தமிழர்களின் பாரம்பரிய பெருமையை சொல்ல வேண்டும் என்றால் அதற்கு 2 நூற்றாண்டுகள் தேவைப்படும்; அமைச்சர் அன்பில் மகேஷ்

மதுரை: தமிழர்களின் பாரம்பரிய பெருமையை சொல்ல வேண்டும் என்றால் அதற்கு 2 நூற்றாண்டுகள் தேவைப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். மதுரை மாவட்ட பள்ளி கல்வி இயக்ககம் சார்பில் வைகை இலக்கிய திருவிழா இன்று மதுரை உலக தமிழ்ச்சங்க வளாகத்தில் நடந்தது. இதில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு வைகை இலக்கியத் திருவிழா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மூர்த்தி, மாவட்ட கலெக்டர் அனீஸ் சேகர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மதுரையில் நடந்து வரும் வைகை இலக்கிய திருவிழா தமிழக எழுத்தாளர்கள், கலைஞர்களை தூண்டும் விதமாக அமைய வேண்டும். உலக தமிழ்ச் சங்கம் உருவாகிய மதுரையில் வைகை இலக்கிய விழா நடத்துவதில் தமிழகம் பெருமை கொள்கிறது. கீழடி அகழாய்வு மூலம் தமிழ் சமூகம் பழமை வாய்ந்தது என்பதை வாய்மொழியாக கூறவில்லை. அறிவியல் பூர்வமாக நிரூபித்து உள்ளோம்.

தமிழகம் முழுவதும் வசிக்கும் மாணவர்கள், தமிழர்களின் வாழ்க்கை முறையை அறிய வேண்டும் என்றால் கீழடி அருங்காட்சியகத்துக்கு வாழ்நாளில் ஒரு முறை யாவது வந்து பார்க்க வேண்டும். தமிழர்களின் பாரம்பரிய பெருமையை சொல்ல வேண்டும் என்றால் அதற்கு 2 நூற்றாண்டுகள் தேவைப்படும்.

தமிழகத்தை பொறுத்தவரை திரை உலகில் மதுரையை சேர்ந்தவர்கள் தான் அதிகமாக உள்ளனர். மதுரை மாவட்டத்தில் எண்ணற்ற எழுத்தாளர்கள், படைப்பாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். எனவேதான் அவர்களை பெருமைப் படுத்தும் வகையில் வைகை இலக்கிய விழா நடத்தி உள்ளோம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.