ராகுல் காந்தி தகுதி நீக்கம்: உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல்!

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 இன் பிரிவு 8(3) படி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு நேற்று முன் தினம் இரண்டு ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதைத் தொடர்ந்து நேற்று மக்களவைச் செயலகம் ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவி தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அறிவித்தது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 இன் பிரிவு 8(3) படி, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எந்தக் குற்றத்திற்காகவும் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டால், அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவார் என்ற விதி உள்ளது. அதன்படி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிவு 8-இன் கீழ் தகுதிநீக்கம் செய்யப்படும் நபர்கள், தண்டனைக் காலம் நீங்கலாக 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. எனவே ராகுல் காந்திக்கு தண்டனைக் காலம் 2 ஆண்டுகளையும் சேர்த்து 8 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை நிலவுகிறது.

இந்நிலையில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 8இல் உட்பிரிவு 3ஐ ரத்து செய்ய உத்தரவிடக் கூறி கேரளாவைச் சேர்ந்த முரளிதரன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார்.

வழக்குகளில் தண்டனை பெற்ற உடனேயே தன்னிச்சையாக தகுதி நீக்கம் செய்யப்படுவதற்கான ஷரத்தை எதிர்த்து மனு அளித்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.