சினிமா விருதுகள் 2022 – திறமைக்கு மரியாதை

சினிமா விருதுகள் 2022 – திறமைக்கு மரியாதை
நட்சத்திரம் நகர்கிறது

ஒரு திரைப்படத்தின் மூலம் ஆழமும் விரிவும் அடங்கிய அரசியல் உரையாடலை நிகழ்த்த முடியும் என்று நிரூபித்த படம் ‘நட்சத்திரம் நகர்கிறது.’ ஒடுக்கப்பட்டோர் உரிமை அரசியலையும், பெண்ணுக்கான சுய வெளியையும் முன்னிறுத்தி உரையாடலை முன்னகர்த்தும் ரெனே, சமூகக் கட்டமைப்புகளுக்கு நடுவே இடறி விழுந்து, சரி தவறுகளுக்கு மத்தியில் தவழ்ந்து தடுமாறும் அர்ஜுன், காதல் தெள்ளிய நீர் போல – அள்ளியருந்தும் அனைவரின் தாகத்தையும் தீர்க்கும் என பால் கட்டுப்பாடுகளை உடைத்தெறியும் கற்பகம், டயானா, சில்வியா, ஜோயல், லட்சியத்திற்கும் கள நிலவரத்திற்குமான வேறுபாடுகளை அறியா இனியன் என, தமிழ் சினிமா இதுவரை ‘கவனமாய்’ தவிர்த்த கதாபாத்திரங்களுக்கான வெகுஜன பிரசார மேடையாய் மிளிர்ந்தது படம். சாதியக் கட்டுமானமும் ஆணாதிக்க அகம்பாவமும் ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் நிகழ்த்திய சுரண்டலை அச்சாரமாய் வைத்தே இயங்கிவருகின்றன என்கிற நிலையில், பெண்களை வைத்தே அதற்கெதிரான அரசியல் பிரகடனத்தை முன்னெடுத்த வகையில் பா.இரஞ்சித்தின் இந்தப் படைப்பு மிக முக்கிய ஆவணமாகிறது. நட்சத்திரம் நகர்கிறது – இந்திய சினிமாவில் என்றென்றும் ஒளி குறையாமல் மின்னிக்கொண்டிருக்கும் துருவ நட்சத்திரம்.

கடைசி விவசாயி

வணிகரீதியில் எளிய மக்களைக் குறிவைத்து வெளிவரும் படங்களுக்கு மத்தியில், எளியவர்களை வைத்தே படமெடுத்துப் பொதுச்சமூகத்துக்குப் பாடம்புகட்டிய வாத்தியார் மணிகண்டன். சினிமாவின் ஜிகினாக் கனவுகள் எதுவும் பாதித்திடாத உலகத்திலிருந்து ஒரு தெக்கத்திக் கிழவரை அழைத்துவந்து அறிமுகப்படுத்தி, கொஞ்சம் கொஞ்சமாய் நாம் தொலைத்துக்கொண்டிருக்கும் பண்பாட்டு அசைவுகளை நினைவில் நிறுத்தி, திரையில் மணிகண்டன் ஆடியது புதுமையான புறக்கூத்து. தர்க்கம், மிகை யதார்த்தவாதம் ஆகிய இரு இணையாக்கோடுகளுக்கு இடையே முதிர்ச்சியாய் ஒரு வரப்பை வெட்டி அதில் அவர் படைத்த நல்லாண்டியும் ராமையாவும் வெள்ளாமை செய்ய, அறுவடையானது ஒரு உலகத்தர சினிமா. பரபரப்பும் இரைச்சலுமாய் தடதடக்கும் தார்ச்சாலையை விடுத்து, மணிகண்டன் அழைத்துப்போன இந்த வண்டிப்பாதையில் தமிழுலகம் மொத்தமும் நிதானமாய்ப் பயணித்து இளைப்பாறியது. மண்மீதான அரசியல், நகரமயமாக்கலின் ஆபத்தான மறுபக்கம், பாமரர்களைத் தன் அலட்சியத்தால் அல்லாடவிடும் அரச அணுகுமுறை என சர்வதேசச் சிக்கல்களை கிராமிய ஏரில் பூட்டி உழுது தீர்வுக்கான தேடலை நமக்குள் விதைத்த மணிகண்டன், யதார்த்தத்தைத் திரைமொழியாய் மாற்றிய முக்கியமான கலைஞன்.

கமல்ஹாசன்

கானகத்தின் அரசன் என்பதைக் காட்ட சிங்கம் கர்ஜித்துக்கொண்டிருக்கத் தேவையில்லை. அதன் இருப்பு ஒன்றே போதும், ஆள்வது யார் என்பதை நிறுவ! இந்திய சினிமாவில் கமலின் இருப்பும் அப்படித்தான்! ஆனாலும் திரையில் அவரின் ஆற்றலைக் கண்டு மெய்சிலிர்த்திருந்த மனங்கள் வனவாசம் முடிந்து நாயகன் மீண்டும்வரக் காத்திருந்தன. வந்தார் இடி முழங்க, வென்றார் முந்தைய வசூல்கணக்குகள் ஒதுங்க! ‘பத்தல பத்தல’ என அரங்கம் அதிர இறங்கிக் குத்தாட்டம் போட்டது சகலகலா வல்லவன் என்றால், பேரனை மடியில் சாய்த்துக்கொண்டு மகனுக்காக விழியோரம் ஒரு துளிக் கண்ணீரைக் கமல் உதிர்த்ததும் ஒரு செவ்வியல் தருணம்தான். மனிதன் இதுவரை பகுத்து வைத்திருக்கும் அத்தனை உணர்ச்சிகளையும் இரண்டாம் பாதியின் ஒற்றைக் காட்சியில் இவர் கொட்டித் தீர்க்க, அதைக் கண்டு தன்னைத் தகவமைத்துக்கொண்டது நடிப்பிற்கான அகராதி. ‘நீயும் வுட்றாத, நானும் வுட்றமாட்டேன்’ என இறுதிக்காட்சியில் அவர் சொன்ன நம்பிக்கை வார்த்தைகள் அந்தக் கதாபாத்திரத்தையும் தாண்டி அவர் இறுகப் பற்றியிருக்கும் சினிமாவுக்கானதாகவும் சேர்த்தே ஒலித்தது.

சாய் பல்லவி

ஒப்பனையில்லாத அசல் குணம், ஒப்பிட ஒருசிலரே இருக்கும்படியான நடிப்பாற்றல் – இரண்டின் சரிசமக்கலவையான சாய் பல்லவி, கார்கியில் எழுப்பியது வன்முறைக்கு எதிரான வலிய குரல். தன் உறவிற்காக நீதி கேட்டு நடந்து, தவறு செய்தவர்களை நெற்றிக்கண் திறந்து எரிக்கும் கண்ணகியின் சமகாலப் பதிப்பே இந்த கார்கி. அதற்கு அவ்வளவு அழகாய் நியாயம் சேர்த்திருந்தார். முதல்பாதியில் அரச நிறுவனங்களைப் பார்த்து மிரளும் குழந்தையின் மருட்சி, அடுத்தபாதியில் அப்படியே உருமாறி அறத்தின்பால் நிற்கும் திண்ணம் என முகத்தில் பிரவாகமாய் ஊற்றெடுத்த உணர்ச்சிகளைக் கண்டு அசந்துபோனார்கள் ரசிகர்கள். தன் தந்தைக்காக நீதி கேட்டு நடத்தும் நெடும் பயணமானாலும், தவறிழைத்தது யார் என்று தெரிந்து அறத்தின் பக்கம் நிற்கும் உறுதியானாலும், ‘கார்கி’ என்ற பாத்திரத்துக்குக் கனம் சேர்க்கும் வகையில் நடித்திருந்தார் சாய் பல்லவி.

