தண்ணீருக்கு மரியாதை செய்த.. தமிழ்நாடு நீர் பெருவிழா..!

“கல்வராயன் மலைப்பகுதியில் தண்ணீருக்காக நெடுந்தூரம் நடந்து சென்று தலையில் வரிசையாக குடங்களுடன் குழந்தைகளையும் பெண்கள் கஷ்டப்பட்டு தூக்கி வருவார்கள். மலைப்பகுதியில் உள்ள கிணறுகளில் ஆபத்தான முறையில்தான் மக்கள் தண்ணீர் எடுத்து வருவார்கள். கொஞ்சம் தவறினாலும் கிணற்றில் விழவேண்டிய அபாயம் இருந்தது. இது, தானம் அறக்கட்டளையால் மாற்றப்பட்டு 14 கிணறுகளை மேம்படுத்தி மேல்நிலை தொட்டி அமைத்து மக்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது” என்று அப்பகுதியை சேர்ந்த பெண் பேசும்போதும்,

நீர் குறித்த இதழ் வெளியீடு

‘தூத்துக்குடி மாவட்டத்தில் வைப்பாறு வடிநிலப்பகுதியை 18 வருடமாக தானம் அறக்கட்டளை உதவியோடு பாதுகாத்து மேம்படுத்தி வருகிறோம்” என்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் அனுபவங்ளை அந்த நிகழ்வில் பகிர்ந்தபோதுதான் தண்ணீரின் முக்கியத்துவம் எல்லோருக்குள்ளும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை அறிந்துகொள்ள முடிந்தது.

தண்ணீர் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் அரசும், அரசு சாரா அமைப்புகளும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினார்கள்.

கடந்த 3 நாட்களாக மதுரை தானம் அறக்கட்டளை வளாகத்தில் நடந்த ‘தமிழ்நாடு நீர் பெருவிழா-2023’ பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கருத்தரங்கின் நிறைவு விழா கடந்த 22- ம் தேதி நடைபெற்றது. 

நீர் நிலை

இந்த விழாவில் அரசுத்துறையை சேர்ந்தவர்கள், பல்வேறு துறைகளைச்சேர்ந்த வல்லுனர்கள், நீரியல் அறிஞர்கள், நீர் நிலை களப்பணியாளர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்தார்கள்.

பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த கிராம மக்கள், விவசாயிகள், கள செயற்ப்பாட்டாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சி தானம் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் மா.ப. வாசிமலை முன்னிலையில் நடந்தது.

மதுரை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் விவேகானந்தன் பேசும்போது “நாம் எல்லாவற்றையும் உருவாக்கி விடலாம். ஆனால், தண்ணீரை உருவாக்க முடியாது. அதன் மதிப்பை வரும் தலைமுறைக்கு எடுத்துக் கூறுவது நமது கடமை, நீர் கிடைக்க மரம் நட வேண்டும். சூழலை மாசுபடுத்தாமல் தண்ணீரை பாதுகாக்க வேப்டும். சிறிய நிலமாக இருந்தாலும் அதில் பண்ணைக்குட்டைகளை வெட்டி மழை நீரை சேமிக்க வேண்டும். நெல் விவசாயத்துக்கு செலவாகும் தண்ணீரில் பாதியளவு இருந்தாலே சிறுதானிய பயிர்களை பயிரிட்டு வளம் பெறலாம்” என்றார்.

விழாவில் கலெக்டர் அனீஷ் சேகர்

கலெக்டர் அனீஸ்சேகர் பேசும்போது, “நமது முன்னோர்கள் ஒழுக்கத்துடன் இருந்து நீர் நிலைகளின் தேவையறிந்து நமக்காக விட்டுச்சென்றதில் பலவற்றை நாம் இழந்து விட்டோம். இயற்கை வளங்களை நாம் கவனிக்க தவறியதால் இன்று நீர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நீர்நிலைகளுக்கு மனிதன் ஏற்படுத்திய கெடுதலால் நாம் இன்று பாதிப்புக்கு உள்ளானோம். இவற்றை சீர் செய்ய பல முயற்சிகள் எடுக்க வேண்டும். கிராம சபை மூலம் கூட்டு முயற்சி செய்ய வேண்டும். வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகை பிரச்சனை ஒருபுறம் இருந்தாலும், மாறிவரும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நாம் வாழும் பூமியை வருங்கால தலைமுறையினருக்கு நல்லபடியாக பாதுகாக்க வேண்டும். ரசாயாண உரம், பூச்சி மருந்துகள் முறையிலான விவசாயத்துக்கு பழகிவிட்ட நாம் அதிலிருந்து விடுபட்டு, மண்வளத்தை பாதுகாக்க இயற்கை விவசாயத்திற்கு மாற முயற்சிக்க வேண்டும். நீர்நிலைகளை காக்க தானம் அறக்கட்டளை பாடுவதை நான் அறிவேன்” என்றார்.

மூன்றுநாள் நடைபெற்ற இந்த கருத்தரங்கில், வட்டமேசை கலந்துரையாடல், சிறப்பு கூட்டங்கள், வயலக விவசாயிகளின் குழு விவாதங்கள், களஞ்சிய மகளிர் குழுக்கள், அரசு அதிகாரிகள், வங்கி அதிகாரிகள் கூறிய கருத்துக்களின் அடிப்படையில் இயற்றப்பட்ட தீர்மானங்களை கலெக்டர் முன்னிலையில் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

நீர் குறித்த இதழ் வெளியீடு

மதுரை நகர்புற நீர்வளம் மையம் மூலம் தயாரித்த ‘கண்மாய் சங்கிலித் தொடர்’ என்ற காலாண்டு இதழையும், தண்ணீர் குறித்து குழந்தைகள் கேட்ட கேள்விகளுக்கு சரியான பதில்களை தொகுத்து உருவாக்கப்பட்ட ‘நீர் கேள்விகள்’ என்ற இதழையும் கலெக்டர் வெளியிட, பல்வேறு வட்டாரங்களைச் சார்ந்த வளரிளம் பெண்கள், திணையோடி குழு மாணவ மாணவியர்கள் பெற்றுக் கொண்டனர்.

நீர், இயற்கைச் சூழல், மரம் வளர்ப்பு, கோயில் காடுகள் போன்ற தலைப்புகளில் நடத்தப்பட்ட கட்டுரை, ஓவியம், கவிதை, பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவ மாணவிகளுக்கு, பரிசும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

ஒரு சடங்காக இல்லாமல் தண்ணீர் தேவை குறித்த கவலையை வெளிப்படுத்தி, அதற்கான தீர்வையும் முன்மொழிந்து, செயல்படுத்துவதற்கான வழியையும் காட்டியுள்ளது தானம் அறக்கட்டளை 3 நாள்கள் நடத்திய தமிழ்நாடு நீர் பெருவிழா.!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.