ராகுல் காந்தியை போனில் அழைத்த ஸ்டாலின்; அப்படி என்ன பேசினார்.?

ராகுல் காந்திக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் முதல்வர்

அவரை போனில் தொடர்பு கொண்டார்.

ராகுல் காந்திக்கு சிறைதண்டனை

’அதெப்படி எல்லா திருடர்களும் தங்களது பெயருக்கு பின்னால் ’மோடி’ என்ற பெயரை வைத்துக் கொள்கின்றனர்?’ என ராகுல் காந்தி கடந்த 2019ம் ஆண்டு பேசியதற்காக அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநில முன்னாள் அமைச்சர் புர்னேஷ் மோடி தொடர்ந்த அவதூறு வழக்கில், சூரத் நீதிமன்றம் இன்று இத்தகைய தீர்ப்பை வழங்கியுள்ளது.

இந்தநிலையில் ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலோட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், ஹிமாச்சல் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சாகு உள்ளிட்ட காங்கிரஸ் முதலமைச்சர்களும் ஒன்றிய பாஜக அரசை கடுமையாக சாடி வருகின்றனர்.

பிரியங்கா காந்தி ட்வீட்

இது குறித்து பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பதிவில், ‘‘உண்மையை கண்டு பயந்துபோன ஒன்றிய அரசின் முழு இயந்திரமும் ராகுல் காந்தியின் குரலை கொக்கி அல்லது வக்கிரம் கொண்டு ஒடுக்க முயல்கிறது. என் சகோதரன் ஒருபோதும் பயந்ததில்லை, பயப்படவும் மாட்டார். அவர் உண்மையைப் பேசி வாழ்ந்தார், தொடர்ந்து உண்மையைப் பேசுவார். நாட்டு மக்களின் குரலை தொடர்ந்து எழுப்புவோம். உண்மையின் சக்தியும், கோடிக்கணக்கான நாட்டு மக்களின் அன்பும் அவரிடம் உள்ளன’’ என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

பரம எதிரி அரவிந்த் கெஜ்ரிவால் சப்போர்ட்

அதேபோல் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், ‘‘பாஜக அல்லாத தலைவர்கள் மற்றும் கட்சிகள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை ஒழிக்க சதி நடக்கிறது. காங்கிரஸுடன் எங்களுக்கு கருத்து வேறுபாடுகள் உள்ளன, ஆனால் ராகுல் காந்தியை இப்படி அவதூறு வழக்கில் சிக்க வைப்பது சரியல்ல. கேள்வி கேட்பது பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் வேலை. நாங்கள் நீதிமன்றத்தை மதிக்கிறோம், ஆனால் தீர்ப்பை ஏற்கவில்லை’’ என அவர் தெரிவித்துள்ளார்.

கொதித்தெழுந்த

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டர் பதிவில், ‘‘விசிக சார்பாக சதி செய்த பாஜகவின் மலிவான போக்கை வன்மையாக கண்டிக்கிறோம். ராகுல் காந்தி எதிர்வரும் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்பதற்காகவே நீதிமன்றத்தைப் பயன்படுத்தி அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற குற்றச் செயல்கள் சங் பரிவாரங்களைத்தான் அம்பலப்படுத்தும். இந்திய மக்கள் அவர்களுக்கு சரியான நேரத்தில் பாடம் கற்பிப்பார்கள்’’ என கூறியுள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் பாய்ச்சல்

இந்தநிலையில் ராகுல்காந்தியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘‘களங்கப்படுத்தும் நோக்கத்துடன் தான் பேசவில்லை என்று கூறிய பின்பும், ராகுல் காந்திக்கு சிறைதண்டனை விதித்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் கடும் கண்டனத்திற்குரியது.

எதிர்க்கட்சிகளை குறிவைக்கும் பாஜக இப்போது ஜனநாயக உரிமைகளை நசுக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது, இதுபோன்ற அட்டூழியங்கள் முடிவுக்கு வரும். சகோதரர் ராகுல் காந்தியுடன் பேசி எனது ஒற்றுமையை தெரிவித்தேன். இறுதியில் நீதி வெல்லும் என்று நான் நம்புகிறேன்’’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.