ஏ.ஆர்.ரஹ்மான்

கடந்த ஆண்டின் பிற்பாதியில் தமிழகத்தை மையம்கொண்ட இசைப்புயல் கரைகடந்து உலகம் முழுவதிலுமுள்ள தமிழர்களையும் ஆட்டுவித்தது. துள்ளல் இசையில் ஸ்ரேயா கோஷலின் தேன்மதுரக் குரலில் வெளியான ‘தும்பி’ வருடிச் சென்ற நெஞ்சங்கள் எத்தனையோ! தொடக்கப் பாடல்களின் வழக்கமான இலக்கணங்களைக் கலைத்துப்போட்டு ஆடுவது இவருக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு. அதனாலேயே ‘ஆதீரா’ எண்ணற்ற கைப்பேசிகளின் அழைகுரலானது. கோப்ராவின் வேகமும் வீரியமும் எடுபட ரஹ்மானின் பின்னணி இசையும் முக்கிய காரணம். இதுநாள் வரையிலான டான் படங்களிலெல்லாம் கெத்தாய் ஒலித்த தீம் மியூசிக்கை ஓரங்கட்டி மெலடி வழியே ‘வெந்து தணிந்தது காடு’ இடைவேளைக் காட்சியில் வித்தை காட்டி, எப்போதும் பிரிவின் துயர் பேசும் மெல்லிசையை ஏறக்கட்டி அங்கே குத்துத் தாளத்தை ஓடவிட்டு என ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் இவர் நிகழ்த்தியது இசைச் சடுகுடு! பண்டைய இசைக்கென தீர்மானமான ஒப்பீடுகள் கிடையாது. அனுமானத்தின் அடிப்படையில் குறிப்புகள் தீட்டி, அதில் நம் பாரம்பரியக் கூறுகளையும் மூலம் கெடாமல் இணைக்க வேண்டும். ரஹ்மானைப் போன்ற மூத்த கலைஞருக்கு இது தீயின் மீது நடக்கும் வேலை. தவம் போல அதைச் செய்துகாட்டினார் பொன்னியின் செல்வனில். தொட்டதெல்லாம் தங்கமாய் மாறும் இவரின் கைபட்டு உயிர் வந்து எழுந்தது வரலாற்றின் ஒரு பக்கம். ஏ.ஆர்.ரஹ்மானின் இசை, இன்பத்திலும் துன்பத்திலும் தமிழர்களைத் தாங்கும் கருவறை!

யோகிபாபு

காமெடியோ, காதலோ, அரசியல் கருத்தோ, குணச்சித்திர வேடமோ… இயக்குநர்களின் கதை முன் நகர இன்றைய தேதியில் தேவை யோகிபாபு எனும் சாரதி. வகைக்கு ஒன்றென ஏரியா பிரித்து விளையாட்டுக் காட்டிக்கொண்டிருந்தவர் ‘லவ் டுடே’யில் நமக்குக் கொடையாய்க் கொடுத்தது இவை அத்தனையும் கலந்த காமெடி காக்டெயிலை. ‘ப்ச்’ என்கிற சின்ன சத்தம் என்ன செய்துவிடும்? தியேட்டரையே குலுங்கிச் சிரிக்க வைக்கும், அந்தச் சத்தத்தை யோகிபாபு எழுப்பினால்! பொதுப்புத்தி, உருவகேலியினால் தாழ்வு மனப்பான்மையில் மருகும் ஒருவன் அதே பொதுச்சமூகத்தோடு இயைந்து போக என்னவெல்லாம் செய்வானோ, அதை அப்படியே அவர் உடல்மொழி ஒத்திருக்க, எஞ்சிய இடங்களில் தன் டிரேட்மார்க் ஒன்லைனர்களை இட்டு நிரப்பி அரங்குகளை அதிர வைத்தார். இறுதிக்காட்சியில் உடற்கேலி குறித்து உடைந்த குரலில் அவர் பேசும்போது சிலருக்கு அது தங்களையே பார்த்துக்கொள்ள முடிந்த பிம்பம், சிலருக்கு அது மிகவும் அவசியமான பாடம்.

லால்

அதிகாரத்திற்கென ஒரு நிரந்தர உருவம் கிடையாது. காலத்திற்கேற்றாற்போல அதன் கருவிகள் மாறிக்கொண்டே இருக்கும். திரையில் அதே அதிகார ஆணவத்திற்கென ஒரு முகம் கொடுத்தால் அதுதான் ‘டாணாக்காரர்’ ஈஸ்வரமூர்த்தி. ‘அடிபணி அல்லது செத்துப்போ’ என்கிற கட்டளையை விதைக்கும் சிரிப்பே அறியாத உதடுகள், எதிரில் இருப்பவர்களை பயமுறுத்தும் உடல்மொழி என லால் நடிகனாய் ஈஸ்வரமூர்த்திக்குள் கூடுவிட்டுக் கூடுபாய்ந்த விதம் மிரட்டல்! படிநிலையில் மேலிருப்பவர்களின் கையில் வளைந்து நெளிந்து, தனக்குக் கீழிருப்பவர்களை ஈவு இரக்கமில்லாமல் அடித்துத் துன்புறுத்தும் சாட்டையாய் அவர் மாறி நின்றதைக் கண்ட கண்கள் அனைத்தும் தூக்கம் தொலைத்தன. இறுதிக்காட்சியில், உடலளவில் வென்றுவிட்ட மிடுக்கும், மனதளவில் கூனிக்குறுகிப் புழுங்கிய தவிப்புமாய் அவர் தன் அடுத்த தலைமுறைக்கு எடுத்தது நடிப்பிற்கான விளக்க விரிவுரை. ‘‘சட்டம் தன் கடமையைச் ‘சரியாய்’ செய்யத் தேவை மனச்சாட்சியற்ற காக்கிச்சட்டை’’ என்கிற அரசியல் பாடத்தைத் தன் முதிர்ச்சியின் வழி நமக்குக் கற்றுக்கொடுத்த லால், கலையில் ஆழமாய் வேர்விட்டு நின்றிருக்கும் ஆலம்.

ஐஸ்வர்யா ராய்

தமிழ்ப்பரப்பில் இதுநாள் வரையிலான அனைத்து நாயக பிம்பங்களுக்கும் இருக்கும் விசிறிக்கூட்டம் ஓர் எதிர்மறை கதாபாத்திரத்திற்கும் இருக்குமென்றால், அது பொன்னியின் செல்வன் நந்தினிதான். அழகும் அறிவும் ஒருசேரப் பெற்ற நந்தினிக்கு திரையில் ஐஸ்வர்யா ராயைத் தவிர வேறு யாரும் பொருந்தியிருக்க முடியாது. ஆற்றங்கரையில் ஆதித்த கரிகாலன் தொடங்கி சுரங்கப்பாதை வாசலில் வந்தியத்தேவன், நிலவறை இருளில் பெரிய பழுவேட்டரையர் தொட்டு இந்த மாயமோகினியின் மந்திரத்திற்குக் கட்டுப்பட்டவர்கள் திரை தாண்டியும் ஏராளமிருந்தார்கள். ஆதரவென யாருமில்லாமல் தகுதி பார்த்து வஞ்சிக்கப்படும் ஒரு பெண்ணின் கோபம் அரசையே அசைக்கும் வீரியம் கொண்டதாய் இருக்கும் என்பதை உணர்த்த அவருக்கு வசனங்கள் தேவையாய் இல்லை… அரியணையை வெறித்துப் பார்க்கும் ஒற்றைக்காட்சி போதுமானதாய் இருந்தது! உள்ளே பொருமலும் வெளியே புன்னகையுமாய் அவர் குந்தவையை வரவேற்கும் காட்சி எழுப்பிய சூட்டில் நமக்கும் காய்ச்சல் கண்டது. தான் தாங்கப்போகும் கிரீடத்தின் கனம் தெரிந்தும், தன்மேல் கொண்ட நம்பிக்கையால் அதை ஏற்று நம்மை ஆட்சி செய்த ஐஸ்வர்யா ராய், கலையின் தலைமகள்!

