குஜராத்தில் அடுத்த மாதம் நடக்கிறது ஆயிரம் ஆண்டு உறவை மீட்க சவுராஷ்டிரா – தமிழ் சங்கமம்: பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: ‘சவுராஷ்டிரா மக்களுக்கும், தமிழர்களுக்கும் இடையேயான ஆயிரம் ஆண்டு கால உறவை மீட்டெடுக்கும் வகையில் குஜராத்தில் அடுத்த மாதம் சவுராஷ்டிரா – தமிழ் சங்கமம் நிகழ்ச்சி சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிறு அன்று அகில இந்திய வானொலியில் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார். அதன் 99வது நிகழ்ச்சியில் நேற்று அவர் கூறியதாவது:

இறந்த பிறகு தங்கள் உறுப்புகளை தானம் செய்பவர்கள், அவற்றை பெறுபவர்களுக்கு கடவுளைப் போன்றவர்கள். நாட்டில் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. சொந்த மாநிலத்தில் தான் உடல் உறுப்புகளை தானம் செய்ய பதிவு செய்ய வேண்டுமென்ற நிபந்தனையை நீக்கி, நாட்டில் எங்கு வேண்டுமானாலும் தங்களை பதிவு செய்யும் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. அதே போல, உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கான வயது உச்ச வரம்பு 65 என்பதையும் நீக்க அரசு முடிவு செய்துள்ளது.

ஒரு இறந்த நபரின் உறுப்புகளை தானம் செய்வதன் மூலம் 9 நபர்களுக்கு உதவ முடியும். எனவே உறுப்பு தானம் செய்ய முன்வர வேண்டும். சில இடங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.  சமீபத்தில், வாரணாசி மற்றும் தமிழ்நாட்டிற்கு இடையேயான பழங்கால உறவை கொண்டாடும் விதமாக காசி-தமிழ் சங்கமம் நடத்தப்பட்டதைப் போல, குஜராத்தின் சவுராஷ்டிரா மற்றும் தமிழர்களுக்கு இடையேயான ஆயிரம் ஆண்டு கால உறவை மீட்டெடுக்க ‘சவுராஷ்டிரா- தமிழ் சங்கமம்’ குஜராத்தின் பல இடங்களில் வரும் ஏப்ரல் 17 முதல் 30ம் தேதி வரை நடக்க உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.  அடுத்த மாதம் 100வது மன் கி பாத் நிகழ்ச்சி நடக்க உள்ளதையொட்டி, அதற்கான கருத்துக்களை மக்கள் பகிர்ந்து கொள்ளுமாறு பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.