`கூடுதலாக ஒரு கோடி உறுப்பினர்கள்' – ஸ்டாலின் டார்கெட் சாத்தியமா?!

தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மார்ச் 22-ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்றது. மறைந்த தி.மு.க தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் நூற்றாண்டை கொண்டாடுவது குறித்து இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3-ம் தேதி தேசிய தலைவர்களை அழைத்து, நாடே திரும்பிப் பார்க்கும் வகையில் திருவாரூரில் பிரமாண்ட நிகழ்ச்சி நடத்த முடிவெடுத்திருக்கிறார்கள். அதில் மிக முக்கியமாக புதிதாக ஒரு கோடி தொண்டர்களை தி.மு.க-வில் இணைப்பது என்ற திட்டத்தையும் வகுத்திருக்கிறார்கள். ஏப்ரல் 3-ம் தேதி தொடங்கி ஜூன் 3-ம் தேதி இந்த இலக்கை அடைவது என்றும் முடிவெடுத்திருக்கிறார்கள். துண்டறிக்கைகள், திண்ணைப் பிரச்சாரங்கள் மட்டுமின்றி வீடு தோறும் சென்று புதிய உறுப்பினர்களை சேர்க்கவும், முகாம்கள் அமைத்து அதன் மூலம் புதிய உறுப்பினர்களை சேர்க்கவும் தி.மு.க திட்டமிட்டுள்ளது.

ஸ்டாலின் – தி.மு.க மா.செ கூட்டம்

பொதுவாக எல்லா கட்சிகளும் அதன் தலைவர்கள் பிறந்தநாளில் இத்தகைய தீர்மானங்களை நிறைவேற்றுவது நடைமுறையாக இருந்தாலும், ஒரு கோடி என்று பெரும் இலக்கு நிர்ணயித்திருப்பது ஏன் என்பது பற்றி அறிவாலய வட்டாரத்தில் விசாரித்தோம்.

“தமிழ்நாட்டில் இதுவரை அ.தி.மு.க-தான் ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட மாபெரும் இயக்கம் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்டே இருக்கிறது. உண்மையில் ஒன்றரை கோடி உறுப்பினர்கள் இருக்கிறார்களா இல்லையா என்பது தெரியாது. அப்படி ஒரு பெயரை மக்கள் மனதிலேயே பதிய வைத்துவிட்டார்கள். ஆனால் தி.மு.க ஆளுங்கட்சியாக இருக்கும்போதும் சரி, எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் சரி, இவ்வாறு உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறிப்பிட்டு கட்சியை அடையாளப்படுத்தியதே கிடையாது.

அண்ணா அறிவாலயம்

தற்போது ஒரு கோடி தொண்டர்களை புதிதாக இணைக்க வேண்டுமென்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவெடுத்திருப்பது, முழுக்க தலைவரின் விருப்பம். தி.மு.க-வை வலுப்படுத்துவது என்ற நோக்கம் இதில் இருந்தாலும், அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சி பெயரை ஏற்படுத்துவதும் இதில் இருக்கிறது. கலைஞரின் நூற்றாண்டில் அவருக்குச் செய்யும் மிகப்பெரிய பெருமையாக இதுவே இருக்க முடியும் என்று தலைவர் நினைக்கிறார்” என்றனர்.

தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடிப்பேர் என்றால் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஏறத்தாழ 50,000 பேரை புதிதாக இணைக்க வேண்டியிருக்கும். தமிழகத்தில் எந்த தொகுதியை எடுத்தாலும் ஏற்கெனவே 2 திராவிட கட்சிகளும் பெரும் உறுப்பினர் எண்ணிக்கையை வைத்திருக்கின்றன. அதுபோக தி.மு.க கூட்டணி கட்சிகள், அ.தி.மு.க கூட்டணி கட்சிகள் மற்றும் பல சிறிய கட்சிகள் பகுதிக்கு ஏற்ப உறுப்பினர்களை வைத்திருக்கின்றன. இதுபோக தமிழ்நாட்டில் தேர்தலில் அரசியலில் பங்கெடுக்காத இருநூற்று சொச்சம் அமைப்புகள் இருக்கின்றன.

அதையும் தாண்டி தமிழ்நாட்டில் சராசரி வாக்குப்பதிவே ஒரு தொகுதிக்கு 75%-க்கும் குறைவாகத்தான் இருக்கிறது. வாக்களிக்கவே விரும்பாத 25% மக்கள், எந்த கட்சியிலாவது உறுப்பினர்களா இருப்பார்களா என்பதும் சந்தேகத்திற்குரியதே. இவற்றையெல்லாம் கூட்டிக் கழித்துவிட்ட பிறகு, புதிதாக ஒவ்வொரு தொகுதியிலும் 50,000 பேரை சேர்க்க வேண்டுமென்ற தி.மு.க தலைமையின் உத்தரவு மாவட்ட செயலாளர்களுக்கு பெரும் சவாலான ஒன்றே.

ஸ்டாலின் – திமுக மா.செ கூட்டம்

2 மாதங்களில் இது சாத்தியம்தானா என்பது குறித்து தி.மு.க செய்தித் தொடர்பாளர் தமிழ் கா.அமுதரசன், “தி.மு.க ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, கட்டங்களை அலசி ஸ்டாலின் முதல்வராக முடியாது என்றனர். ஆட்சி அமைந்த பிறகு கலைஞர் மாதிரி இருக்க முடியாது என்றனர். ஆனால் இன்றைக்கு வடமாநிலங்களில் இருப்பவர்கள் கூட சுட்டிக்காட்டும் அளவுக்கு ஸ்டாலினின் ஆட்சிமுறை பேசப்படுகிறது. 2 ஆண்டுகளில் பெண்கள் நலன் சார்ந்து தி.மு.க அரசு செயல்படுத்திய திட்டங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. எனவே தி.மு.க-வில் இணைய வேண்டுமென்ற ஆர்வம் பெண்கள் மத்தியிலும் கட்சி சாராதவர்கள் மத்தியிலும் அதிகரித்திருக்கிறது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு பலர் அதிமுக-வில் இருந்து விலகி தி.மு.க-வில் இணைந்து வருகின்றனர். எனவே 2 மாதங்களில் 1 கோடி என்ற எண்ணிக்கையே குறைவுதான்” என்றார்.

சீனியர் அமைச்சர்கள் அனைவரும் தங்களது மாவட்டங்களில் டார்கெட்டை கச்சிதமாக முடித்து, முதல்வரின் குட் புக்கில் யார் முதலில் டிக் வாங்குவது என போட்டிபோட்டு வியூகம் வகுக்கத் தொடங்கிவிட்டார்களாம். ஆனால் ஏற்கெனவே உறுப்பினர்களாக இருப்பவர்களையே மீண்டும் தூசிதட்டி, புதிய உறுப்பினர்கள் போல கணக்கில் கொண்டுவந்துவிடக்கூடாது என்றும் தலைமை அறிவுறுத்தியிருக்கிறதாம். அதனால் வட்டச் செயலாளர்கள் முதல் வார்டு பிரதிநிதிகள் வரை, கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் 2 மாதங்களுக்கு ஓட வேண்டியிருக்கும் என்கிறார்கள் உடன்பிறப்புகள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.