காளி வெங்கட்

‘கார்கியின் இந்திரன்ஸ் போல’ என இனி வரும் கலைஞர்களுக்கு உதவியாய் குணச்சித்திர வேடத்திற்குப் புது எல்லைகள் வரைந்தார் காளி வெங்கட். எந்தப் பின்னணியும் இல்லாத ஒரு சாமானியன், வாழ்தலுக்கெனத் தேவை ஒரே ஒரு பற்றுதல் என அதைத் தேடி ஓடி, தட்டுத் தடுமாறி இறுதியில் கரைசேர்வானே, அவன் சந்திக்கும் புறக்கணிப்பும் அது கொடுக்கும் பரிதவிப்பும் அவர் மூலம் செம்மையாய் வெளிப்பட்டு நம் ரசனையைச் செழுமைப்படுத்தியது. ‘கையை விட்டுப் போக என் கைல என்ன சார் இருக்கு?’ என அவர் வினவியபோது நமக்குள்ளும் ஏதோவொன்று உடைந்தது. ‘ஏங்க… ஏங்க…’ என சாய்பல்லவி பின்னால் ஓடும்போது, சிறைக்கும் நீதிமன்றத்துக்குமாய் அல்லாடும்போது, கழிப்பறையில் சீனியரின் ஏச்சுகளை எதிர்கொண்டு நிற்கும்போது எனக் காட்சிக்குக் காட்சி நாம் கண்டு வளர்ந்த/கடந்துவந்த நடுத்தர வர்க்கத்து இளைஞரின் அத்தனை குணாதிசயங்களையும் பிரதிபலித்து அசரடித்தார். காளி வெங்கட், படைப்புகளைத் தன் திறன்கொண்டு அடுத்த தளத்திற்கு இட்டுச் செல்லும் ஏணி!

கீதா கைலாசம்

படம் நெடுகத் தோன்றித்தான் பார்ப்பவர்களுக்குத் தாக்கத்தை உண்டாக்க வேண்டும் என்பதில்லை. சில நிமிடங்களேயானாலும் அதை ஆர்ப்பாட்டமாய்ச் செய்துவிட முடியும் என்பதை ‘நட்சத்திரம் நகர்கிறது’ வழியே மேடை போட்டுச் சொன்னார் கீதா கைலாசம். வெளிப்படையாய் சாதி வன்முறையைத் தூண்டுவது ஒருவகை. நாசூக்காய் அடுக்களையில் வைத்து அடுத்த தலைமுறைக்கு சாதியுணர்வை ஊட்டுவது இன்னொருவகை. பல்லாண்டுக்காலமாய் இந்தச் சமுதாயம் பெண்ணைக் கருவியாய்ப் பயன்படுத்தி அந்த இரண்டாவது பாவச்செயலைச் செய்துவருகிறது என்கிற முகத்திலடிக்கும் உண்மையை அக்குவேறு ஆணிவேறாய் அலசிக் காயப்போட்டது அவரின் நடிப்பாற்றல். ‘பெண்கள் அழுதே சாதிப்பார்கள்’ என்கிற பொதுப்புத்திக்குப் பின்னால் இருக்கும் இயங்கியல் கூறுகளையும் சமூகக் காரணிகளையும் பார்ப்பவர்களின் மனதில் சிரிப்பின் வழி, சிந்தனையின் வழி விதைத்த கீதா கைலாசம், யதார்த்த நடிப்பின் புதிய முகவரி.

தமிழ்

கோலிவுட், காக்கிச்சட்டையைக் காவல்தெய்வங்களாக மிகைப்படுத்திக் கொண்டாடவும் செய்திருக்கிறது, எதிர்ப்பவர்களை நசுக்கும் அதிகாரத்தின் ஏவல் ஆயுதமாகத் தோலுரித்தும் காட்டியுள்ளது. ஆனால் இவை இரண்டையும் விடுத்து இயக்குநர் தமிழ், தமிழ்சினிமாவில் தேர்ந்தெடுத்த மூன்றாம் கோணம் மிக முக்கியமானது. காவல்துறைக்குள் நடக்கும் ஈகோ மோதல்களை, அரசியல் போட்டிகளை விரிவாய் அவர் கண்முன் காட்ட, விதிர்த்துப்போயின இதயங்கள். திமிரும் தோரணையுமான அந்தச் சீருடைக்குப் பின்னால் புழுங்கும் ரத்தமும் சதையுமான மனங்கள்மீதும், அவை எதிர்கொள்ளும் உளவியல் சிக்கல்கள்மீதும் வெளிச்சம் பாய்ச்சி, தமிழ் கொண்டுவந்தது தனித்துவமான கவன ஈர்ப்புத் தீர்மானம். ‘அதிகார அமைப்பு வெளியிலிருப்பவர்களை மட்டுமல்ல, தேவைப்பட்டால் தன் இருப்பைக் காத்துக்கொள்ள தன்னுள் இருந்து இயங்குபவர்களையும் தயவு தாட்சண்யம் பார்க்காமல் பலிகொடுக்கும்’ என்கிற உண்மையைப் பொட்டில் அடித்துச் சொல்லிய அவரின் அந்தத் துணிச்சல் வேறு யாரும் வாய்க்கப்பெறாதது. தமிழ் – மாற்றுப் பார்வையைத் தீர்க்கமாய் முன்வைத்த கலைஞன்!

கிஷன் தாஸ்

முதல் காதல் – மனதோடு என்றென்றும் தங்கிப் போய்விட்ட மழைக்காலம். அதன் ஈரப்பதம் குறையாமல் அதை அப்படியே திரையில் கடத்தத் தேவை நிறைய பக்குவம். அது கிஷன் தாஸுக்குக் கைவரப்பெற்றிருந்தது. விட்டேத்தியான விடலைப் பருவம், பொறுப்பான பின்னிருபதுகள் என முதல் படத்திலேயே இரண்டு நேரெதிர் குணங்களைத் தூக்கிச் சுமக்க வேண்டிய வேலை. இரு துருவங்களுக்குமிடையே இருக்கும் தூரத்தைப் போல அதை அழகாய் வேறுபடுத்திக் காட்டினார் கிஷன். ‘முதல் நீ முடிவும் நீ’ பாடலில், பின்னோக்கி ஓடி அதுநாள் வரையிலும் தான் வாழ்ந்த வாழ்வையும், அதன் சரி தவறுகளையும் எடைபோட்டு விடையை நுண்ணிய உணர்வுகள் கொண்டு கொட்டியது அதன் ஒருதுளி மாதிரி. தர்க்கம் பேசும் மூளைக்கும் யதார்த்தம் மறுக்கும் இதயத்திற்கும் நடுவே அலைக்கழியும் அந்தப் பெயரிடமுடியா பரிதவிப்பு மனித உருக்கொண்டு வந்ததுபோல அசரடித்த கிஷன் தாஸ், ஓர் வளரும் நட்சத்திரம்.

அதிதி ஷங்கர்

சூர்யா தயாரிப்பில், கார்த்திக்கு ஜோடியாய்… கனவைப் போன்ற அறிமுகம் என்பார்களே, அது அப்படியே நடந்தது அதிதிக்கு. க்யூட் சிரிப்பு, வற்றாத எனர்ஜி என பூஜையின்போதே பல லட்சம் உள்ளங்களைக் கொள்ளை கொண்டார். முன்னோட்டமாய் ‘மதுர வீரன் அழகுல’ என அவர் செல்லம் கொஞ்ச, இந்த ஆல்ரவுண்டரை உச்சிமுகர்ந்து ஏற்றுக்கொண்டது தமிழ் கூறு நல்லுலகு. ‘தந்தையின் பெயருக்குக் கிடைத்த பரிசு அல்ல இது, தன் திறமைக்குக் கிடைத்த மரியாதை’ என விருமனில் காட்சிக்குக் காட்சி அவர் நிரூபிக்க, சிவப்புக் கம்பள வரவேற்போடு தயாராகின அடுத்தடுத்த படவாய்ப்புகள். கலை என்பது விதைகளைப் போல, ஒன்றை விதைத்தால் பத்தாய்த் திரும்பி வரும். இவரோ நடிப்பு, பாட்டு, நடனம் என எல்லாப் பக்கங்களிலும் தன்னை விதைத்துக்கொண்டே போகிறார். அதிதி, விழுதுபரப்பக் காத்திருக்கும் இளந்தளிர்.

