பிரிட்டன் துாதரகத்தில் நடவடிக்கை பாதுகாப்பு தடுப்புகள் அகற்றம்| Action at the British Embassy to remove security barriers

புதுடில்லி, பிரிட்டனில் உள்ள இந்திய துாதரகத்தில், சமீபத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் அத்துமீறி நுழைந்து நம் தேசியக் கொடியை அகற்றிய நிலையில், புதுடில்லியில் உள்ள அந்நாட்டு துாதரக வாசலில் இருந்த பாதுகாப்பு தடுப்புகள் நேற்று அகற்றப்பட்டன.

காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங்கை கைது செய்யும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள இந்திய துாதரகம் முன், அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்.

அப்போது, துாதரகத்தில் அத்துமீறி நுழைந்த அவர்கள், அங்கிருந்த நம் தேசியக் கொடியை அகற்றினர்.

இது தொடர்பான ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து அந்நாட்டு அரசுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்ததை அடுத்து, துாதரகத்தில் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

இந்நிலையில், புதுடில்லியிலுள்ள பிரிட்டன் துாதரகத்தின் வெளியே இருந்த பாதுகாப்பு தடுப்புகள் நேற்று திடீரென அகற்றப்பட்டன.

இது குறித்து கருத்து தெரிவித்த புதுடில்லி போலீசார், ‘துாதரகத்துக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறைபாடுகள் இல்லை. பொதுமக்களுக்கு இடையூறாக இருந்ததால், இந்த தடுப்புகள் அகற்றப்பட்டன’ என கூறினர்.

பிரிட்டனில் உள்ள இந்திய துாதரகத்தில் பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்ட நிலையில், இதற்கு பதில் நடவடிக்கையாக இங்குள்ள அந்நாட்டு துாதரகத்தில் தடுப்புகள் அகற்றப்பட்டதாக கூறப்பட்டது.

இப்படி இந்த தடுப்புகள் அகற்றப்பட்ட சில மணி நேரத்திலேயே, மத்திய லண்டனில் உள்ள நம் நாட்டு துாதரகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன.

இந்நிலையில், காலிஸ் தான் ஆதரவாளர்கள் துாதரகம் முன் திரண்டு போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, கூடுதல் தடுப்புகள் போடப்பட்டு உள்ளன.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.