 நாட்களில் உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளதால் தாமதம் ஏதுமில்லை என விளக்கம் அளிக்கப்பட்டது.
தேர்தல் நடைமுறை துவங்கிய பின் நீதிமன்றம் தலையிட முடியாது என அதிமுக தரப்பில் வாதிடப்படுவதாகவும், ஆனால் வழக்கு நிலுவையில் இருந்த போது தான் தேர்தல் நடைமுறை துவங்கப்பட்டது என்கிறபோது, இயற்கை நீதி மீறப்பட்டால் தேர்தல் நடைமுறைகளில் நீதிமன்றம் தலையிடலாம் தெரிவிக்கப்பட்டது.
அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பு
அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் ஆஜராகி ஓபிஎஸ் தனக்கென தனி கட்சியை நடத்தி வருவதாகவும், அதிலிருந்து தங்களை நீக்கி, புதிதாக நிர்வாகிகளை நியமித்திருக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமிதான் இடைக்கால பொது செயலாளர் என உலகத்துக்கே தெரியும் என்றும், நீக்க நடவடிக்கையால் யாருக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
பொதுக்குழு உறுப்பினர்களின் குரலை ஒடுக்கும் வகையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும், தாங்கள் தான் உண்மையான கட்சி என்றால் தேர்தல் ஆணையத்தில், மக்கள் மன்றத்தில் பலத்தை நிரூபிக்க வேண்டும் என வாதிடப்பட்டது. ஓபிஎஸ் தனது சொந்த சகோதரரையே எந்த நோட்டீசும் கொடுக்காமல் கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. உச்சபட்ச அதிகாரம் பெற்ற பொதுக்குழு முடிவுகளே இறுதியானது என்பதால், அதன் முடிவுகளுக்கு கட்டுப்பட்டவர்களே கட்சியில் நீடிக்க முடியும் என்றும், கடந்த ஜூன் 23-ல் கட்சி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதும், கட்சி அலுவலகத்தை சூறையாடியதுமே, கடந்த ஜூலை 11 பொதுக்குழுவில் அவர்களை நீக்க தீர்மானம் நிறைவேற்ற காரணமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

எல்லா காலத்திலும் பொதுக்குழு கூட முடியாது என்பதால் தான், அவ்வப்போது பொது செயலாளர் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், தற்போது இடைக்கால பொது செயலாளர் ஆகியோர் அவசர காலங்களில் நடவடிக்கை எடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது. திமுக-வை எதிர்கொள்ள தெளிவான, வலுவான ஒற்றை தலைமை வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதே தவிர, பதவிகள் காலாவதி என அறிவிக்கவில்லை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டது.
பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் உள்ளிட்டோர் கட்சியில் இருந்து நீக்கம் குறித்து நிகழ்ச்சி நிரல் இல்லை, யார் முன்மொழிந்தார், யார் வழிமொழிந்தார் போன்ற விவரங்கள் இல்லை என கூறுவதாக குறிப்பிட்ட அதிமுக தரப்பு, ஜூலை 11 பொதுக்குழுவின் நிகழ்ச்சி நிரல் அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகின என தெரிவித்தார். அந்த நேரத்தில் ஓ.பி.எஸ். தரப்பினர் கட்சி தலைமை அலுவலகத்தில் தகராறு மற்றும் சூறையாடலில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததால் தொலைக்காட்சி பார்த்திருக்க வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதால் பொது குழு நடவடிக்கை எடுத்தது என்றும், அதற்கு பொது குழுவுக்கு அதிகாரம் உள்ளது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.
ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால் , அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை குறைகூற முடியாது என்றும், கட்சியினரின் குரலாக பொது செயலாளர் தேர்தல் நடப்பதால் அதை தடுக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது. வலுவான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்படுவதை வீழ்த்தும் நோக்கில் பொது செயலாளர் தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளனர் என்றும், அதனால் தடை விதிக்க கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது.