ஹியா தவே

குழந்தைகளை பயமுறுத்தப் பேய்க்கதைகள் சொல்வார்கள். குழந்தையின் வழியே அதே பேய்க்கதை, வளர்ந்த நம்மை பயமுறுத்தி நடுங்கச் செய்தால்..? செல்வராகவன் நானே வருவேனில் ஹியா தவே மூலம் செய்தது அதுதான். வழிநெடுக வண்ணங்களைச் சிதறவிட்டுப் போகும் பட்டாம்பூச்சி போல படம் முழுக்க அச்ச ரேகைகளைப் படரவிட்டு திகில் கிளப்பினார் ஹியா தவே. தொடக்கத்தில் நம்மைக் குழப்பத்தில் ஆழ்த்தி, போகப் போக மெதுவாய் பய கிராஃபை ஏற்றி இடைவேளைக் காட்சியில் அமானுஷ்யச் சிரிப்போடு அவர் கேமராவைப் பார்த்து வெறிக்கையில் முதுகுத்தண்டெல்லாம் சில்லிட்டது. ‘படத்தின் ஆதார உணர்வு தன் வாதைகளே’ என்பதை உணர்ந்து, வேடத்திலிருந்து நொடியும் விலகாது பல மடங்கு கனமான உணவைத் தூக்கிச் செல்லும் எறும்பைப் போல கதையைத் தாங்கிச் சென்றார். தேர்ந்த நடிகர்களுக்கு இணையாக தன்னையும் அதே தளத்தில் வெளிப்படுத்திக் கொண்ட ஹியா எட்டிப்பிடிக்கக் காத்திருக்கின்றன இன்னும் பல விருதுகள்.

ரவி வர்மன்

திரைப்பட ஒளிப்பதிவு எதிர்க்காற்றில் ஓட்டும் மிதவையைப் போல. புறக்காரணிகளால் படம் கட்டுப்பாடு இழந்து திசைமாறினாலும், இழுத்துப்பிடித்து சரியாய்ச் செலுத்தவேண்டும். அதிலும் பொன்னியின் செல்வன் போன்ற பிரமாண்டம் எல்லாம் ஆழிப்பேரலையில் எதிர்நீச்சல் போடுவதைப்போல! ஆனாலும் வேலைமீது கொண்ட ஈடுபாட்டினால் அந்தப் பிரமாண்டத்தின் மேல் ஆதிக்கம் செலுத்திக் கொடி நாட்டினார் ரவி வர்மன். இயக்குநர் போட்டுக்கொடுத்த திட்டத்தில் கலை இயக்கம் அடித்தளமாயும், வி.எஃப்.எக்ஸ் மேற்கூரையாகவும் அமைய, இரண்டையும் இணைக்கும் தூணாய் நிமிர்ந்து நின்றது இவரது வேலைப்பாடு. நூற்றுக்கணக்கான நடிகர்கள், ஆயிரக்கணக்கில் பயன்படுத்த வேண்டிய பொருள்கள், இதற்கு நடுவே மாறிக்கொண்டே இருக்கும் வெளிச்சமும் பருவநிலையும்… ஒழுங்கின்மையின் உச்சமாகிவிடக்கூடிய படப்பிடிப்புத்தளத்தை மையச்சரடாய் இருந்து இணைத்து, திரையில் ஒரு பேரபனுவத்தைப் பரிசளித்த ரவி வர்மன், கோலிவுட்டைத் தன் வண்ணங்களால் வாழ்த்தும் வானவில்.

பிரதீப் இ.ராகவ்

சினிமா எனும் காட்சிமொழி சரியாகக் கையாளப்படும்போது, அது ரசிகர்களோடு நிகழ்த்தும் கொண்டாட்ட உரையாடலாக மாறுகிறது என்பதை ‘லவ் டுடே’யில் நிறுவினார் அதன் எடிட்டர் பிரதீப் இ.ராகவ். நமக்குப் பழக்கப்பட்ட எமோஜிக்கள் திரையில் அங்குமிங்கும் உலவி காட்சிகளின் எடையை இன்னும் ஏற்றின. வசனங்களுக்கான தேவையே இல்லாமல் நம் கைப்பேசிகள் உயிர்பெற்றுத் திரையில் கதையை நகர்த்தின. ஜம்ப் கட்டோ, ஸ்ப்ளிட் கட்டோ, எதுவாக இருந்தாலும் அதன் அடிநாதமாய் காமெடி இழையோடுவதை கவனமாய்ப் பார்த்துக்கொண்ட பிரதீப் ராகவின் கடமையுணர்ச்சி படம் முழுக்க ஒளிர்ந்துகொண்டே இருந்தது. இரண்டரை மணிநேரப் படத்தை நம் நண்பர்கள் குழுவோடு நேரம்போவதே தெரியாமல் பேசிக்கொண்டிருப்பதைப் போல உருமாற்றிய பிரதீப் ராகவ், ஒரு தேர்ந்த கதைசொல்லி!

தீபக், முத்துவேல்

மலக்குழி மரணங்கள் என்னும் அநீதி செய்திகளாய் மட்டுமே கடந்து கவனம் கலைத்த நிலையில், அதைக் கதையாய் மாற்றி, வலிமையான திரைப்படமாக உருவாக்கிப் பார்வையாளர்களை உலுக்கினார்கள் தீபக்கும் முத்துவேலும். எந்தக் கதை வெற்றிபெறும் என்பதைவிட, எந்தக் கதை சொல்லப்பட வேண்டும் என்பதில் இவர்கள் செலுத்திய கவனமே சிறப்பானது. பார்வையாளர்கள் மத்தியில் அனுதாபத்தை விதைப்பதைவிட அவர்கள் மனச்சாட்சியின் முன் பல கேள்விகளை விசிறி, அவர்கள் சிந்தனையை உசுப்புவதையே முதற்கடமையாகச் செய்தது இந்தக் கதை. போராட்டக்காரர்களையும் சமூகச் செயற்பாட்டாளர்களையும் ‘இவங்களுக்கு வேற வேலை இல்லப்பா’ என எளிதாய்க் கடந்துபோகும் மனிதர்களின் சட்டையைப் பிடித்து உலுக்கி அவர்களின் முக்கியத்துவத்தைப் பறையடித்து உரக்கச் சொன்னது இந்த இணை. அடக்குமுறைக்கெதிரான முதல் கூப்பாடாய் ஆதியுணர்வான தாய்மையே இருக்கிறது என்பதையும், தனக்கான நீதி தேடி அது அரசமைப்பின் எந்த அடுக்கையும் அணுகிக் கேள்வி கேட்கும் என்பதையும் காத்திரமாய் தங்கள் கதைவழி சொன்ன இந்தப் படைப்பாளிகள், கோலிவுட்டிற்குத் தேவையான கலகக்காரர்கள்.

