சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ. 200 மாணியம்.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. இதில், பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றி அமைக்கும் நடைமுறையையும், எரிவாயு சிலிண்டர் விலையை மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை மாற்றியமைக்கும் நடைமுறையும் பின்பற்றப்படுகிறது.

அந்த வகையில் இந்த மாதம் (மார்ச்) சென்னையில் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 50 உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி ரூ. 1068.50 ஆக இருந்த சமையல் சிலிண்டர் விலை தற்போது ரூ. 1,118.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. 9.6 கோடி குடும்பங்கள் பயன்பெறும் வகையில் ரூ. 200 மானியம் வழங்குவதைத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், வீட்டு உபயோக சமையல் கேஸ் சிலிண்டருக்கு ரூ.200 மானியம் வழங்கப்படுவதை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிவித்தார்.

பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் 9.59 கோடி பேர் ஆண்டுக்கு 12 சிலிண்டர்களை பெற்று வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் ஒரு சிலிண்டருக்கு ரூ. 200 மானியம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மானியம், தகுதியுள்ள பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான மொத்த செலவு 2022-23 நிதியாண்டில் ரூ.6,100 கோடியாகவும், 2023-24ல் ரூ.7,680 கோடியாகவும் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகளுக்கு மட்டும் தற்போது சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.200 மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மானியம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.