பாஜக குறி வைக்கும் தொகுதிகள்: எல்லாம் சரியா நடந்தா 39 இல் 10 உறுதியாம்!

அதிமுக கூட்டணியில் பாஜக வெளியேறுவது தொடர்பான பேச்சுக்கள் தமிழக அரசியலில் அதிகம் கேட்க தொடங்கிவிட்டன.

‘தமிழ்நாட்டிலும் பாஜக தலைமையில் தான் கூட்டணி இருக்க வேண்டும். கூட்டணி தொடர்பாக சமரசம் செய்யும் நிலை வந்தால் கட்சியின் தலைவராக அல்லாமல் தொண்டனாக பணியாற்றுவேன்’என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நிர்வாகிகளிடம் வெளிப்படையாக பேசியதே இது தொடர்பான விவாதம் பொது வெளியில் எழ வேண்டும் என்பதற்காகத் தான் என்கிறார்கள்.

அண்ணாமலையின் திட்டம் என்ன?

அதற்கேற்ப அதிமுக கூட்டணியுடனான உரசல்கள் மெல்ல வெளியே தெரிய தொடங்கியுள்ளன. அண்ணாமலையின் திட்டம் என்ன, எந்த நம்பிக்கையில் இப்படியொரு முடிவை எடுக்கிறார் என்று விசாரிக்கையில் முக்கிய தகவல்கள் கிடைக்கின்றன.

திமுக, அதிமுக ஆகிய இரு பிரதான கட்சிகளுக்கான மாற்று என்பதே பாஜகவின் இலக்காக உள்ளது. இந்த முடிவோடு தான் ஒவ்வொரு கட்சிகளும் தமிழ்நாட்டில் தொடங்கப்படுகின்றன. ஆனால் ஒரு சில தேர்தல்களில் இந்த இரு கட்சிகளில் ஏதேனும் ஒன்றில் கூட்டணி வைத்து சில எம்.எல்.ஏ., எம்.பிக்களை பெற்று கட்சி நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விடுகின்றனர்.

திராவிட கட்சிகளுக்கு மாற்று யார்?

தேமுதிக, பாமக ஆகியவை கடந்த கால உதாரணங்கள் என்றால் மநீம நிகழ் கால உதாரணமாக மாறிக் கொண்டிருக்கிறது. நாம் தமிழர் மட்டும் தொடர்ந்து தனித்து பயணிக்கிறது. ஆனால் அந்த கட்சி திமுக, அதிமுக மட்டுமல்லாமல் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என்று அறிவித்து நிற்கின்றனர். பாஜக தமிழ் நாட்டில் கால் ஊன்ற வேண்டும் என்றால் அதிமுக, திமுகவுக்கு எதிராக ஒரு அணியை கட்ட வேண்டும் என நினைக்கிறாராம் அண்ணாமலை.

2014ஆம் ஆண்டு பாஜக தலைமையில் மூன்றாவது அணி அமைந்த போது அந்த கூட்டணி இரண்டு இடங்களில் வெற்றி பெற்றது. கிட்டதட்ட 19 சதவீத வாக்குகளை அந்த அணி பெற்றது. திமுக அணிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. இந்த பத்தாண்டுகளில் பாஜக தமிழ்நாட்டில் மேலும் வளர்ந்துள்ளது. எனவே நமது பலம் என்ன என்பது தனியாக அணி அமைக்கும் போது தான் தெரியும். என்று டெல்லி மேலிடத்துக்கு அண்ணாமலை தரப்பு கூறியுள்ளதாக சொல்கிறார்கள்.

பாஜக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள்?

பாமக, அதிமுக ஓபிஎஸ் அணி, சசிகலா, அமமுக, தேமுதிக, புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகளை பாஜக தலைமையில் இணைத்து அணி அமைத்தால் குறைந்தது பத்து தொகுதிகளில் வெற்றி பெறலாம் என்கிறார்கள். கோவை, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் பாஜக வலுவாக இருக்கிறது. தேமுதிக, பாமக கூட்டணியால் வடக்கு மாவட்டங்களில் ஆதிக்கம் செலுத்த முடியும்.

பத்து தொகுதிகள் இவை தான்!

ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் வந்தால் தெற்கு பகுதியில் திமுக, அதிமுகவை அலற விடலாம். புதிய தமிழகம் கட்சியின் மூலம் தேவேந்திரகுல வேளாளர்கள் சமூக வாக்குகள் பல தொகுதிகளில் கிடைக்கும். எனவே கோவை, கன்னியாகுமரி, தேனி, தென் சென்னை, வேலுார், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், தென்காசி, சிதம்பரம் என பத்து தொகுதிகளில் வெற்றி பெறலாம் என கணக்கு போடுகிறார்கள்.

இதில் ஒன்றிரண்டில் சறுக்கினாலும் சொல்லிக் கொள்ளும் படியான வெற்றி உறுதி. அந்த வெற்றி பாஜகவுக்கு கிடைத்த வெற்றி என முழுவதும் உரிமை கோர முடியும். 2014இல் மத்தியில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்தே தமிழ்நாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக கால் ஊண்றத் தொடங்கிவிட்டோம். பெரிய நகரங்கள் முதல் சிற்றூர்கள் வரை பாஜகவை கொண்டு சென்றுள்ளோம். அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் இவ்வளவு கால நமது உழைப்பை அவர்கள் உரிமை கொண்டாட வாய்ப்பு உள்ளது என்றும் மேலிடத்திற்கு சொல்லியுள்ளார்களாம்.

கணக்கு போடுவது கட்சிகள் என்றாலும் விடை அளிப்பது மக்கள் தான் என்பதால் இப்போதே எந்த முடிவுக்கும் வர முடியாது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.