1 முதல் 3ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு‘எண்ணும் எழுத்தும்’பயிற்சி முகாம் அறிவிப்பு

நெல்லை: கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் புதிய கல்வியாண்டிற்காக 1 முதல் 3ம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம் ஏப்ரல் 5ம் தேதியில் இருந்து நடக்கிறது. தமிழ்நாட்டில் தொடக்க நிலையில் பயிலும் மாணவர்களுக்கு எளிமையாக கற்கும் வகையில் கற்பித்தல் முறை பல்வேறு வடிவங்களில் மாற்றி அமைத்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக கொரோனாவால் 2 ஆண்டுகள் மாணவர்கள் நேரடி கல்வி பயில முடியாத சூழல் ஏற்பட்ட நிலையில், மாணவர்களின் கல்வி ஆர்வத்தை சீர்படுத்த 2022-23ம் கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 3ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் வரும் 2023-24ம் கல்வியாண்டிற்கான எண்ணும் எழுத்தும் சார்ந்த தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடத்திற்கான முதல் பருவ பாடப்பொருள் உருவாக்கப்பணி மேற்கொள்ளப்பட்டு முடிவடைந்துள்ளது. இதையடுத்து 1 முதல் 3ம் வகுப்பு கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் எண்ணும், எழுத்தும் சார்ந்த முதல் பருவத்திற்கான மாநில, மாவட்ட மற்றும் ஒன்றிய அளவிலான பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக தமிழ், ஆங்கிலம், கணிதப்பாடங்களுக்கு மாநில அளவில் முதன்மை கருத்தாளர்களுக்கான பயிற்சி, மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையில் உள்ள பில்லர் பயிற்சி மையத்தில் வருகிற ஏப்ரல் 5ம் தேதியில் இருந்து 8ம் தேதி வரை நடத்தப்படுகிறது.

பெயர் பட்டியலில் உள்ள தகுதி, ஆர்வமிக்க எண்ணும், எழுத்தும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் ஆசிரியர்கள், கற்பித்தலில் மிகுந்த ஈடுபாடுடன் செயல்படும் ஆசிரிய பயிற்றுநர்கள் மற்றும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன கல்வியாளர்கள் பயிற்சியில் கலந்து கொள்வதற்கு பயிற்சி தொடங்குவதற்கு முதல் நாள் இரவு 8 மணிக்குள் மையத்திற்கு செல்லும் வகையில் பணி விடுவிப்பு செய்து அனுப்ப சம்பந்தப்பட்ட மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார வள மைய அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

தொடர்ந்து மாவட்ட அளவிலான எண்ணும், எழுத்தும் பயிற்சி வகுப்புகள், ஏப்ரல் 10ல் ெதாடங்கி 12ம் தேதி வரை நடத்தப்படுகிறது. பின்னர் ஒன்றிய அளவிலான பயிற்சிக்கு திட்டமிட உரிய திட்டமிடல் கூட்டத்தை நடத்தி முடிவு எடுக்கவும், ஒன்றிய அளவிலான பயிற்சியை ஏப்ரல் 24 முதல் 26ம் தேதிவரை 1 முதல் 3ம் வகுப்பிற்கு கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் நடத்த மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.