ஹரிஹரன் ராஜு, கெளதம் ராமச்சந்திரன்

‘சிறார்மீதான பாலியல் வன்முறை’ என்கிற கருவே அதிர்வுகளை உண்டாக்கக்கூடியது. அதிலும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில், ‘அவர் இதெல்லாம் செஞ்சிருக்க மாட்டாரு’ என சமூகம் சால்ஜாப்பு சொல்லி குற்றவாளியைக் காப்பாற்ற முனையும் புள்ளியிலிருந்தே இந்தக் கருவைப் பேசும்போது அதன் தாக்கம் மிக அதிகம். இதை சரியாகப் புரிந்துகொண்டு செயல்படுத்தினார்கள் ஹரிஹரனும் கெளதமும். கொஞ்சம் பிசகினாலும் பேச நினைக்கும் அரசியல் தவறாய்ப் புரிந்துக்கொள்ளப்பட்டுவிடும் சாத்தியக்கூறுகள் உள்ள கதையைச் சொல்ல முனைந்த துணிவும், அது அனைவரையும் சென்று சேரும்படி லாகவமாகத் திரைக்கதை அமைத்த இவர்களின் சமூகப் பொறுப்புணர்வும் பாராட்டுதலுக்குரியது. காவல்துறை அதிகாரியாக ‘பெனிக்ஸ் ஜெயராஜ்’ இருப்பது, நீதிபதியாகவே இருந்தாலும் திருநங்கைகளுக்கு ஏளனமே பதிலாய்க் கிடைப்பது என நடப்பு அவலங்களையும் திரைக்கதையில் பொருத்தமாய்க் கோத்து கவனம் ஈர்த்தார்கள் இந்தப் பக்குவப்பட்ட படைப்பாளிகள்!

தமிழரசன் பச்சமுத்து

காத்திரமான திரைப்பட வசனங்களே திராவிட சினிமாக்களின் முதன்மை ஆயுதம். அந்த மரபின் தொடர்ச்சியாய் அழுத்தமான வசனங்களால் அரசியல் பேசியது உதயநிதியின் ‘நெஞ்சுக்கு நீதி.’ ‘எங்களுக்கும் சட்டத்துக்கும் இங்க மரியாதை இருக்கா என்ன? அது சிஸ்டத்தைக் காப்பாத்தும், நியாயத்தை இல்ல’ என நீதி பரிபாலனை எளியவர்களுக்கு எதிர்முனையிலேயே எப்போதும் நிற்பதைச் சுட்டிக்காட்டிக் கிழித்தன தமிழரசனின் வசனங்கள். ‘நீ குட்டிக்கிட்டே இருப்ப, நாங்க கூட்டிக்கிட்டே இருக்கணுமா’ என ஒருசில விநாடிகளிலேயே சாதியப் படிநிலையையும் அதை எதிர்க்க வேண்டிய அவசியத்தையும் பார்ப்பவர்களுக்குக் கற்றுக்கொடுத்தது அவரின் பேனா. ‘சொல்றதைக் கேக்கலைன்னா கேக்குற மாதிரி சொல்லணும்’ – உலகம் முழுக்க விரவியிருக்கும் புரட்சியாளர்களின் முழக்கமாய் உள்ளூரில் ஒலித்தது வசனம். ரீமேக் படங்கள் என்பவை அப்படியே அதை மொழிபெயர்ப்பதல்ல, அழுத்தமான வசனங்களின் மூலமாக அதை அடுத்தகட்டத்திற்கு உயர்த்திப்போக முடியும் என நிரூபித்துக்காட்டினார் தமிழரசன் பச்சமுத்து.

விவேக்

கூடலின் இதம், இருத்தலின் யதார்த்தம், ஊடலின் அணைப்பு, பிரிவின் காயம், இரங்கலின் வலி என ஐந்திணைகளின் கூற்றை ஐந்தே நிமிடப் பாடல்வரிகளில் நமக்குக் கடத்திய அன்பர் விவேக். ‘நிலவள்ளித் தின்ற விண்மீன்’, ‘பாதிப்பூவின் பாசம்’ என உவமைகள் கைகோக்க பேரழகான பால்வெளியாய் உருக்கொண்டது பாடல். பேருந்தின் ஜன்னலோர இருக்கையைத் தொட்டுப் போகும் காற்றுக்கும் பாட்டுக்கும் ஆயுள் அதிகம். போலவே விவேக்கின் இந்தப் பாடல் வரிகளுக்கும். முன்னது அன்பும் அது நிமித்தமும் என்றால், பின்னது அரசியலும் அதன் அறமும். அம்மணம் மறைக்கவே ஆடைகள், ஆண்களின் கெளரவம் காக்க அல்ல என விவேக் தன் சொற்கள் வழியே கொடுத்தது சாட்டையடி. ‘புலி அடிச்ச முறத்தப் புடிங்கி கோழிக்கூட பின்ன வச்சான்’ என்கிற ஒற்றைவரியில் புதைந்திருந்தது ஓராயிரம் ஆண்டுக்கால அடக்குமுறை. நாயகர்களின் வீரத்தை மட்டுமே பாடிவந்த மொழியை மாற்றி, நாயகி புகழ் பாடவைத்து விவேக் கோலிவுட்டில் தொடங்கி வைத்தது ஒரு புதுப்போக்கு. பெண்ணியமோ, காதல் நயமோ, அதில் தன் புலமையைத் தொடர்ந்து நிறுவும் விவேக் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத பாணன்.

ஏ.ஆர்.ரஹ்மான்

வீடு திரும்பும் தாய்ப்பறவையின் கீச்சொலி காற்றில் மிதந்து வந்து கூட்டில் காத்திருக்கும் சின்னஞ்சிறு உயிர்களை வாஞ்சையாய்த் தழுவுமே, அதுபோலத்தான் தமிழர்களுக்கு ரஹ்மானின் குரலும்! முப்பதாண்டுகளாய் தன் மெல்லிய மூச்சுக்குழல் வழியே ஏனைய உயிர்களை உருக வைப்பதையே முழுநேர வேலையாய்ச் செய்யும் அவர், இந்த ஆண்டும் தன் கடமையிலிருந்து தவறவில்லை. எதிர்காலம் குறித்த கேள்விகள் தொக்கி நிற்க, நிச்சயமின்மை எழுப்பும் பயத்தோடு தினம் தினம் நடைபோடும் அத்தனை ஜீவராசிகளும் தொற்றிக்கொள்ளும் பெருநம்பிக்கைத் தொடரியானது ‘மறக்குமா நெஞ்சம்’ பாடல். ‘அடங்காத ராட்டினத்தில்’ என அவர் சாரீரம் உச்சம் தொடும்போது, புவி ஈர்ப்பு விதிகளை எல்லாம் ஏமாற்றி விண்ணில் பறந்தன லட்சோப லட்சம் மனங்கள். ‘நெஞ்சுக்குள்ள நச்சரிக்கும் பட்டாம்பூச்சி’ என அவர் குழைந்தபோது மழை இறங்கிய செம்மண் நிலமாய்க் குழைந்த இதயங்கள், ‘எங்கு தொடங்கும் எங்கு முடியும்’ என அவர் முடிக்கும்போது வாழ்வதற்கான அத்தனை வாய்ப்புகளையும் அந்தக் குரலிலிருந்து கடன் பெற்றுக்கொண்டன. வற்றா ஜீவநதி போல நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும் இசைப்புயலின் குரல் என்றென்றும் நம்மை அரவணைக்கும் தந்தையின் வெப்பம் கலந்த ஸ்பரிசம்.

