எம்ஜிஆர்-க்கு துரோகம் செய்யும் இபிஎஸ்… அடிப்படையை மாற்றுகிறார் – டிடிவி தடாலடி!

TTV Dinakaran Slams Edappadi Palanisamy: அதிமுகவின் இயக்கத்தை வழிநடத்த தொண்டர்கள்தான் முக்கியமானவர்கள் என்ற அடிப்படையில் கட்சியின் பொதுச்செயலாளரை தொண்டர்களால் மட்டும்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் அதிமுகவை நிறுவிய எம்ஜிஆர், அதற்கான விதியை கொண்டுவந்த நிலையில், அதனை மாற்றி துரோக செயலில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டு வருவதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். 

திருவாரூரில் டிடிவி தினகரன் நேற்று (மார்ச் 23) செய்தியாளர்களை சந்தித்தார். அதில் செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் பதிலளித்தார். இங்கு அதனை கேள்வி, பதில் வடிவில் காணலாம். 

கேள்வி: நேற்று சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: ஒருசிலரின் ஆணவம், அகங்காரம், பணத்திமிரால் ஜெயலலிதாவின் இயக்கம் மிகவும் பலவீனம் அடைந்து வருகிறது. கடந்த ஆறு ஆண்டுகாலமாக ஒருசில சுயநலவாதிகளால் தமிழ்நாடு பாழடைந்துவிட்டது. தீயசக்தி திமுக ஆட்சிக்கு வர காரணமாக இருந்தவர்கள்தான் இன்றைக்கு தவறான நடவடிக்கைகளில் சட்டமன்றத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

கேள்வி: அதிமுகவில் ஏற்பட்டுள்ள குழப்பம் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்க வாய்ப்பு இருக்கிறதா? 

பதில்: ஜெயலிலதாவுடைய கட்சி ஜெயலலிதாவுடைய தொண்டர்கள் ஒரு சிலருடைய இதுபோன்ற சுயநல தவறான பதவி வெறியால், நடக்கின்ற பதவி சண்டைகளை பார்த்து எல்லோரும் வருத்தத்தில் உள்ளார்கள். அவர்கள் எல்லாம் ஜெயலலிதாவின் உண்மையான இயக்கம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்தான் என்பதை உணருகின்ற காலம் வெகு விரைவில் வரும்.

கேள்வி: ராகுல் காந்தி சிறை தண்டனை குறித்து?

பதில்: நீதிமன்ற தீர்ப்பு குறித்து மேல்முறையீடு செய்ய வேண்டும்.

கேள்வி: பாஜக அதிமுகவினுடைய ஏற்பட்ட கருத்து மோதல் குறித்து?

பதில்: இன்னொரு கட்சியை பற்றி பேச நான் தயாராக இல்லை. ஆனால் துரோகிகள் குறித்து டெல்லியில் உள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள். சசிகலா  அம்மையாரையும் டிடிவி தினகரனையும் சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் சந்திப்பதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். மேலும் இரண்டு பேரும் இணைந்து செயல்படுவதாக ஓபிஎஸ் கூறியிருப்பது கூட்டணியாக செயல்படுவதை மேற்கோள் காட்டி இருக்கலாம்.

கேள்வி: அதிமுக பொதுக்குழு சம்மந்தமான நீதிமன்றத்தில் உள்ள வழக்கு குறித்து?

பதில்: துரோகிகள் குறித்து பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் தமிழ்நாட்டு மக்கள் அவர்களுக்கு சரியான தண்டனை கொடுப்பார்கள்.

எதற்கு அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி?

கேள்வி: பொதுக்குழுவில் போட்டியிட நான் தயாராக இருக்கிறேன் ஆனால் தொண்டர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஓபிஎஸ் கூறி இருக்கிறாரே?

பதில்: எம்ஜிஆர் காலத்தில் உள்ள  விதிதான் அது. அண்ணாவின் மறைவுக்குப் பிறகு திமுக ஆட்சிக்கு வர காரணமாக இருந்தவர் எம்ஜிஆர் தான். ஆனால் கருணாநிதி இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களைக் கொண்டு லட்சக்கணக்கான தொண்டர்கள் விருப்பத்திற்கு மாறாக எம்ஜிஆரை கட்சியை விட்டு நீக்கினார். 

ஆனால் எம்ஜிஆர் தனக்கு ஏற்பட்ட அநீதிக்கு எதிராக துரோகத்திற்கு எதிராக அண்ணா திமுகவை ஆரம்பித்தார். எந்த ஒரு நபரையும் குறிப்பிட்ட நபர்களின் ஆதரவைக் கொண்டு நீக்கக் கூடாது என்பதற்காக தான் குறிப்பாக பொதுச்செயலாளர் பதவியினை தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து தேர்ந்தெடுக்க வேண்டும் என அவர் அந்த விதியை கொண்டு வந்தார். 

ஆனால் எடப்பாடி பழனிச்சாமி எம்ஜிஆர் கொண்டு வந்த விதியை எல்லாம் மாற்றி பொதுத் செயலாளர் தேர்தலில் போட்டியிட 20 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு தேவை எனவும் மாற்றியுள்ளார். இதற்கெல்லாம் அடிப்படை காரணம் சுயநலம். பதவி வெறி. பணத்திமிர். அகங்காரத்தால் ஜெயலலிதாவின் கட்சி இன்றைக்கு வீழ்ச்சி அடைந்து வருகிறது. காலம் சரியான வகையில் தீயவர்களுக்கு தீர்ப்பு வழங்கும். துரோகம் செய்தவர்களுக்கு வெகு விரைவில் மக்களும் தொண்டர்களும் தீர்ப்பு வழங்குவார்கள், என்றார்.

மேலும் பேசிய அவர், “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. ஈரோடு இடைத்தேர்தலில் அண்ணா திமுக இரட்டை இலை சின்னம் கிடைத்த போதிலும் தோல்வி அடைந்தது. இருப்பினும் 20 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அதிமுக தோல்வியடையும் என்று நினைத்தோம். ஆனால் வாக்கு வித்தியாசம் 67 ஆயிரத்தை தாண்டி உள்ளது. எதிர்க்கட்சியான அதிமுக ஈரோடு தொகுதி தங்களது கோட்டை என்று கூறி கோட்டைவிட்டுள்ளது” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.