"நான் படிச்சுதாங்க டாக்டர் பட்டம் வாங்கிருக்கேன்!"- இசைத்துறையில் Ph.D. முடித்த ஹிப் ஹாப் ஆதி

பல ஹிட் ஆல்பம் பாடல்களைக் கொடுத்துப் பிரபலமான ஹிப் ஹாப் தமிழா ஆதி, விஷால் நடித்த ’ஆம்பள’ என்ற திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருந்தார். இதனை அடுத்து அவர் ’இன்று நேற்று நாளை’, ’தனி ஒருவன்’, ’அரண்மனை 2’, ’கத்தி சண்ட’ உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராகவும் உருமாறினார். அதுமட்டுமின்றி ‘மீசைய முறுக்கு’ எனும் படத்தை, எழுதி, இயக்கி, இசையமைத்து கதாநாயகனாகவும் நடித்திருந்தார். 

‘மீசைய முறுக்கு’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘நட்பே துணை’, ‘நான் சிரித்தால்’, ‘சிவக்குமாரின் சபதம்’, ‘அன்பறிவு’ உள்ளிட்ட படங்களிலும் நாயகனாக நடித்திருந்தார். தற்போது ‘வீரன்’ மற்றும் ‘பி.டி. சார்’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

ஹிப்ஹாப் தமிழா ஆதி

இப்படி நடிகர், பாடகர், இசையமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட ஹிப் ஹாப் ஆதி தற்போது Ph.D. (ஆராய்ச்சிப் படிப்பு) முடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ஹிப் ஹாப் ஆதி, “சந்தோஷமான விஷயம் என்னென்னா நான் பிஹெச்டி முடிச்சிட்டேன். இது படிச்சு வாங்கின பட்டம்தான். அஞ்சரை வருஷம் ஆயிடுச்சு. இதை முடிக்கத்தான் நடிப்புக்கும் ஒரு சின்ன பிரேக் எடுத்தேன். இனிமேல் நீங்கள் என்னை டாக்டர் ஹிப் ஹாப் தமிழானு கூட அழைக்கலாம்.

‘Music Entrepreneurship’ என்ற பிரிவில் பிஎச்டி முடிச்சுருக்கேன். தனியார் கல்லூரிகளில் எல்லாம் கிடையாது, கோவை பாரதியார் அரசுப் பல்கலைக்கழகத்தில்தான் பிஹெச்டி பண்ணினேன். எனக்குத் தெரிந்து இந்தியாவிலேயே இந்தத் துறையில் பிஹெச்டி பட்டம் பெறுவது இதுதான் முதல் முறை என்று நினைக்கிறேன்” என்று கூறிய அவர் இனி தொடர்ந்து படங்களில் நடிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.