மதுஸ்ரீ

மனித உணர்வுகளுக்கெனக் குரல் இருந்தால், அதில் ஏக்கத்தின் குரல் நிச்சயம் மதுஸ்ரீயினுடையதாகத்தான் இருக்கும். இருபெரும் மலைகளுக்கு நடுவே புகுந்து வரும் காற்றுக்கு இணையான ஈரம் அவர் குரலுக்கு. ‘மல்லிப்பூ’ பாடல் வழியே அவர் நிகழ்த்தியது இரு காதல் மனங்களுக்கு இடையேயான உரையாடல். காதலையும் காமத்தையும் துளி விரசமில்லாமல் மாறி மாறித் தொட்டுப் பயணிக்கும் தமிழ்விடு தூது. ‘தூரமா போனது துக்கமா மாறும்’ என அவர் எண்ணற்ற பெண்களின் எண்ணத்தை வெளிப்படுத்திய நொடியில் நீரால் இளகும் பாறைபோல, சமூகம் கட்டமைத்து வைத்திருக்கும் பொய்க்கட்டுப்பாடுகளையெல்லாம் மீறிக் கலங்கின ஆண் உள்ளங்கள். கடல் கடந்து வாழும் நீர்சொரிந்த கண்கள் சாட்சி. ‘கள்ளக்காதல் போல நான் மெல்லப் பேசும் நேரம், சத்தம் கித்தம் கேட்டாப் பொய்யாகத் தூங்கவேணும்’ என்ற குரல் சொன்னது பிரிவுத்துயரின் மீதெழும் துயரத்தை. ‘ஆழமாய்க் கீறவும் தெரியும், ஆற்றுப்படுத்தவும் தெரியும்’ என அவர் ஆடிய கண்ணாமூச்சி ஆட்டத்தில் மீள விரும்பாமல் கட்டுண்டே கிடந்தது தமிழகம். மதுஸ்ரீ தமிழ் சினிமா ரசிகர்களை மேன்மேலும் மயக்கக் காத்திருக்கும் இசையின் புது வளி.

தோட்டா தரணி

பல்லாயிரம் பேர் பல தசாப்தங்களாய் தரிசிக்கத் தவித்த கனவுலகிற்கு உயிர் கொடுப்பது அவ்வளவு எளிதான வேலையில்லை. நாவலின் சாரம் குலைந்துவிடாத பிரமாண்டம், படித்தவர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் கலைநயம் என இரண்டையும் சமமாய் தூக்கிச் சுமந்தன தோட்டா தரணியின் கரங்கள். பழுவேட்டரையர்களின் நோக்கம் போலவே இருளடர்ந்த மாடமாளிகை, நந்தினியின் இதய அறைகளுக்கு ஒப்பாய் ரகசியங்கள் பொதிந்து வைத்திருக்கும் அந்தப்புரம், சோழர்களின் பிரதாபம் பேசும் போர்க்களங்கள், தந்தைக்கும் தமையனுக்குமாய் அல்லாடும் குந்தவையை பிரதிபலித்து அவள் காதலுக்கும் ஊடலுக்கும் சாட்சியாய் நிற்கும் பொன்னியாற்று மயில் படகு என பொன்னியின் செல்வனில் தன் தங்க முத்திரைகளைப் பதித்து வைத்திருந்தார் தோட்டா தரணி. பழம்பெரும் மலையில் செழித்தெழும் வனம் போல இவரின் பழுத்த அனுபவத்தில் பூத்துக் கண்களுக்கு விருந்தானது கல்கியின் புதினம். தோட்டா தரணி, படைப்பாளிகளின் கற்பனைகள் சித்திரங்களாய் உருவெடுக்க உதவும் பெருஞ்சுவர்.

விக்ரம் கெய்க்வாட்

எத்தனை கோடி மனங்கள் வாசித்தனவோ, அத்தனை கோடி பிம்பங்கள். நாவல்கள் பரிசளிக்கும் இந்த வாசிப்பு அனுபவத்திற்கு சற்றும் குறையாமல் அவற்றின் கதைமாந்தர்களை திரையில் உலவவிடும் சவாலில் சாதித்தவர்கள் இந்திய அளவிலேயே மிகச்சிலர்தான். அதில் இந்தத் தலைமுறையின் நம்பிக்கை நட்சத்திரம் விக்ரம் கெய்க்வாட். நந்தினியின் பேரழகிற்கு நியாயம் சேர்க்க பக்கங்கள் போதாது, வார்த்தைகள் கூடாது ‘பொன்னியின் செல்வன்’ நாவலில். ஆனால் விக்ரம் எடுத்துக்கொண்டதோ ஒரே ஒரு காட்சி. பல்லக்கின் திரை விலக்கி, முகத்தில் பட்டுத்தெறிக்கும் கதிரொளியையும் மிஞ்சி மின்னியபடி நந்தினி வெளிப்படும்போது திகைத்து நின்றது திரைக்கு வெளியே இருந்த நாமும்தான். பொன்னியில் மிதக்கும் பொன்னாய் குந்தவை தரிசனம் நிகழ்ந்தபோது சகலவற்றையும் விடுத்து காதலை மட்டுமே பிடிப்பாய்ப் பற்றிக்கொண்டன மனங்கள். சுந்தர சோழரின் மூப்பிலும் மழுங்கிடாத கம்பீரம், பூங்குழலியின் பூச்சுகளற்ற இயல்பு, ஆடவர்கள் பொறாமைகொள்ளும் அருள்மொழிவர்மனின் நளினம் கலந்த மிடுக்கு என நாவல் பக்கம்பக்கமாய்ப் பேசியவற்றை உண்மைக்குப் பக்கமாய் கொண்டுவந்து நிறுத்திய விக்ரம் கெய்க்வாட் ஓர் அசாத்திய வித்தைக்காரர்.

திலீப் சுப்பராயன்

பெருந்தொற்றுக் காலத்தில் எங்கும் எதிலும் ஒலித்துக்கொண்டிருந்த ‘அப்டேட்’ குரலுக்கு அழகான முடிவுரை எழுதியது திலீப் சுப்பராயனின் சண்டை வடிவமைப்பு. மழைப் பின்னணியில் மேளதாளங்கள் ஒலிக்க ஏ.கே எழுந்து நின்றபோது குளிர்ந்துபோயின ரசிக மனங்கள். ‘பைக் ஸ்டன்ட்கள் ஹாலிவுட்டுக்கானவை மட்டுமே’ என எழுதப்பட்டிருந்த நிரந்தர பட்டயத்தைக் கிழித்தெறிந்து பட்டையைக் கிளப்பினார் திலீப். இப்போது அதே பாதையில் விர்ரென ஆக்ஸலரேட்டர் முறுக்கி முன்னேறுகிறது தமிழ் சினிமா. ஹீரோவுக்கு இணையாய் ஹூமாவுக்கும் இவர் கொடுத்த வெளியில் தீயாய்ப் பற்றிக்கொண்டன திரையரங்குகள். அந்தரத்தில் பறந்து அசகாய சாகசம் நிகழ்த்திக்காட்டிய சண்டைக்காட்சிகளை வடிவமைத்து பிரமிக்கவைத்த திலீப் சுப்பராயன், கோலிவுட்டின் கூர் மழுங்கிடாத கத்தி!

ஜானி

கலை எளியவர்களுக்கு அணுக்கமாகும்போதுதான் அதன் முழுப்பயனையும் அடைகிறது. ஜானியின் நடன அமைப்பில் வெளியான, திருச்சிற்றம்பலம் படத்தின் ‘மேகம் கருக்காதா’ பாடல் அந்த வகை. ‘முறையாய்க் கற்றிருக்கத் தேவையில்லை, நாட்டியம்மீதான பிடிப்பு ஒன்றே போதும்’ என்பதை உணர்த்தும்வகையிலான கொண்டாட்ட அசைவுகள், அவற்றின் வழியே வெளிப்படும் காதலும் அது கொடுக்கும் ஏக்கமும் என அடிப்படை இலக்கணங்களை ஜானி கச்சிதமாய் வரைய, பட்டிதொட்டியெங்கும் ஹிட்டானது பாடல். மங்கிய தெருவிளக்கின் கீழே நிலா சாட்சியாய் திருவும் ஷோபனாவும் கீபோர்டின் மெல்லின ரேகைகள் எழுப்பும் இசைக்குறிப்பிற்கு தங்கள் கால்களால் தாளமிட்டபோது மொத்த மாநிலமும் நெகிழ்ந்து ஹார்ட்டின்கள் விட்டது. இன்ஸ்டா ரீல்கள், யூடியூப் ஷார்ட்கள், ஃபேஸ்புக் வீடியோக்கள் என எல்லாத் திசைகளிலும் இந்த நடன ராஜாவின் ராஜாங்கம்தான். வயது பேதமின்றி அனைவரையும் ஆடவைத்த ஜானி, கடந்த ஆண்டின் ‘வைப் மாஸ்டர்.’