தமிழ்மகன் உசேன் தரப்பு
அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தரப்பில் வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி பெரும்பான்மையினர் கூடி, இனி இவை தான் விதிகள் என முடிவு செய்தால், அது தான் விதிகள் ஆக மாறுகின்றன என்றும், 52 ஆண்டு கால அதிமுக வரலாற்றில் 47 ஆண்டுகள் பொது செயலாளர் பதவி தான் இருந்துள்ளது என்றும், 5 ஆண்டுகள் மட்டுமே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் இருந்தன என குறிப்பிட்டார்.
மீண்டும் பொது செயலாளர் பதவி கொண்டு வரப்பட்ட நிலையில், அடிப்படை உறுப்பினர்கள் மூலம் தேர்வு செய்ய கால அவகாசம் ஏற்படும் என்பதால் இடைக்கால பொது செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்றும் தெரிவித்தார். மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை கொண்டு வருவதில் எந்த தவறும் இல்லை என்றும், உச்சநீதிமன்ற தீர்ப்பு காரணமாக பொது செயலாளர் தேர்தலுக்கான பாதை தெளிவாகியுள்ளதாக குறிப்பிட்டார். கட்சியில் எந்த ஆதரவும் இல்லாதவர்கள் போட்டியிடுவதை தடுக்கவே பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தகுதி நிபந்தனைகள் கொண்டு வரப்பட்டன என்றும், அவ்வாறு கட்சி முடிவு செய்த இந்த நிபந்தனைகளை நீதிமன்றம் சட்டவிரோதம் என கூற முடியாது என்றும் வாதிட்டார்.

ஓ.பி.எஸ். ஒருங்கிணைப்பாளராக இருந்தபோது, கட்சியின் கர்நாடக மாநில நிர்வாகியான பெங்களூரு புகழேந்தியை கட்சியில் இருந்து நீக்கும் முன் எந்த நோட்டீசும் கொடுக்கவில்லை என்றும், எனவே கட்சியை விட்டு நீக்க ஒரே மாதிரியான நடைமுறை தான் பின்பற்றப்படுகிறது என்றும் தெரிவித்தார். அதிமுக தரப்பில் அளிக்கப்பட்ட பதில்வாதங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், ஓபிஎஸ் அணியினர் தரப்பில் இறுதிவாதம் முன்வைக்கப்பட்டது.
இறுதிவாதம்
அதில், கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்பதற்காகவே நிகழ்ச்சி நிரலில் இல்லாத தீர்மானத்தை பொதுக்குழுவில் முன்வைத்து, சிறப்பு தீர்மானமாக நிறைவேற்றி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தன்னை கட்சியை விட்டு நீக்கிவிட்டு, வேட்பாளருக்கான நிபந்தனைகள் விதித்து பொது செயலாளர் தேர்தல் நடத்துவது என்பது ஒற்றை தலைமையை உருவாக்கும் நோக்கம் அல்ல என்றும், போட்டியே இல்லாமல் அந்த பதவிக்கு எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்ற எண்ணத்தில் தான் என்றும் குற்றம்சாட்டபட்டது. அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற தகராறில், சம்பவ இடத்திலேயே இல்லாதவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
தீர்ப்பு ஒத்திவைப்பு
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்திருப்பதாக அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்ய வரும் வெள்ளிக்கிழமை (மார்ச் 24) வரை அவகாசம் கேட்கப்பட்டது. அப்போது நீதிபதி இன்றைக்குள் விசாரணையை முடித்து, மார்ச் 24ஆம் தேதியான வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பிப்பதாக முடிவெடுத்துள்ளதை சுட்டிக்காட்டினார். அதன்பின்னர் வெள்ளிக்கிழமை காலைக்குள் எழுத்துப்பூர்வமான வாதரங்களை தாக்கல் செய்ய ஓபிஎஸ் தரப்பிற்கு உத்தரவிட்டு, வழக்குகளின் மீதான தீர்ப்பை தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.