பாஜகவின் வளர்ச்சியை கூட்டணி கட்சியினர் விரும்பவில்லை: அண்ணாமலை விமர்சனம்

சென்னை: தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சியை கூட்டணி கட்சியினர் விரும்பவில்லை என மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

தமிழகத்தில் அதிமுக – பாஜகஇடையேயான கூட்டணி உரசல் நீடித்துவரும் நிலையில், சில நாட்களுக்கு முன்பு நடந்த மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று பேசி அண்ணாமலை பரபரப்பை ஏற்படுத்தினார்.

திடீர் டெல்லி பயணம்: இவ்வாறு பேசிய ஒருசில நாட்களிலேயே, கூட்டணி குறித்து பாஜகதேசிய தலைமைதான் முடிவெடுக்கும் என்றும், கூட்டணி பற்றி பேச தனக்கு அதிகாரம் இல்லை என்றும் அண்ணாமலை கூறினார்.

இந்நிலையில், நேற்று அவர் டெல்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு, பிரதமர் மோடி, அமித் ஷா,ஜே.பி.நட்டா ஆகியோரைச் சந்தித்து, கூட்டணி விவகாரம், கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தல், உட்கட்சி விவகாரம் குறித்து ஆலோசிக்க உள்ளார். டெல்லி செல்லும் முன்பு, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது:

தமிழகத்தில் நடக்கும் கொலை,கொள்ளை, பாலியல் உள்ளிட்ட குற்றங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், சமூக வலைதளங்களில் மட்டும் காவல்துறை முழு கவனம் செலுத்தி வருகிறது. தமிழகத்தில் 70 ஆயிரம் போலீஸார்இருக்கின்றனர். அவர்களை ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் கர்நாடகாவுக்கு தமிழக அரசுஅனுப்பி, அங்கே, நான் காவல்துறையில் பணியாற்றியபோது, யாரிடம் லஞ்சம் வாங்கி இருக்கிறேன் என்பதைக் கண்டுபிடித்து, அந்த நபரை தமிழகம் கூட்டிவந்து ஆளுங்கட்சியினர் பேசட்டும்.

நிரூபிக்கத் தயாரா? – தமிழகம் முழுவதும் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில், நானோ, என் குடும்பத்தினரோ ஏதாவது பத்திரப்பதிவு செய்திருக்கிறோமா? சொத்து வாங்கி இருக்கிறோமா? எனக்கு வருமானம் எங்கிருந்து வருகிறது? என்பதை திமுகவினர் கண்டுபிடித்து, என் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை நிரூபித்து காட்டுவார்களா?

கூட்டணிக் கட்சி தலைவர்கள் என் மீது விமர்சனம் வைப்பதை வரவேற்கிறேன். தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சியை அவர்கள்விரும்பவில்லை என்பது இதிலிருந்து தெரிகிறது. அவர்கள் கட்சியின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது என கவலைப்படுகின்றனர்.

கூட்டணி விவகாரம்: கூட்டணிக் கட்சியாக இருந்தாலும்கூட, பாஜகவை வளர்க்கவேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். அப்படி நினைத்தால் அவர்கள் முட்டாள்கள். அதேபோல் நான் இன்னொரு கட்சியை வளர்க்க வேண்டும் நினைத்தால், நானும் முட்டாள்தான். நேரமும் காலமும் வரும்போது கூட்டணியா? தனித்துப் போட்டியா? என்பது குறித்து தெரிவிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, ஆளுநர் ஆர்.என்.ரவியும் நேற்று டெல்லி புறப்பட்டு சென்றுள்ளது, பர பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.