மரண தண்டனையை நிறைவேற்ற மாற்று வழிகளை ஆராயலாம் – மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் யோசனை

புதுடெல்லி: தூக்கு தண்டனை கொடூரமானதா என்பது குறித்து விவாதம் நடத்துமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மரண தண்டனையை நிறைவேற்ற வலி குறைவான வழி ஏதாவது இருக்கிறதா என்பது குறித்து தகவல் சேகரிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மரண தண்டனையை தூக்கு தண்டனையாக நிறைவேற்றாமல் வேறு வழிகளில் நிறைவேற்றலாம் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை நேற்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு வந்தது.

அப்போது மூத்த வழக்கறிஞர் ரிஷி மல்ஹோத்ரா, சட்ட ஆணையத்தின் அறிக்கை ஒன்றை படித்துக் காட்டினார். அதில் இந்தியாவில் நிறைவேற்றப்படும் மரண தண்டனையானது மிகவும் கொடூரமானது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ரிஷி மல்ஹோத்ரா தெரிவித்தார்.

இதையடுத்து தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறியதாவது: நாட்டில் நிறைவேற்றப்படும் மரண தண்டனை என்பது தூக்கு தண்டனையாகும். இது மிகவும் கொடூரமானதா என்பது தொடர்பாக விவாதம் நடத்த மத்திய அரசு ஆலோசிக்க வேண்டும்.

மேலும் மரண தண்டனையை, குறைந்த வலியுடன் நிறைவேற்றுவதற்கான மாற்று வழிகள் உள்ளனவா என்பது குறித்தும் மத்திய அரசு தீவிரமாக பரிசீலிக்கவேண்டும். இதுதொடர்பாக விவாதம் நடத்தி, தகவல்களை சேகரிக்க வேண்டும். இந்த விவரங்களைச் சேகரித்து நீதிமன்றத்தில் ஆவணமாக தாக்கல்செய்ய அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணிக்கு உத்தரவிடுகிறேன்.

தூக்கு தண்டனையால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு நடத்தி அதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கவேண்டும்.

மரண தண்டனை பெற்ற குற்றவாளிகளுக்கு வலியற்ற முறையில் மரணத்தை நிறைவேற்றக் கோரும் விஷயத்தில் உச்ச நீதிமன்றம் திறந்த மனதுடன் உள்ளது. தூக்கு தண்டனைக்குப் பதிலாக துப்பாக்கியால் சுடுதல், மரண ஊசி அல்லது மின்சார நாற்காலி போன்றவை குறித்து பரிசீலிக்கலாம் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த விஷயத்தில் உடனடியாக முடிவெடுக்க முடியாது. எனவே, இதுகுறித்து நாங்கள் பரிசீலிக்கிறோம். இந்த விஷயத்தில் நமக்கு போதுமான அறிவியல் தரவுகள் தேவை.

இதுதொடர்பாக கமிட்டி அமைத்து விசாரிக்கலாம். எனவே,இந்த வழக்கை வேறு ஒரு தேதிக்கு தள்ளிவைக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து வழக்கை மே 2-ம் தேதிக்கு தலைமை நீதிபதி தள்ளிவைத்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.