ஏசி 3 அடுக்கு எகானமி வகுப்பு மீண்டும் அமல்

புதுடெல்லி: கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்ட ஏசி 3 அடுக்கு எகானமி வகுப்பு கட்டணத்தை மீண்டும் கொண்டு வருவதாக ரயில்வே அறிவித்துள்ளது. ரயில்களில் குறைவான கட்டணத்தில் குளிர்சாதன வகுப்பில் பயணிகள் பயணிக்க வசதியாக ஏசி 3 அடுக்கு எகானமி வகுப்பு கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டது. ‘3இ’ என குறிப்பிடப்பட்ட இந்த எகானமி வகுப்பில் ஏசி 3 அடுக்கு கட்டணத்தை விட 6 முதல் 8 சதவீதம் வரை குறைவாக இருக்கும். இதற்கிடையே, இந்த எகானமி வகுப்பு கட்டணம் கடந்த ஆண்டு நவம்பரில் ரத்து செய்யப்பட்டது.

ஏசி 3 அடுக்கில் வழங்கப்படும் படுக்கை விரிப்புகள் எகானமி வகுப்பிற்கு ஆரம்பத்தில் வழங்கப்படவில்லை. இந்த படுக்கை விரிப்பு வழங்கப்படுவதன் மூலம், எகானமி வகுப்பு கட்டணம் நீக்கப்படுவதாக ரயில்வே தனது முந்தைய அறிவிப்பில் கூறியிருந்தது. இந்நிலையில், இந்த எகானமி கட்டண முறை மீண்டும் கொண்டு வரப்படுவதாக தற்போது ரயில்வே அறிவித்துள்ளது. அதே சமயம், படுக்கை விரிப்புகள்  வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.