நம்மைக் காக்கும் தண்ணீரை நாம் காக்க வேண்டும்: உலக தண்ணீர் தினத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவுரை

சென்னை: ஆண்டுதோறும் மார்ச் 22ஆம் உலக தண்ணீர் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் மக்களுக்கு தண்ணீர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

உயிர் வாழ காற்று எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியமானது தண்ணீர். இப்பூவுலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் அடிப்படையானது தண்ணீர். உலகம் எந்தளவுக்கு உயர்ந்தாலும், மாறினாலும், மாறுதலை அடைந்தாலும் தண்ணீரின் தேவை என்பது மாறாது. அதனால் தான் நீரின்றி அமையாது உலகு என்றார் அய்யன் வள்ளுவர்.
தமிழ் நிலமானது தண்ணீரை தனது பண்பாட்டுடன் சேர்த்து வளர்த்து வந்துள்ளது. தமிழுக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியம் “நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம்” எனக் கூறுகிறது. தண்ணீர் என்று சொல்லாமல் ‘அமிழ்தம்’ என்றவர் திருவள்ளுவர். மனித உடலில் தண்ணீரின் அளவு கூடினாலும், குறைந்தாலும் தீமை ஏற்படும் என்ற மருத்துவப் புலமையுடன் ‘மிகினும் குறையினு நோய் செய்யும்’ என்றார் வள்ளுவர். திருமந்திரமும், தேவாரமும், திருவாசகமும் தண்ணீரின் அவசியத்தை அழகுத் தமிழில் சொல்கிறது.

நீர்நிலைகளின் அளவைப் பொருத்து பெயர் வைத்தவர் தமிழர். குட்டை, குளம், ஊருணி, ஏரி, ஏந்தல், கண்மாய், ஆறு, நீரோடை, கடல் என்று பிரித்துப் பெயர்சூட்டினர் தமிழர். இவை எல்லாமே நீர் உள்ள இடம்தான். ஆனால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தன்மை கொண்டது. கடல் நீர் முன்னீர் என்றும் ஆற்றுநீரை நன்னீர் என்றும் குடிநீரை இன்னீர் என்றும் குளிர்ந்த நீரை தண்ணீர் என்றும் நீரின் தன்மைக்கு ஏற்ப பெயர் சூட்டிய இனம் தமிழர் இனம். உடம்பைக் குளிர்வித்தலே குளித்தலானது. தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே என்பது தமிழ்ப் பழமொழி.

நமது உடலில் அனைத்து செயல்பாடுகளும் முறையாக செயல்பட தண்ணீர் மிகமிக அவசியம். உணவின்றி கூட மனிதரால் பல நாட்கள் இருக்க முடியும். ஆனால் நீரின்றி இருக்க முடியாது. இத்தகைய உயிர்நாடியான தண்ணீரை நாம் காக்க வேண்டும். அதாவது நம்மைக் காக்கும் தண்ணீரை நாம் காக்க வேண்டும். நீரை வீணாக்கக் கூடாது. பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். தூய்மையாக வைத்திருக்க வேண்டும். நீர்நிலைகளை மாசுபடாமல் காக்க வேண்டும். தூர்வாரி வைத்திருக்க வேண்டும். இன்றைக்கு ஒரு நாட்டின் வளமானது நீர் வளமாக, இயற்கை வளமாக கணக்கிடப்படும் சூழலுக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். புவி வெப்பமயமாகி வருகிறது. இதிலிருந்து நம்மைக் காப்பது தண்ணீர் தான். நீர் இல்லையேல் உயிர் இல்லை என்பதை நீங்கள் அனைவரும் உணர வேண்டும். தண்ணீரைக் காப்போம். தாய்நிலத்தைக் காப்போம். நன்றி. வணக்கம்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

வீடியோ இணைப்பு:

— TN DIPR (@TNDIPRNEWS) March 22, 2023

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.