“பாஜக-வின் பிராண்ட் அம்பாசிடரே ராகுல்தான்; அவர் பேசிக்கொண்டே இருந்தால் பாஜக வளரும்!" – அண்ணாமலை

2019-ல் தேர்தல் பிரசாரத்தின்போது மோடி தொடர்பாகப் பேசிய கருத்தால் அவதூறு வழக்குக்குள்ளான ராகுல் காந்திக்கு, குஜராத்தின் சூரத் நீதிமன்றம் நேற்று, 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது. அதன் தொடர்ச்சியாக, அவரின் எம்.பி பதவியும் பறிக்கப்பட்டிருக்கிறது.

ராகுல் காந்தி

இந்த நிலையில், தமிழ்நாடு பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, `ராகுல் காந்திதான் பா.ஜ.க-வின் பிராண்ட் அம்பாசிடர்’ என்றும், `அவர் பேசிக்கொண்டே இருந்தால் பா.ஜ.க வளர்ந்துகொண்டே இருக்கும்’ என்றும் விமர்சனம் செய்திருக்கிறார்.

தூத்துக்குடியில் இன்று நடைபெற்ற பா.ஜ.க செயல் வீரர்கள் கூட்டத்தில் அண்ணாமலை கலந்துகொண்டார். அப்போது கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, “பிரதமர் நரேந்திர மோடி ஒன்பது ஆண்டுக்கால ஆட்சியை முடித்து பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். இந்த ஆட்சி, தொடாத இடங்களையும் தொட்டுவிட்டது. தேர்தலுக்காக மட்டும் வாக்காளர்களைக் குறிவைத்து ஆட்சி நடந்ததை மாற்றியமைத்தது மோடியின் ஆட்சி. தமிழகத்தில் களம் மாறிவிட்டது. 30 ஆண்டுகளாக கூண்டில் இருந்த கிளி, தற்போது கூண்டைவிட்டு வெளியே வரத் தயாராகிவிட்டது, பறப்பதற்கும் சக்தி வந்துவிட்டது.

பாஜக கூட்டம்

பா.ஜ.க ஆட்சி அமையும் என்ற நம்பிக்கை மக்களிடத்தில் வந்துவிட்டது. தமிழகத்தில் புரட்சிக்கான நேரம் தயாராகிவிட்டது. பா.ஜ.க-வினர் கூனி குறுகி வாக்கு கேட்க வேண்டிய நிலை எங்கும் இல்லை, நெஞ்சை நிமிர்த்தி வாக்கு கேட்கலாம். இஸ்லாமியர்களுக்கு காங்கிரஸ் ஆட்சியைவிட, பா.ஜ.க ஆட்சியில் 45 சதவிகிதத்துக்கும் அதிகமாகவே அரசு திட்டங்கள் செய்திருக்கிறது.

மாற்றத்துக்கான நேரம் வந்துவிட்டது. நம்முடைய பாதை தனிப்பாதை, சிங்கப்பாதை. தி.மு.க அமைச்சர்கள் அனைவரும் ஊழல் அமைச்சர்கள். தூத்துக்குடியைச் சேர்ந்த அமைச்சர் கீதா ஜீவன், அழுகிய முட்டை வாங்கி ஊழல் செய்து வருகிறார். `அண்ணாமலை வந்தால் அவரை ஒரு கை பார்த்து விடுவோம்’ என்று கூறினார்கள் தி.மு.க-வினர். இப்போது நான் வந்திருக்கிறேன். ஏதாவது செய்யுங்கள் பார்ப்போம். அப்பா பெயரைச் சொல்லி அரசியல் செய்யும் அமைச்சர் கீதா ஜீவனுக்கே இவ்வளவு இருந்தால், பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்கள் சுயமாக இருக்கக் கூடியவர்கள். தனியாகப் போராடி ஜெயிக்கக் கூடியவர்கள் எங்களுக்கு எவ்வளவு இருக்கும்.

அண்ணாமலை

மோடி என்ற பெயர் உடையவர்கள் அனைவருமே கொள்ளையர்கள் என்று ராகுல் காந்தி பேசியது தொடர்பாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இதன் காரணமாக அவர், மக்கள் பிரதிநிதி பதவியில் இருக்கும் தகுதியை இழக்கிறார். இந்தியாவின் உச்சபட்ச காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்த ராகுல் காந்திக்கும் இந்த உத்தரவு பொருந்தும். அரசை எதிர்த்து கார்ட்டூன், மீம்ஸ் போடுபவர்கள் அனைவருமே நள்ளிரவு இரண்டு மணிக்கு கைதுசெய்யப்படும்போது, ராகுல் காந்திக்கும் இந்தச் சட்டம் பொருந்தும்.

ராகுல் காந்தி இந்த விவகாரத்தை அவராகவே ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். ‘சௌகிதார்’ என்ற விவகாரம் தொடர்பாக பேசும்போது நீதிமன்றம் ராகுல் காந்தியை ஏற்கெனவே எச்சரித்தது. சட்டம் அனைவருக்கும் பொருந்தும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. சாதாரண மனிதனுக்கும் ராகுல் காந்திக்கும் சட்டம் பொருந்தும் என்பதே சரி.

ராகுல் காந்தி

நாடாளுமன்ற சபாநாயகர் இந்த நடவடிக்கையை எடுக்காமல் இருந்திருந்தால் இதற்கு முன் எடுத்த நடவடிக்கை குறித்து மக்கள் கேள்வி கேட்பார்கள். இந்த விவகாரத்தில் ராகுல் காந்திக்கு பல வழிகள் இருக்கின்றன. சபாநாயகர் எடுத்த நடவடிக்கையில் எந்தவிதத் தவறும் இல்லை. ராகுல் காந்தி கட்டாயம் தேர்தலில் போட்டியிட வேண்டும்.

அண்ணாமலை

பா.ஜ.க-வின் பிராண்ட் அம்பாசிடரே ராகுல் காந்திதான், ராகுல் காந்தி அனைத்து தேர்தலிலும் போட்டியிட வேண்டும் என்பதே எனது விருப்பம். ‘பாரத் ஜோடோ யாத்திரை’க்குப் பிறகு பல குழப்பத்தை ராகுல் காந்தி ஏற்படுத்தியிருக்கிறார். ராகுல் காந்தி பேசிக் கொண்டே இருந்தால்தான் பா.ஜ.க வளர்ந்து கொண்டே இருக்கும். 2024-ல் ராகுல் காந்தி புது ஸ்லோகனோடு வரவேண்டும் என்பதே எங்களது விருப்பம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.