ராகுல் காந்தி தகுதி நீக்கம்: தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம்

சென்னை: நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் கூறியிருப்பதாவது:

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: இந்திய ஒற்றுமை பயணத்தின் மூலம் மக்களின் பேராதரவைப் பெற்ற ராகுல் காந்தியின் அரசியல் செயல்பாடுகளை எப்படியாவது முடக்க வேண்டும் என்ற முயற்சியில் தற்காலிகமாக பதவி பறிப்பை செய்திருக்கிறார்கள். ராகுல் காந்தியின் பதவி பறிப்புக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவிக்க இருக்கும் போராட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியினர் முழு அளவில் பங்கேற்க வேண்டும்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: ராகுல் காந்தியை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை. நாட்டு மக்கள் இதற்கெல்லாம் சேர்த்து பாஜக அரசுக்கு தண்டனை கொடுப்பார்கள்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: இது சர்வாதிகார அடக்குமுறையின் அறிவிப்பாகும். நாட்டை அறிவிக்கப்படாத அவசரநிலை நெருக்கடிக்குள் நெட்டித் தள்ளி வரும் மத்திய பாஜக அரசின் ஜனநாயகப் படுகொலையை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை. இத்தகைய ஜனநாயக விரோத, அராஜக, அச்சுறுத்தல் நடவடிக்கைகளை அனுமதிக்க இயலாது. இதற்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் வலுவான குரல் எழுப்ப வேண்டும்.

திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி: ஜனநாயகத்தின் கோட்பாடுகளை அவமதிக்கும் சக்திகளுக்கு எதிராக எங்களது குரல் தொடர்ந்து வலுவாக ஒலிக்கும். நாங்கள் ராகுலுடன் இருக்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

இதேபோல் சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மதிமுக தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ, மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.