“நாட்டுக்காக எந்த விலையையும் கொடுப்பேன்” – எம்.பி பதவி பறிக்கப்பட்ட ராகுல் காந்தி

புதுடெல்லி: “நாட்டுக்காக எந்த விலையையும் கொடுப்பேன்” என்று எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி கருத்து பதிவிட்டுள்ளார். அதில், ”இந்தியாவின் குரல் தொடர்ந்து ஒலிக்க வேண்டும் என்பதற்காக நான் போராடுகிறேன். அதற்காக எந்த ஒரு விலையையும் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

இந்தத் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ”அதிகாரத்தின் முன்பாக உண்மையைப் பேசியதற்காக ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். மக்களின் நலன்களுக்காகவே அவர் குரல் கொடுத்து வருகிறார். அவர் என்ன பெரிய தவறு இழைத்துவிட்டார்? இது பிற்படுத்தப்பட்டவர்கள் அல்லது முற்பட்ட வகுப்பினர் தொடர்பான வழக்கெல்லாம் கிடையாது” என குறிப்பிட்டுள்ளார்.

ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, டெல்லியில் உள்ள அவரது இல்லத்திற்கு அவரது தாய் சோனியா காந்தி விரைந்து வந்தார். இதையடுத்து, அவரது சகோதரி பிரியங்கா காந்தி வத்ராவும் விரைந்து வந்தார்.

முன்னதாக, கடந்த மக்களவைத் தேர்தலின்போது, கர்நாடகாவின் கோலார் பகுதியில் 2019 ஏப்ரல் 13-ம் தேதி நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “ஏன் அனைத்து திருடர்களும் மோடி என்ற குடும்பப் பெயரையே கொண்டுள்ளனர். நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என்று எல்லா திருடர்களின் பெயர்களும் மோடி என்றே முடிவது ஏன்?” என்று விமர்சித்திருந்தார்.

இது தொடர்பாக குஜராத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி, சூரத் தலைமை நீதித் துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தார். சுமார் 4 ஆண்டுகள் நீடித்த இந்த வழக்கில், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.15,000 அபராதமும் விதிப்பதாக மாஜிஸ்திரேட் எச்.எச்.வர்மா நேற்று தீர்ப்பளித்தார். இதையடுத்து, ராகுல் காந்தி தரப்பில் ஜாமீன் கோரப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட மாஜிஸ்திரேட் வர்மா, அவருக்கு 30 நாள் ஜாமீன் வழங்கி, அதுவரை தண்டனையை நிறுத்திவைக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில், இந்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதை அடுத்து ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மக்களவைச் செயலாளர் உத்பல் குமார் சிங் வெளியிட்ட அறிவிக்கையில், ”குற்றவியல் வழக்கில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்திக்கு எதிராக சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்துள்ளது. எனவே, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-ன் பிரிவு 102(1)(e)-ன் கீழ் கேரளாவின் வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினர் எனும் நிலையில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுகிறார். அவரது தகுதி நீக்கம் தீர்ப்பு வெளியான நாளில் (23.03.2023) இருந்தே அமலுக்கு வந்துள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. | வாசிக்க > எம்.பி பதவி பறிப்பு: ராகுல் காந்திக்கு முன் உள்ள வாய்ப்புகள் என்னென்ன?

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.