ஏகா லக்கானி

ஒப்பிட்டுப் பார்க்க போதிய குறிப்புகள் கிடையாது, கதையில் இருப்பதைத் தன் போக்கிற்கு மாற்றும் வானளாவிய வெளியும் கிடையாது. போக, இந்தத் தொழில்நுட்ப யுகத்தில் கொஞ்சம் தவறினாலும் எக்கச்சக்க விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிடும். வரலாற்றுப் புதினங்களில் வரும் மனிதர்களை அப்படியே திரையில் வார்ப்பதில் இருக்கும் சவால்கள் இவை. ஆனால் அதைத் தனக்கே உரிய பக்குவத்தோடு கையாண்டார் ஏகா லக்கானி. ‘அழகு மட்டுமே இவர்களின் அடையாளமில்லை’ என நந்தினியையும் குந்தவையையும் தத்தமது தன்னம்பிக்கை மிளிர இவர் எதிரெதிரே நிற்க வைத்தபோது, ‘ஆள் பாதி ஆடை பாதி’ கூற்று மெய்யானது. எண்ணற்ற முதன்மை நட்சத்திரங்கள், நூற்றுக்கணக்கான துணைக் கதாபாத்திரங்கள் – அத்தனை பேருக்கும் அவரவர் தன்மையைப் பொறுத்து உடையலங்காரம் என மலையைச் சுமக்கும் நிலம்போல பொன்னியின் செல்வனைத் தாங்கினார். அதன்பொருட்டு திரையில் விரிந்தது ஒரு காலப்பயணம். ஏகா, சாதிக்கத் துடிப்பவர்களுக்கான வெளிச்சம்!

சரித்திரக் கதைகளுக்கும் நமக்குமான பந்தம் மிக ஆழமானது. ‘ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம்’ எனத் தொடங்கும் கதைகள் கேட்பவர்களுக்கு ஊட்டுவது நன்னெறிகளையும் வீர சாகசத்தையும் மட்டுமல்ல, அவை நமக்குப் பரிசளிப்பது இப்போது அன்னியமாகிவிட்ட தாய்மடியின் கதகதப்பை! பரபரப்பான வாழ்க்கையில் நாமே மறந்துபோன நம் கற்பனாசக்தியை! பொன்னியின் செல்வன் படம் வழியே இவையனைத்தையும் பார்த்தவர்களுக்கு மீட்டுக்கொடுத்த இந்தத் தொழில்நுட்ப வல்லுநர்கள், உண்மையில் கால இயந்திரத்தின் ஓட்டுநர்கள். நிஜத்திற்கும் மாயைக்குமான கோட்டை உடைத்து எது அசல், எது போலி என வகைப்படுத்த முடியாமல் வியக்கவைத்த அசாத்திய உழைப்பு இவர்களுடையது. தாங்கள் படித்ததை, செவிவழி கேட்டதை திரையில் பார்த்து நெகிழ்ந்துபோனது ஒரு தலைமுறை. வெளிநாட்டுப் படைப்புகளில் மட்டுமே கண்டிருந்ததை மண்ணும் மரபும் இணையும் பின்னணியில் கண்டு சிலிர்த்தது அடுத்த தலைமுறை. இப்படிக் கணக்கற்ற மாயாஜாலங்கள் நிகழ்த்திய இந்தத் தொழில்நுட்பக் குழு, குடும்பங்களை இணைத்த பண்பாட்டுப் பாலம்.

தொடராய் வெளிவந்த காலம்தொட்டே எக்கச்சக்க எதிர்பார்ப்பு, பல்வேறு ஆளுமைகள் தொட முயன்று கானலாகவே போய்விட்ட கனவுப் படைப்பு, கணக்கிட்டுப் பார்த்தால் மலைத்துப்போய்விடும் பொருட்செலவு – இவ்வளவும் இன்னபிறவும் தடைக்கற்களாய் இருந்தன லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் முன்னால். ஆனால் கடல் கடந்து கொடி நாட்டிய சோழரின் வீரம் பேச நினைத்தவர்களுக்கு இவையெல்லாம் ஒரு பொருட்டா என்ன? தமிழ் சினிமாவும் இந்திய சினிமாதான் என உலகம் பார்க்க உச்சாணிக்கொம்பில் நிறுத்திய இயக்குநர் மணிரத்னம், தரணி எங்குமிருக்கும் தமிழர்களோடு தன் படைப்பின் வழியே நெருக்கமாயிருக்கும் கதை, ரசிக உள்ளங்கள் ஆர்ப்பரிக்கும் முன்னணி நட்சத்திரங்கள், பிற படவுலகங்கள் கண்டு பொறாமைப்படும் தொழில்நுட்பக்குழு ஆகியோரோடு கூடி லைகாவும் மெட்ராஸ் டாக்கீஸும் கட்டி இழுத்தது ஆகப்பெரும் தேர். நரைகூடி நடை தளர்ந்துவிட்ட ‘பொன்னியின் செல்வன்’ முதல் தலைமுறை வாசகர்கள் தொடங்கி, அனிமேஷன் உலகில் ஆழ்ந்துவிட்ட குறுநடைக் குழந்தைகள் வரை அத்தனை பேரையும் திரையரங்கிற்கு அழைத்து வர இவர்கள் போட்ட எத்தனிப்பு தமிழ் சினிமாவிற்குத் தேவைப்பட்ட ஆசுவாசப் பெருமூச்சு. தமிழ் சினிமாவை பொ.செ-வுக்கு முன், பொ.செ-வுக்குப் பின் என வரலாறே முன்வந்து வகுத்துக்கொள்ளுமளவிற்கான தொழில்நேர்த்திதான் லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸின் அடையாளம்.

கமல், லோகேஷ் கனகராஜ், அனிருத்
விக்ரம் சிறந்த படக்குழு

கமல் எனும் தன்னிகரில்லா கலைஞனை திரையில் காணக் காத்திருந்தவர்களிடம் ‘ஆரம்பிக்கலாங்களா?’ எனக் கேட்டு, தலைவாழை விருந்து வைத்தார் லோகேஷ் கனகராஜ். கடவுளின் தேசத்தில் பிறந்த பகத் எனும் கலை அசுரனைக் அழைத்து வந்து எதிர்முனையில் நிறுத்தி, தமிழ்மக்களின் செல்லப்பிள்ளையான விஜய் சேதுபதியைக் கொண்டு அவர்களை இணைத்ததில் விரிந்தது ‘விக்ரம்’ எனும் உக்கிரமான ஆயுத எழுத்து. ‘தமிழில் எப்போது நிகழும் மல்ட்டி ஸ்டார் சினிமா’ என ஏக்கமாய்க் காத்திருந்தவர்களுக்கு ‘இதுதான் சரியான சமயம்’ என கெத்தாய் நேரம் குறித்து அடித்துச் சொன்னார் ரோலக்ஸ் சூர்யா. தோட்டாக்கள் கக்கும் எஃகுத் துப்பாக்கிகளின் சத்தத்தை எல்லாம் பின்னுக்குத் தள்ளி பீரங்கியாய் வெடித்த அனிருத்தின் பின்னணி இசையில் அதிர்ந்து அடங்கின திரையரங்குகள். மறுபக்கம் தன் ஊனோடு கேமராவைக் கட்டிக்கொண்டு உத்வேகத்தோடு சுற்றிச் சுழன்றார் ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன். காட்டுத்தீக்கு குறையாமல் அனல் பறந்தன அன்பறிவின் சண்டை வடிவமைப்பில்! லோகேஷின் படைப்புலகத்திற்கு சதீஸ்குமார் தன் கைத்திறனால் வண்ணம் சேர்க்க, முன்பின் பாயும் கதையை பார்ப்பவர்களுக்கும் பதற்றம் தொற்றிக்கொள்ளத் தொகுத்துக்கொடுத்தார் பிலோமின் ராஜ். தியாகத்திற்கு காளிதாஸ் ஜெயராம், கலகலப்பிற்கு சந்தானபாரதி, பரபரப்பிற்கு டீனா (எ) வசந்தி என செம்பன் வினோத் முதல் குட்டிக்குழந்தை தர்ஷன் வரை அனைவருக்குமான வெளியை உருவாக்கிக்கொடுத்து பொறுப்பான கேப்டனாய் வழிநடத்தினார் லோகேஷ் கனகராஜ். முன்னணி நாயகர்களை ஒன்றிணைத்து அதற்கு நியாயம் சேர்க்க இணை உலகங்களை உண்டாக்கி எண்ணற்ற சாத்தியங்களை உருவாக்கித் தந்திருக்கும் ‘விக்ரம்’, தமிழ்சினிமாவின் புதிய பரிணாமம்!

லவ் டுடே

90கள் காமெடி கலந்த காதல் திரைப்படங்களின் பொற்காலம். அதன்பின் மாறிய தமிழ் சினிமா டிரெண்டில் கிட்டத்தட்ட ரொமான்டிக் காமெடியென்ற வகையினமே அருகிப்போனது. ‘தூதுவன் வருவான், சூழல் மாறி காதல் மாரி பொழியும்’ என எங்கெங்கோ தேடிக் களைத்துக் காத்திருந்தது தமிழ்ச்சமூகம். எங்கிருந்தோ இல்லை, நம் அடுத்த வீட்டு வரவேற்பறையிலிருந்தே வந்தார் பிரதீப் ரங்கநாதன். எளிமையான தோற்றம், வெகுளிச் சிரிப்பு என சாமானிய இளைஞனைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பத்துப் பொருத்தங்களும் அவருக்குப் பக்காவாய் பொருந்திப் போக, கோலாகலமாய் வரவேற்றார்கள் மக்கள். அமர காதல் காவியங்களையே பார்த்துக் கண்ணீர் சிந்திப் பழகியிருந்த கண்களின்முன், அதே காதலை எந்தப் பூச்சுகளுமின்றி இவர் முச்சந்தியில் கொண்டு வந்து நிறுத்த, சிரித்தே நீர்கோத்துக்கொண்டன அந்தக் கண்கள். பிரதீப்புக்கு இணையாக யுவனும் இறங்கி அடிக்க, ‘மாமாக்குட்டி’ 2கே தலைமுறையின் தேசியகீதமானது. குழந்தைகளுக்கு இனிப்போடு கலந்துகொடுக்கப்படும் கசப்புக் காய்ச்சல் மாத்திரை போல, ‘சந்தேகக் குணம் காதலைக் கொஞ்சம் கொஞ்சமாய் சாகடிக்கும் சாபம்’ எனப் படக்குழு சிரிப்போடு கலந்து கருத்தும் சொல்ல, முந்தைய தலைமுறையும் தம்ஸ் அப் காட்டியது. மக்களுக்கு நெருக்கமான கதைகள் எப்போதும் பெருவெற்றி பெறும் என மீண்டுமொரு முறை காட்டிய லவ் டுடே, கடந்த ஆண்டின் ஜாலி டே!

கமல் – லோகேஷ் கனகராஜ்

பன்னெடுங்காலமாய் சீராய் நகரும் நீர்வழிப்பாதையில் ஒரு நாள் புதுவெள்ளம் பாய்ந்து பெரும் ஆற்றலோடு கரைகளைத் தாண்டி தனக்கெனப் புதுத்தடம் உருவாக்குமே, அப்படித்தான் நிகழ்ந்தது தமிழ் சினிமாவில் லோகேஷ் கனகராஜின் வருகையும். தமிழ்ப் படைப்புலகம் எப்போதாவது தயக்கத்தோடு தொட்டு விலகும் முழுநீள ஆக்‌ஷன் படம் என்கிற வகைமையை தன் எழுத்தின் மேல் கொண்ட அபார நம்பிக்கை மூலம் தன்வசப்படுத்தியது, முழுநீளக் காதலை காற்றுவாக்கில் உரையாடல்களின் வழி மட்டுமே உணர்த்தியது, நல்லது – கெட்டது என்கிற இருண்மை மட்டுமே சினிமா அல்ல என இரண்டுக்கும் நடுவே இருக்கும் பிரதேசத்தில் அல்லாடும் மனிதர்களின் கதையைப் பேசியது – இப்படி லோகேஷ் உடைத்த மரபுகள் ஏராளம். இவை எல்லாவற்றுக்கும் மேலாக விக்ரமில் அவர் நிகழ்த்தியது தமிழ்சினிமாவில் இதுவரை யாரும் எட்டியிராத மைல்கல். தென்னிந்தியப் படவுலகின் மிக முக்கிய நட்சத்திரங்கள் ஒரே நிழலின் கீழ் இணைந்து ‘பன் நாயக சினிமா’ எனும் பிரமாண்டக் கனவை நனவாக்கியதற்குக் கலை மீதான லோகேஷின் ஆர்வமும் ஆளுமையுமே காரணம். விளைவு, திருவிழாக்கூட்டம் திரையரங்குகளில்! இளைஞர்கள், குடும்பங்கள், குழந்தைகள் எனப் பலதரப்பினரும் பொருந்திப்போக ஏராளமிருந்தது லோகேஷ் தீட்டிய இந்த வெகுஜன வரைபடத்தில். தானும் வளர்ந்து உடனிருப்பவர்களையும் வளர்த்து தமிழ்சினிமாவையும் தன் கூடவே தோள் மேல் கைபோட்டு அழைத்துப்போகும் லோகேஷ் கனகராஜ், கோலிவுட்டின் ஏகலைவன்!

விலங்கு வெப்சீரிஸ்

வெப்சீரிஸ் என்பது மேற்கத்திய நாடுகளுக்குப் புதிதல்ல. பல பரீட்சார்த்த முயற்சிகளுக்குப் பின் சக்சஸ் பார்முலாவைக் கண்டுகொண்டு இன்று அந்தப் பாதையிலும் கிளைகளை வெட்டி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்திய வெளியில், குறிப்பாய் தமிழ்ச்சூழலில் வெப்சீரிஸுக்கு வயது மிகக் குறைவு. போக, களமும் கலாசாரமும் வேறென்பதால் மேலையிலிருந்து இறக்குமதி செய்யவும் முடியாது. இப்படி யாவரும் இங்கே தத்தத்தளிக்கொண்டிருந்தபோதுதான் வந்திறங்கியது ‘விலங்கு.’ தமிழின் முழுமுதல் வெகுஜன வெப்சீரிஸ். மினிமம் கேரன்டியான த்ரில்லரில் ஆங்காங்கே காமெடி தூவி சுடச்சுட தீயிலிட்டு வார்த்தெடுத்தபோது புடமிட்ட தங்கமாய் வெளிப்பட்டது ‘விலங்கு.’ கொடூர சீரியல் கில்லர்களையே பார்த்துச் சலித்திருந்த பார்வையாளர்களுக்கு தன் பாணியில் கிச்சுகிச்சு மூட்டினார் கிச்சா. மண் மணக்கும் கதைக்களம், விரிவாய் விளக்கப்பட்ட காவல்துறையின் செயல்முறைகள், விளிம்புநிலை மக்கள் அதிகாரத்திற்கு பலியாகும் அவலம் என இன்னபிற கனமான காரணிகளும் சேர்ந்துகொள்ள, இந்தத் தொடர் இடம்பிடித்தது எல்லாருடைய ஹிட்லிஸ்ட்டிலும். விலங்கு – தமிழ் ஓ.டி.டி வெளியின் வெற்றிக் கையேடு!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.